ஜப்னா கிங்ஸ் அணியின் தொடர் வெற்றிகளின் பின்னால் இருக்கும் மாஸ்டர் மைண்ட் ஹரி வாகீசன்- யார் இந்த ஹரி வாகீசன்..?

ஜப்னா கிங்ஸ் அணியின் தொடர் வெற்றிகளின் பின்னால் இருக்கும் மாஸ்டர் மைண்ட் ஹரி வாகீசன்- யார் இந்த ஹரி வாகீசன்..?

இலங்கையில் இடம்பெற்று வருகின்ற லங்கா பிரீமியர் லீக் போட்டி தொடர் தற்போது இறுதி கட்டத்தை எட்டி இருக்கிறது என்பது பெருமைப்படக் கூடிய விஷயமாக இருக்கிறது. ஐந்து அணிகளுக்கிடையில் ஒழுங்கமைக்கப்பட்ட இந்த ஆட்டங்கள் டிசம்பர் மாதம் 5ஆம் திகதி ஆரம்பமாகி எதிர்வரும் 23ஆம் திகதி ஹம்பாந்தோட்டை சூரியவெவ மைதானத்தில் இடம் பெறப்போகும் மாபெரும் இறுதிப்போட்டியுடன் இரண்டாவது அத்தியாயம் நிறைவுக்கு வரவுள்ளவை சுட்டிக்காட்டத்தக்கது.

இந்தநிலையில் இந்த தொடரிலும் ஆதிக்கம் மிகுந்த அணியாக வெற்றிவாகை சூடிவரும் ஜப்னா கிங்ஸ் அணியின் வெற்றிகளின் பின்னால் ஒரு தமிழர் மிகப்பெரிய மாஸ்டர் மைண்டாக செயல்பட்டுக்கு கொண்டிருக்கின்றார் என்பதே தமிழ் பேசும் கிரிக்கெட் ரசிகர்கள் பெருமைபாராட்டும் விடயமாகும்.

கொரோனா நெருக்கடி நிலைமைகள், ரசிகர்களை மைதானத்திற்குள் அழைப்பதில் இருக்கின்ற சிக்கல் நிலைமைகள், இது மாத்திரமல்லாமல் விளம்பரதாரர்கள், மற்றும் அனுசரணையாளர்கள் என்று ஏராளமான சவால்களுக்கு மத்தியில் இலங்கை விளையாட்டுத்துறை அமைச்சும், ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனமும் இணைந்து LPL போட்டி தொடரின் இரண்டாவது அத்தியாயத்தை வெற்றிகரமாக முடிவுக்கு கொண்டுவர தயாராகின்றமை கிரிக்கெட் ரசிகர்களுக்கு மிகப்பெரிய வரப்பிரசாதம் எனலாம் .

கடந்த 5ஆம் திகதி ஆரம்பமான போட்டிகளில் முதல் சுற்று ஆட்டங்கள் அனைத்தும் கொழும்பின் பிரபல சர்வதேச விளையாட்டு மைதானமான ஆர்.பிரேமதாச மைதானத்தில் வெற்றிகரமாக இடம்பெற்றன, மொத்தமான 5 அணிகளுக்கிடையில் 20 குழுநிலைப் போட்டிகள் அடங்கலாக ஒவ்வொரு அணிகளும் முதல்சுற்றுப் போட்டிகளில் பெற்ற வெற்றிகளின் அடிப்படையில் நான்கு அணிகள் Play off சுற்றுக்கு தேர்வாகின, புள்ளி பட்டியலில் 5வது இடத்தை பிடித்த அஞ்சலோ பெரேரா தலைமையிலான கண்டி வாரியர்ஸ் அணி Play off சுற்றுக்கான வாய்ப்பை இழக்க அவர்கள் வெளியேற்றப்பட்டார்கள்.

