சாம்பியன்ஸ் கோப்பை வென்ற ஜடேஜா.. நேராக சென்னை வந்து தோனியுடன் சந்திப்பு.. களைக்கட்ட போகும் ஐபிஎல்
சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரை இந்திய அணி வென்றது. இந்த போட்டியில் இந்திய அணி எப்போதும் இல்லாத அளவுக்கு நான்கு சுழற்பந்துவீச்சாளர்களை பயன்படுத்தியது. குறிப்பாக இந்திய அணியின் அனுபவ வீரரான ஜடேஜா பேட்டிங் வரிசையில் எட்டாவது இடத்தில் இருந்தது மிகப்பெரிய பலத்தை ரோகித் படைக்கு கொடுத்திருக்கிறது.
எனினும் ஜடேஜாவுக்கு பேட்டிங் செய்ய பெரிய வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும் பந்துவீச்சில் கட்டுக்கோப்பாக செயல்பட்டு விக்கெட்டுகளையும் எடுத்தார். அது மட்டுமல்லாமல் பீல்டிங்கில் ஜடேஜா மிகவும் முக்கிய பங்காற்றினார்.
இதன் காரணமாக இறுதிப்போட்டி முடிந்தவுடன் இந்திய அணி வீரர்களுக்கு வழங்கப்படும் சிறந்த பீல்டிங்கிற்கான விருது ஜடேஜாவுக்கு கொடுக்கப்பட்டது. இந்த நிலையில் சாம்பியன்ஸ் டிராபி முடிவடைந்த உடன் வெற்றி கொண்டாட்டத்தில் ஈடுபட்ட இந்திய வீரர்கள் தற்போது துபாயில் இருந்து நேரடியாக தாயகம் திரும்பி இருக்கிறார்கள்.
இதில் ஜடேஜா நேராக குஜராத் செல்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் சென்னை வந்து இறங்கி இருக்கிறார். சென்னை விமான நிலையத்தில் வருண் சக்கரவர்த்தி மற்றும் ஜடேஜா ஆகியோர் வந்து சேர்ந்தனர். இதை அடுத்து ஜடேஜா நேராக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தங்கி இருக்கும் ஹோட்டலுக்கு சென்று உள்ளார். அங்கு தோனியை ஜடேஜா சந்தித்து வாழ்த்து பெற உள்ளார்.
இதனை தொடர்ந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தற்போது ஐபிஎல் தொடருக்காக தயாராகி வருகிறது. இந்த பயிற்சி முகாமில் ஜடேஜா எந்த ஓய்வும் இன்றி சேரப் போகிறார். இது ரசிகர்களை ஆச்சரியம் அடைய வைத்திருக்கிறது. ஜடேஜா ஒரு வாரம் ஓய்வெடுத்துக் கொண்டு ஐபிஎல் தொடருக்கு நான்கு நாட்கள் முன்பு தான் வந்து சேர்வார் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் ஜடேஜா தோனியை வெற்றியுடன் வழி அனுப்ப வேண்டும் என்ற உத்வேகத்தில் ஓய்வு எல்லாம் தள்ளிப் போட்டுவிட்டு நேராக சிஎஸ்கே பயிற்சி முகாமுக்கு வந்து சேர்ந்திருக்கிறார். இதனால் சிஎஸ்கே அணி வீரர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.