செரீனா வில்லியம்ஸ்: உணர்ச்சிப் பெருக்குடன் விடைபெற்றார் ‘ராணிகளின் ராணி’

செரீனா வில்லியம்ஸ்: உணர்ச்சிப் பெருக்குடன் விடைபெற்றார் ‘ராணிகளின் ராணி’

நியூயார்க்கில் பரபரப்பான இரவில் ஆஸ்திரேலியாவின் அஜ்லா டோம்ஜனோவிச்சிடம் தோல்வியடைந்த பிறகான உணர்ச்சிகரமான சூழலுக்கு நடுவே, செரீனா வில்லியம்ஸ் டென்னிஸ் ஆட்டதுக்கு விடை கொடுத்தார்.

ஒற்றையர் பிரிவில் 23 கிராண்ஸ்லாம் வெற்றிகளைப் பெற்ற அவருடைய 27 ஆண்டுக்கால தொழில்முறை டென்னிஸ் வாழ்வில் இதுவே தனது இறுதிப் போட்டியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. செரீனா, டென்னிஸ் விளையாட்டில் அனைத்து காலத்திலுமான மாமனிதர் (Greatest of all time) என்ற முத்திரையைப் பெற்றவர்.

அமெரிக்க ஓபன் போட்டியில் அவர், 7-5 6-7 (4-7) 6-1 என்ற கணக்கில் தோல்வியடைந்த பிறகு, அவர் கண்களில் கண்ணீர் வழிந்தது.

ஆர்தர் ஆஷ் அரங்கத்தில் அவர் டென்னிஸ் கோர்ட்டை விட்டு வெளியேறியபோது கிட்டத்தட்ட அனைவருமே எழுந்து நின்றனர். அவர் அனைவரிடமும் விடைபெற்று கையசைத்த போது, ‘சிம்ப்லி தி பெஸ்ட்’ என்ற பாப் பாடல் அரங்கை அதிர வைத்தது.

இந்த வார ஆட்டத்தோடு ஓய்வு பெறுவது குறித்து மறுபரிசீலனை செய்வீர்களா எனக் கேட்டபோது, “நான் இதில் என் வழியில் நன்றாக விளையாடி இருக்கிறேன். இருப்பினும் இந்த ஆண்டில் சற்று விரைவாகவே தொடங்கியிருக்க வேண்டும். ஓய்வு பெறுவதை மறுபரிசீலனை செய்வது குறித்துச் சிந்திக்கவில்லை. இருப்பினும் என்ன நடக்கும் என்பதைச் சொல்லிவிட முடியாது!” என்று கூறியுள்ளார்.

அரங்கின் நடுவிலேயே அவரிடம் எடுக்கப்பட்ட பேட்டியில் உணர்ச்சிவசப்பட்டார். பல ஆண்டுகளாகத் தனக்கு ஆதரவளித்த குடும்பத்தினர், பார்வையாளர்கள், உலகம் முழுவதுமுள்ள ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

1995ஆம் ஆண்டு 14 வயதில் தனது முதல் தொழில்முறை போட்டியில் விளையாடியவர், “பல தசாப்தங்கலாக என் பக்கத்தில் இருந்தமைக்காக இங்கே இருக்கும் அனைவருக்கும் நன்றி கூறுகிறேன். ஆனால், இவையெல்லாம் என் பெற்றோரிடமிருந்து தொடங்கியது. அவர்கள் அனைத்துக்கும் தகுதியானவர்கள்,” என்றார்.

மேலும், “வீனஸ்(சகோதரி) இல்லாவிட்டால் நான் செரீனா ஆகியிருக்க மாட்டேன். அதற்கு நன்றி வீனஸ்,” என்று கூறினார்.

நான்காவது சுற்றுக்குள் நுழைந்து ரஷ்யாவின் லியுட்மிலா சாம்சோனோவாவுடன் விளையாடப் போகும் டோம்ஜனோவிச், தன்னோடு போட்டியிட்ட செரீனாவை பாராட்டினார்.

செரீனா வில்லியம்ஸ் நீண்ட காலமாக டென்னிஸ் விரராக இருந்து வருகிறார். உலகின் மிகவும் அங்கீகரிக்கப்பட்ட விளையாட்டு நட்சத்திரங்களில் ஒருவரான அவருடைய அடையாளமாக டென்னிஸ் இருந்தது. வோக் என்ற பிரபல ஃபேஷன் பத்திரிகைக்கான கட்டுரையில் அவர் தனது ஓய்வு குறித்து அறிவித்தார்.

ஓய்வு என்ற சொல்லையே அவர் பயன்படுத்தவில்லை என்றாலும், விளையாட்டைத் தாண்டி “வளர்ந்து வருகிறேன்” என்று அவர் கூறினாலும், இந்த 15 நாட்களில் தொழில்முறை வாழ்வுக்கு முடிவு கொண்டு வருவதே அவருடைய திட்டம்.

இந்த வாரத்தில் அவர் ஆடிய ஒவ்வோர் ஆட்டத்திலும் அவர் “ராணிகளின் ராணி” என்று அறிமுகப்படுத்தப்பட்டார்.

