சிஎஸ்கே அணிக்கு திரும்பிய வெளிநாட்டு வீரர்கள்.. குஷியில் ரசிகர்கள்..!

குட் நியூஸ்.. சிஎஸ்கே அணிக்கு திரும்பிய வெளிநாட்டு வீரர்கள்.. குஷியில் ரசிகர்கள்

சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களுக்கு ஒரு நற்செய்தி கிடைத்துள்ளது. கடந்த சில நாட்களாக விலகி இருந்த மதிஷா பதிரானா மற்றும் தீக்ஷனா மீண்டும் சிஎஸ்கே அணியில் இணைய உள்ளனர்.

சில நாட்கள் முன்பு அவர்கள் இருவரும் தங்கள் சொந்த நாடான இலங்கைக்கு விசா பெறுவதற்காக சென்று இருந்தனர். தற்போது அவர்கள் மீண்டும் சிஎஸ்கே அணியில் இணைய உள்ளனர். தற்போது சிஎஸ்கே அணி லீக் சுற்றில் மீதமுள்ள நான்கு போட்டிகளிலும் வென்றால் மட்டுமே ஐபிஎல் தொடரின் பிளே ஆஃப் சுற்றுக்கு உறுதியாக செல்ல முடியும் என்ற நிலையில் உள்ளது.

இந்த நிலையில் பதிரானா அணிக்கு திரும்பி இருப்பது நற்செய்தியாக அமைந்துள்ளது. அவர் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் வெறும் ஆறு போட்டிகளில் மட்டுமே விளையாடி 13 விக்கெட்களை வீழ்த்தி இருப்பது குறிப்பிடத்தக்கது. எப்போது பந்து வீசினாலும் விக்கெட்களை வீழ்த்தும் ஆற்றல் கொண்ட பதிரானா இல்லாததால் சிஎஸ்கே அணி தடுமாறும் நிலை இருந்தது.

சிஎஸ்கே அணியில் ஏற்கனவே வேகப் பந்துவீச்சாளர் முஸ்தாபிசூர் ரகுமான் விலகி இருக்கிறார். தீபக் சாஹர் காயத்தில் சிக்கி தொடரில் இருந்தே விலகும் நிலையில் இருக்கிறார். துஷார் தேஷ்பாண்டே காய்ச்சல் காரணமாக போட்டிகளில் ஆட முடியாத நிலையில் இருக்கிறார். அத்துடன் இலங்கைக்கு சென்று இருந்தால் பதிரானா இல்லாத நிலையில் கடந்த போட்டியில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியிடம் சிஎஸ்கே அணி தோல்வி அடைந்து இருந்தது.

அந்தப் போட்டியில் சிஎஸ்கே அணி 162 ரன்கள் எடுத்த நிலையில் பஞ்சாப் கிங்ஸ் அந்த ஸ்கோரை மிக எளிதாக சேஸிங் செய்து வெற்றி பெற்றது. ஒருவேளை அந்த போட்டியில் பதிரானா இருந்திருந்தால் பஞ்சாப் கிங்ஸ் கடைசி ஓவர் வரை போட்டியை எடுத்துச் சென்று இருந்திருக்கும். அவர் இல்லாத நிலையில் சிஎஸ்கே அணியால் எந்த அழுத்தமும் கொடுக்க முடியவில்லை.

அவர் இப்போது மீண்டும் அணிக்கு திரும்பி இருப்பதால் அடுத்த நான்கு போட்டிகளிலும் சிஎஸ்கே அணி வெற்றி பெறக்கூடிய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. சிஎஸ்கே அணி அடுத்து பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக தரம்சாலா மைதானத்தில் விளையாட உள்ளது. அந்தப் போட்டியில் பதிரானா பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.