முதல் சுற்று ஆட்டங்களில் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் இருந்த திஸர பெரேரா தலைமையிலான ஜப்னா கிங்ஸ் மற்றும் பானுக ராஜபக்ச தலைமையிலான கோல் கிளாடியேட்டர்ஸ் அணியும் மீண்டும் ஒரு தடவை LPL இறுதிப் போட்டியில் மோத போகின்றன. கடந்த வருடம் முதல் அத்தியாயத்தின் இறுதி போட்டியில் விளையாடிய இரு அணிகளுமே இம்முறையும் இறுதிப்போட்டியில் விளையாடவுள்ளவை ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது என்று சொல்லலாம். மீண்டுமொரு வடக்கு-தெற்கு சமர் கிரிக்கெட் களத்தில்.

இந்த நிலையில் கடந்த முறை திசர பெரேரா தலைமையிலான ஜப்னா அணி கிண்ணத்தை சுவீகரித்தது போன்று இம்முறையும் திஸர பெரேரா தலைமையிலான ஜப்னா கிங்ஸ் அணி கிண்ணத்தை சுவீகரிப்பதற்கான அதிகப்படியான வாய்ப்புகள் இருப்பதாகவே கிரிக்கெட் விமர்சகர்கள் கணித்திருக்கிறார்கள்.

ஆனால் இங்கே இருக்கின்ற சிக்கல் நிலைமை என்னவென்றால் குழுநிலை ஆட்டங்கள் இரண்டிலும்,அத்தோடு குவாலிபயர் ஆட்டத்திலும் மொத்தமாக மூன்று ஆட்டங்களில் ஜப்னா கிங்ஸ் அணியைத் தோற்கடித்த பெருமை காலி அணிக்கு உண்டு என்பதும் கவனிக்கத்தக்கது. இந்த நிலையில் வருகிற 23ஆம் திகதி இடம்பெறவுள்ள ஆட்டம் ரசிகர்களுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை தோற்றுவித்துள்ளது.

இந்த ஜப்னா கிங்ஸ் அணியை பொறுத்தவரையில் இலங்கையில் வாழும் ஈழத்தமிழர்கள் மத்தியில் மட்டுமல்லாது, புலம்பெயர்ந்து வாழ்ந்துவரும் தமிழ்பேசும் சமூகத்தினர் இடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற ஓரணியாக ஜப்னா கிங்ஸ் அணி திகழ்ந்து வருகிறது என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது, உலகளவில் மிகப்பிரபலம் பெற்ற இந்தியாவின் ஐபிஎல் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எவ்வாறு தமிழ் மக்களின் ஏகோபித்த ஆதரவையும் வரவேற்பையும் பெற்ற ஒரு அணியாக திகழ்கிறதோ அதேபோன்று இலங்கையின் LPL போட்டிகளிலேயே ஜப்னா கிங்ஸ் அணிக்கு அந்த மகிமை இருக்கிறது என்பதே பொதுவான கருத்தாக இருக்கிறது.

சென்னை அணி தமிழ்நாட்டை பிரதிநிதித்துவம் செய்யும் நாமத்துடன் ‘சென்னை’ என்று நாமம் பொறிக்கப்பட்டு ஐபிஎல் போட்டிகளில் விளையாடுவது போல, இலங்கையில் தமிழ் மக்கள் பெருமளவில் வாழ்ந்து வருகின்ற தமிழ் பேசும் மண்ணாகிய ‘யாழ்ப்பாணம்’ எனும் நாமம் பொறித்து ‘ஜப்னா கிங்ஸ்’ அணி விளையாடி வருகின்றது இதற்கான காரணம் எனலாம்.

இது மாத்திரமல்லாமல் மற்றைய நான்கு அணிகளும் பெரும்பான்மையான சிங்கள வீரர்களை கொண்டு போட்டிகளில் களம்காண்கிறது, அதற்கு மாற்றாக ஜப்னா கிங்ஸ் அணி தமிழ் பேசும் கிரிக்கெட் வீரர்களையும், தமிழ் பேசுகின்ற சமூகத்திற்கான ஒரு கிரிக்கெட் அணியாகவும் மட்டுமல்லாது, எதிர்காலத்தில் தமிழ் பேசுகின்ற வீரர்களுக்கு வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுக்கும் வல்லமை பொருந்திய ஒரு அணியாகவும் இந்த ஜப்னா கிங்ஸ் அணி அடையாளப்படுத்தப்பட்டு வருகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.

