செருப்பு வாங்க கூட காசு இல்லாமலிருந்தேன் – ஷர்துல் தாகூர் உருக்கம்
இந்தியாவில் நடைபெற்று வரும் ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டிகளானது தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்த தொடரின் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற மும்பை மற்றும் விதர்பா அணிகளுக்கு இடையேயான இறுதிப்போட்டி கடந்த மார்ச் 10-ஆம் தேதி துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் முதலில் விளையாடிய மும்பை அணியானது தங்களது முதல் இன்னிங்சில் 224 ரன்களை குவித்தது.
அதனை தொடர்ந்து விளையாடிய விதர்பா அணி தங்களது முதல் இன்னிங்சில் 105 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. அதன் காரணமாக 119 ரன்கள் முன்னிலை பெற்ற மும்பை அணியானது தங்களது இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்து விளையாடி வருகிறது.
இந்நிலையில் தற்போது நடைபெற்று வரும் இந்த ரஞ்சி கோப்பை இறுதிப்போட்டியுடன் மும்பை அணியை சேர்ந்த 35 வயதான அனுபவ வீரர் தவால் குல்கர்னி ஓய்வு பெற இருக்கிறார்.
இதன் காரணமாக அவருடன் இருந்த சில நினைவுகளை மும்பை அணியை சேர்ந்த வீரர்கள் பகிர்ந்து கொண்டிருந்தனர்.
அந்த வகையில் பேசிய இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஷர்துல் தாகூர் கூறுகையில் : இந்த தருணம் எனக்கும் அவருக்கும் மிகவும் உணர்ச்சிகரமானது. என்னுடைய சிறுவயதிலிருந்தே நான் அவரை பார்த்து தான் வளர்ந்தேன்.
என்னுடைய பந்துவீச்சை மெருகேற்றியதில் அவருடைய உதவிகள் அதிகம். அதுமட்டும் இல்லாமல் நான் செருப்பு வாங்கக்கூட பணம் இல்லாத ஆரம்ப காலகட்டத்தில் சில ஜோடி ஷூக்களை எனக்காக கொடுத்து உதவியவர் அவர் தான்.
அதுமட்டும் இன்றி எனக்காக அவர் இன்னும் நிறைய உதவி செய்துள்ளார் என ஷர்துல் தாகூர் உருக்கமாக பேசியது குறிப்பிடத்தக்கது.
35 வயதான தவால் குல்கர்னி இந்திய அணிக்காக கடந்த 2014-ஆம் ஆண்டு அறிமுகமாகி 12 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்று 19 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
அதுதவிர்த்து 2016-ஆம் ஆண்டு டி20 போட்டிகளில் அறிமுகமாகி 2 போட்டிகளில் விளையாடி 3 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.