சொந்த மண்ணில் கிண்ணம் வெல்லுமா இங்கிலாந்து -யூரோ கிண்ண இறுதிப் போட்டிக்கு முன்னேறி வரலாறு படைத்தது..!

ஐரோப்பிய நாடுகளுக்கு இடையில் இடம்பெற்று வரும் ஐரோப்பாவின் மிகப் பெரிய கால்பந்து தொடரான ஐரோப்பிய கிண்ண கால்பந்து தொடரின் இறுதிப் போட்டிக்கான இரு அணிகளும் தேர்வாகி இருக்கின்றன.

ஏற்கனவே முதலாவது அரையிறுதியில் ஸ்பெயின் மற்றும் இத்தாலி அணிகள் விளையாடின .

ஸ்பெயின் மற்றும் இத்தாலி அணிகளுக்கு இடையிலான முதல் அரையிறுதிப் போட்டியில் பெனால்டி ஷூட் அவுட் அடிப்படையில் இத்தாலி அணி வெற்றிபெற்று இறுதிப் போட்டிக்கு தேர்வானது.

இதனைத் தொடர்ந்து இன்று இடம்பெற்று இரண்டாவது அரை இறுதியில் இங்கிலாந்து மற்றும் டென்மார்க் அணிகள் விளையாடின.

முதல் பாதி ஆட்டத்தில் இரண்டு அணிகளும் மூர்க்கத்தனமாக முட்டி மோதின, டென்மார்க் அணி தங்களுடைய முதலாவது கோலை அற்புதபான  ஃபிரீ கிக் மூலமாக பெற்று போட்டியில் 1-0 என்று முன்னிலை பெற்றது .

2000 ம் ஆண்டு யூரோ கிண்ண போட்டிகளின் Knockout போட்டியொன்றில் பிரான்ஸ் அணியின் ஜினடின் சிடேன் Direct Free-kick மூலமாக கோல் பெற்றுக்கொண்டதன் பின்னர், Knockout போட்டியொன்றில் Direct Free-kick மூலமாக கோல் பெற்ற பெருமை டென்மார்க் அணியின் Mikkel Damsgaard க்கு கிடைத்தது.

பின்னர் மிகப்பெரிய போராட்டத்தை வெளிப்படுத்திய இங்கிலாந்து அணி தங்களுக்கான முதல் கோலைப் பெற்றுக் கொண்டது , புக்காயோ சாகா பரிமாறிய பந்தை இங்கிலாந்து அணியின் பிரபல முன்கள வீரர் ரஹீம் ஸ்ரேலிங் கோல் காப்பாளர் நோக்கி லாவகமாக தட்டிவிட அந்த பந்தை டென்மார்க் அணியின்  கோல் காப்பாளர் அபாரமாக தடுத்தார் , அது டென்மார்க் அணியின் அணித்தலைவருடைய கால்களில் பட்டு  Own Goal ஆக மாறி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த ஐரோப்பிய கிண்ண தொடரில் பெறப்பட்ட 11ஆவது சொந்த கோலாக (Own Goal) இந்த கோல் பதிவு செய்யப்பட்டமை கவனிக்கத்தக்கது.

இதனால் முதல் பாதி ஆட்டம் ஒன்றுக்கு ஒன்று என்று  நிறைவுக்கு வந்தது.

இதனால் இரண்டாவது பாதி ஆட்டத்தில் இரண்டு அணிகளும் மேலதிகமாக ஒரு கோலை பெற்று போட்டியில் வெற்றி பெறுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டாலும் கூட இரண்டு அணிகளாலும் மேலதிகமாக கோல் எதனையும் பெற்றுக் கொள்ள முடியாத நிலையில் இரண்டாவது பாதி ஆட்டம் நிறைவுக்கு வந்தது, இதனால் போட்டி 1-1 என்ற அடிப்படையில் சமநிலையானது.

மேலதிகமாக வழங்கப்பட்ட 30 நிமிட ஆட்டம் இறுதிப் போட்டிக்கான அணியை தீர்மானிக்கவல்ல ஆட்டமாக சூடுபிடித்தது.

104 வது நிமிடத்தில் இங்கிலாந்துக்கு கிடைத்த தண்ட உதையை (Penalty) பயன்படுத்தி அணித்தலைவர் ஹரி கேன் இங்கிலாந்து அணிக்கு கோலைப் பெற்றுக்கொடுத்து இறுதிப் போட்டிக்கு அழைத்துச் சென்றார்.

இறுதியில் 2-1 எனும் கோல் அடிப்படையில் வெற்றி பெற்ற இங்கிலாந்து, இறுதிப் போட்டியில் பலம்பொருந்திய இத்தாலியை 11 ம் திகதி நள்ளிரவு சந்திக்கவுள்ளது.

1966 ம் ஆண்டுக்குப் பின்னர் 55 ஆண்டுகளுக்குப் பிறகு இங்கிலாந்து கால்பந்து அணி உலகின் முக்கிய கால்பந்து தொடரொன்றின் இறுதிப் போட்டிக்கு முன்னேறி வரலாறு படைத்துள்ளது.

England