கடந்த முறை ஜப்னா அணியாக இவர்கள் விளையாடியபோது அந்த அணியில் நான்கு தமிழ் பேசும் வீரர்கள் உள்ளடக்கப்பட்டு இருந்தார்கள் என்பதும் சுட்டிக்காட்டக்கூடிய விஷயம். விஜயகாந்த் வியாஸ்காந்த், கனகரத்தினம் கபில்ராஜ், செபஸ்ரியாம்பிள்ளை விஜயராஜ், டினோஷன் ஆகிய நான்கு வீரர்களை அணிக்குள் உள்வாங்கியதுடன் அதிலும் வியாஸ்காந்துக்கு இரு LPL போட்டிகளில் விளையாடும் பதினொருவர் அணியில் ஆடும் அருமையான வாய்ப்பை ஜப்னா அணி ஏற்படுத்தி கொடுத்தது.

இந்த முன்னெடுப்பானது தமிழ் பேசுகின்ற வீரர்களுக்கு மிகப்பெரும் உறுதுணையும், உந்துதலையும் ஏற்படுத்திக் கொடுத்த ஒரு விஷயமாக வியாஸ்காந்தின் உள்ளீர்ப்பு அமைந்திருந்தது. இந்த ஜப்னா கிங்ஸ் அணி தமிழ் மக்கள் மத்தியில் பேசப்படும் வெற்றிகரமான அணியாக இருப்பதற்கும் பின்னால் ஓர் மாஸ்டர் மைண்ட் இருக்கிறார் ,அவர்தான் தமிழர் அடையாளத்துடன் நெற்றியில் விபூதி தரித்து பொட்டு வைத்த முகத்துடன் தொலைக்காட்சி திரைகளில் நாம் காணும் ஹரி வாகீசன்.

யார் இந்த ஹரி வாகீசன் ?

கொழும்பின் பிரபல பாடசாலையான டீ. எஸ் சேனநாயக்க கல்லூரியில் கல்வி கற்று அந்த அணியின் கிரிக்கெட் அணியில் இடம்பிடித்து பின்னர் 1983 ல் ஏற்பட்ட இனக்கலவரம் மூலமாக இங்கிலாந்து குடிபெயர்ந்து, அங்கிருக்கும் பிரபல கழகங்களில் இணைந்து தனது கிரிக்கெட் ஆற்றலை வெளிப்படுத்தியவர் ஹரி வாகீசன்.

இதன்பின்னர் 2019 ன் பிற்பகுதியில் இலங்கை திரும்பிய இவர் இலங்கையின் கிரிக்கெட் அபிவிருத்தியில், அதிலும் குறிப்பாக தமிழ்பேசும் கிரிக்கெட் அபிவிருத்திக்கான திட்டங்களை வகுத்து செயலாற்றுகின்றார். அதில் ஓர் பிரதான அங்கமாகவே LPL போட்டிகளில் ஜப்னா அணியின் பணிப்பாளராக இருந்து அவர் முன்னெடுத்துவருகின்ற செயல்திட்டங்களாகும்.

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியிலும் , மட்டக்களப்பிலும் பாய்விரிப்பு (Matting pitch) ஆடுகளங்களில் மட்டுமே விளையாடிவந்த நம் மண்ணின் மைந்தர்களுக்கு, புற்தரை ஆடுகளங்களை (Turf ) கிரிக்கெட் மைதானங்களை அமைத்துக் கொடுத்ததுடன் , அண்மையில் இரு வீரர்களை கொழும்பின் பிரபல தமிழ் யூனியன் கழக அணியில் விளையாடும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்திருப்பதாகவும் அறியக்கிடைக்கிறது.

