சென்னை டெஸ்ட்டில் முதல் நாளில் இங்கிலாந்திடம் தோற்றது இந்தியா…!

100 வது போட்டியில் 100 அடித்த ஜோ ரூட்.

இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இடம்பெற்றுவரும் 1 வது டெஸ்ட் போட்டியில் முதலில் ஆடும் இங்கிலாந்து அணி இன்றைய முதல் நாள் நிறைவில் வலுவான நிலையில் காணப்படுகின்றது.

இங்கிலாந்து அணித்தலைவர் ஜோ ரூட் க்கு இது 100 வது டெஸ்ட் போட்டியாக அமைந்துள்ள நிலையில் அற்புதமான சதம் விளாசி அசத்தியுள்ளார்.

இலங்கை மண்ணில் 2 டெஸ்ட் போட்டிகளிலும் சதம் மற்றும் இரட்டை சதம் அடித்து அசத்திய ரூட், இப்போது இந்தியாவிலும் தன் கணக்கை சதத்துடன் ஆரம்பித்துள்ளார்.

இங்கிலாந்து அணி 63 ஓட்டங்களை பெற்ற நிலையில் 2 விக்கெட்களை இழந்தாலும், அதன் பின்னர் இந்திய பந்து வீச்சாளர்கள் இங்கிலாந்தின் விக்கெட்டை வீழ்த்துவதற்கு கடுமையாக போராடினார்கள்.

சுழல் பந்து வீச்சுக்கு சாதகமான இந்திய ஆடுகளத்தில் இங்கிலாந்து வீரர்கள், அஷ்வின் போன்ற முதல்தர சுழல்பந்துவீச்சாளரது சொந்த மைதானத்திலேயே அவரை திக்குமுக்காட செய்தது பாரட்டத்தக்கதே.

ஆரம்ப வீரர் டொம் சிப்லி மற்றும் அணித்தலைவர் ஜோ ரூட் ஆகியோர் 3 வது விக்கெட்டில் 200 ஓட்டங்களை பெற்றமை குறிப்பிடத்தக்கது.

2 செஷன்களாக விக்கெட்டுக்களை வீழ்த்த தடுமாறிக் கொண்டிருந்த இந்தியாவுக்கு போட்டி நிறைவுக்கு வருவதற்கு 3 பந்துகள் இருந்த நிலையில் டோம் சிப்லியை, பூம்ரா இறுதி ஓவரில் LBW முறைமூலம் வீழ்த்தி கொஞ்சமா தெம்பூட்டினார்.

இன்றைய நாள் நிறைவில் இங்கிலாந்து அணி 3 விக்கெட்களை மட்டும் இழந்து 263 ஓட்டங்கள் எனும் வலுவான நிலையில் காணப்படுகின்றது.

ஆரம்ப வீரராக களம் வந்த சிப்லி இறுதி ஓவர்வரை 6 மணிநேரமும் 22 நிமிடங்களும், மொத்தமாக 286 பந்துகளை எதிர்கொண்டு 12 பவுண்டரிகள் அடங்கலாக 87 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்து சுழல்பந்தை எப்படி எதிர்கொள்வதென்று அற்புதமான பாடத்தை எல்லா வீரர்களுக்கும் புகட்டி சென்றார்.

 

 

 

 

 

 

 

ஆயினும் ஜோ ரூட் இலங்கைக்கு மட்டுமல்ல இந்தியாவுக்கும் வில்லன் என்பதை நிரூபித்துக் கொண்டிருக்கின்றார், இன்றைய நாள் நிறைவுக்கு வரும்வரை ஆட்டம் இழக்காது லாவகமாக 128 ஓட்டங்களைக் குவித்துள்ளார்.

2021 இல் ரூட் 3 போட்டிகளில் 3 சதம் விளாசித்தள்ளியுள்ளமையும் பாராட்டத்தக்கதே .

*விராட் கோஹ்லி தலைவராக பொறுபேற்ற சிட்னி டெஸ்ட்டில் 2014 ஆண்டில் இந்திய முதல் நாளில் மூன்று அல்லது 3 க்கும் குறைவான விக்கெட்களை கைப்பற்றியது, அதற்கு பின்னர் இன்று இங்கிலாந்துக்கு எதிராக மோசமான ஒரு நாளாக இந்தியாவுக்கு அமைந்துள்ளது.