ஜடேஜாவை நெருக்கடிக்குள் தள்ளப்போகும் CSK ரசிகர்கள் – தாக்குப்பிடிப்பாரா ?

ஒருவர் தன் சிம்மாசனத்தைத் தானே இன்னொருவருக்குத் தரும்போது, இன்னொரு பெரிய சிம்மாசனம் அவருக்குத் தானாய் உருவாகிறது!

சிம்மானசனத்தைக் கைப்பற்றி சிறப்பாகச் செயலாற்றி புகழடைவதை விட, இன்னொருவரால் அளிக்கப்படும் சிம்மாசனத்தில் அமர்ந்து பெயரெடுப்பது கடினம். அந்தச் சிம்மாசனத்தின் கால்களில், அதை அளித்தவரின் பெயரே எழுதியிருக்கும்.

தோனியின் இடத்தை நிரப்பலாம் ஆனால் அவரளித்த இடத்தை வாங்கிக்கொண்டு நம்மையதில் முழுதாய் நிரப்பி தனித்து தெரிவதென்பது தனிப்போராட்டமாகும்!

ஜடேஜா தன் உழைப்புக்கான, திறமைக்கான நியாயமான பெயரைப் பெற்றுக்கொள்ள தொடர்ச்சியாய் சிறப்பாய் நகர வேண்டியதிருக்கும்; சி.எஸ்.கே-வில் மட்டுமல்லாமல் இந்திய அணியிலுமே. இனி அவரின் ராக்-ஸ்டார் பிம்பத்தை உடைத்துக்கொண்டு அறிவான, முதிர்ச்சியான வீரரென்ற பிம்பத்தை உருவாக்க வேண்டியதிருக்கும். ஜடேஜாவின் பழைய பிம்பம் தற்போது ரிஷாப்பின் மீது படிந்துகொள்ளும்.

கால சுழற்சியில் இந்த பிம்ப மாற்றங்கள் இயல்பு. அந்தந்த காலச்சூழலுக்குத் தக்க பிம்பங்களை அவதானித்துப் பொருத்தியும், பொருந்தியும் கொள்வதுதான் சரியான உயரத்தில் வைக்கும்.

தோனி உருவாக்கி வைத்திருக்கும் பாதையில் பயணிப்பது எத்தகைய சுலபமோ, அதேயளவில் அவரிடத்தில் மற்றொரு வீரர் தன்னைத் தனித்து வெளிப்படுத்துவது கடினமானது. விமர்சகர்களும், இரசிகர்களும் அவ்வளவு சுலபத்தில் தனிஅடையாளத்தில் பிரகாசிக்க விட்டுவிட மாட்டார்கள்.

ஜடேஜா தன் வாழ்க்கையில் மீண்டுமொருமுறை அறிமுக வீரருக்கான நெருக்கடியிலும், நிரூபிக்க வேண்டிய கட்டாயத்திலும் நிற்கிறார். நெருக்கடிகளைக் கடந்து, தன்னை நிரூபித்து நிற்க வாழ்த்துக்கள்!

Richards