செரீனா வில்லியம்ஸ் இந்தப் போட்டிக்கென பிரத்யேகமாக உருவாக்கிய பளபளப்பான ஆடையை அணிந்திருந்தார். இறுதி வரை, அவர் கூடியிருந்த சுமார் 24,000 பேரும் ரசிப்பதற்கான பரபரப்பான ஆட்டத்தை ஆடினார்.

40 வயதான அவர் நீண்ட காலமாகத் தனது சிறப்பான டென்னிஸை விளையாடினார். அவர் தனது டென்னிஸ் வாழ்வை நீட்டிக்கப் போராடினார்.

விளையாட்டின் மிகச் சிறந்த ஒருவருக்காகக் காத்திருப்பது, மொத்தக் கூட்டமும் காத்திருப்பது அச்சமற்ற விளையாட்டு வீரரையும் சோதித்துவிடும்.

விளையாட்டு வீரர்களுக்கான நுழைவாயிலில் வெண்கலப் பலகையில் பொறிக்கப்பட்டிருந்த, பில்லி ஜீன் கிங்கின் புகழ்பெற்ற “அழுத்தம் ஒரு சலுகை” என்ற வாசகத்தைத் தொட்டுப் பார்த்த பிறகு முதலில் வந்த வில்லியம்ஸ், கோர்ட்டுக்கு வெளியே டோம்ஜனோவிச்சோடு பேசிக் கொண்டிருந்தார்.

முதல் செட்டில் பதற்றத்தைக் காட்டினார். டோம்ஜனோவிச் தன் எதிராளியின் சர்வீஸை முறியடித்தபோது அது வியப்பாகத் தெரியவில்லை. ஆனால், செரீனா வில்லியம்ஸ் அடுத்த செட்டில் 5-3 என முன்னேறினார்.

பிறகு அவருடைய மோசமான ஆட்டம் வெளிப்பட்டது. அவருடைய பிழைகள் டோம்ஜனோவிச் 5-4 என்று மீண்டும் முன்னேற முடிந்தது.

அதைத் தொடர்ந்து டோம்ஜனோவிச்சுக்கு நம்பிக்கை வரவே, 6-5 என்று முன்னிலை வகிக்கத் தொடங்கினார்.

உலகின் மிகப்பெரிய டென்னிஸ் அரங்கத்தில் இருந்த ரசிகர்கள் கூட்டம், வில்லியம்ஸ் பின் தங்குவதைப் பார்த்து சற்றே அடங்கிப் போனார்கள்.

ஆனால், அது நீண்ட நேரம் நீடிக்கவில்லை. அவருடைய எதிராளி செய்த சில தவறுகளால் செரீனா மீண்டும் தனது ஆட்டத்தைக் காட்டவே, அரங்கமே மீண்டும் ஆர்ப்பரிக்கத் தொடங்கியது.

பிபிசியில் அனலிஸ்டாகப் பணியாற்றிக் கொண்டிருக்கும் பிரிட்டிஷ் முன்னாள் வீராங்கனை லாரா ராப்சன், செரீனா கடந்த சில ஆண்டுகளில் அவர் விளையாடிய சிறந்த டென்னிஸ் ஆட்டம் என்று அதை விவரித்தார்.

செரீனா வில்லியம்ஸுக்கு தங்கள் உதவி தேவை என்றுணர்ந்த ரசிகர் கூட்டம் மொத்தமும் அவருடைய பெயரை கோஷமிட்டனர். 84 நிமிட செட் ஆடிய பிறகு, அவர் சீரான திட்டமிடப்பட்ட ஆட்டத்தின் மூலம் ஆட்டத்தை முன்னிலைக்குக் கொண்டு வந்தார்.

இப்போது ஆட்டத்தின் முடிவைத் தீர்மானிக்கும் செட் பாக்கி இருந்தது.

ஆனால், செரீனா வில்லியம்ஸ் சோர்வடைந்து காணப்பட்டார். இந்த வாரத்தில் அவருடைய ஆட்டத்தின் விளைவாக உடலுக்கு ஏற்பட்டிருக்கும் அழுத்தத்தைப் புரிந்துகொள்ள முடிகிறது. இறுதி ஆட்டத்தில் அவர் 5-1 என்று பின்தங்கினார்.

இந்த முடிவு தவிர்க்க முடியாததாகத் தோன்றியது. ஆனால், அவருடைய ஒட்டுமொத்த எதிர்ப்பையும் எதிர்கொண்ட பிறகே அது சாத்தியமானது.

15 நிமிடங்கள் நீடித்த இறுதி ஆட்டத்தில் அவர் வலையில் அடித்த ஃபோர்ஹேண்ட் ஷாட்டில் தோல்வியைத் தழுவினார். இது அவருடைய தொழில்முறை டென்னிஸ் வாழ்வின் இறுதிப் போட்டியை முடிவுக்குக் கொண்டு வந்தது. அதைத் தொடர்ந்து மிகப்பெரிய ஆரவாரத்துடன் ரசிகர்கள் எழுந்து நின்று தங்கள் மன எழுச்சியை செரீனா வில்லியம்ஸுக்கு வெளிப்படுத்தினர்..

ஜோனாதன் ஜுரேகோ
பிபிசி ஸ்போர்ட்