கொழும்பு ரோயல் கல்லூரி மற்றும் யாழ் இந்தக் கல்லூரி அணிகளுக்கிடையிலான கிரிக்கெட் போட்டியை யாழ்ப்பாணத்தில் ஒழுங்கமைத்துக் கொடுத்து வடபுல மைந்தர்கள் தம் திறமையை கிரிக்கெட் களத்தில் பறைசாற்றவும் காரணமாக திகழ்கின்றார்.
இவரது சேவை தொடர வேண்டுமென்பதே நமது எல்லோரது எதிர்பார்ப்பாகவும் அமைந்துள்ளது.

ஜப்னா அணியின் வெற்றிகளில் இவரது பங்களிப்பு என்ன?

ஒரு கிரிக்கெட் அணி வெற்றிகளை பெறுகிறது என்று சொன்னால் அவர்களுடைய வீரர்களை முகாமைத்துவம் செய்கின்ற முகாமை என்பது மிக முக்கியமான ஒரு விஷயமாக பார்க்கப்படுகிறது,ஐபிஎல் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகள் வெற்றி பெறுகின்றபோது அந்த அணியின் முகாமையாளர்களாக அல்லது அந்த அணிகளின் உரிமையாளர்கள் வசம் இருக்கின்ற திட்டங்களே பிரதானமான காரணம் எனலாம்.

தோனி தலைமையிலும், ரோகித் சர்மா தலைமையிலான இந்த இரண்டு அணிகளும் வெற்றி பெறுவதற்கு அவர்களுடைய Strategic Plan மிக முக்கியமான காரணமாக அமைகிறது. ஒவ்வொரு போட்டிக்கும் ஒவ்வொரு அணியை, அல்லது விளையாடுகின்ற 11 வரை அடிக்கடி மாற்றி அமைத்துக்கொண்டு தடுமாறாமல் நேர்த்தியான ஒரே அணியோடு பயணப்படுவதே அவர்களுடைய வெற்றிகளின் சூத்திரம் ஆகும்.

அந்த மாதிரியான நடைமுறைகளை இலங்கையில் லங்கா பிரீமியர் லீக் போட்டிகளிலே பின்பற்றிக் கொண்டு இருக்கின்ற ஒரே அணி இந்த ஜப்னா கிங்ஸ் அணியாகவே இருக்கிறது. விளையாடும் பதினொருவர் யாராக இருப்பார்கள், யாருக்கு அதிகமான வாய்ப்புகள் கொடுக்கப்படும் என்ற அடிப்படையில் ஜப்னா கிங்ஸ் அணி தங்களை நிரூபித்து இருக்கிறது.

ஜப்னா கிங்ஸ் அணியினுடைய வெற்றிகளுக்கும் அவர்களுடைய செயற்பாடுகளுக்கும் பின்னால் தமிழ் பேசுகின்ற ஈழத்தமிழர் ஒருவர் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார் என்பதை நாங்கள் அதிகமானவர்கள் அறிந்திராத ஒரு விஷயம், அணியின் தலைமை பயிற்சியாளர் திலின கண்டம்பி, அணியின் தலைவர் திசார பெரேரா ஆகியோருடன் கூட்டிணைந்து இவர்களுக்கான ஆலோசனைகளையும் வழிகாட்டுதல்களையும், நெறிப்படுத்தல்களையும் வழங்கி ஜப்னா கிங்ஸ் அணியின் நிலைபேறான வெற்றிகளில் தன்னை அற்பணித்துக் கொண்டிருக்கிறார் இந்த ஹரி வாகீசன்.

இதன் காரணத்தால்தான் இந்து ஜப்னா கிங்ஸ் அணி தொடர்ச்சியான வெற்றிகள் பெற்று வருகின்றமை சுட்டிக்காட்டக் கூடிய விஷயமாக இருக்கிறது.

இம்முறையும் இந்த ஜப்னா அணி கிண்ணத்தை வெல்வதோடு மாத்திரமல்லாமல் அடுத்து வருகின்ற பருவகாலங்களில் தமிழ்பேசும் ஒட்டுமொத்த சிறுபான்மை வீரர்களுக்கும் வாய்ப்புக்களை வழங்கி அவர்களது கிரிக்கெட் தாகத்துக்கு களம் அமைத்துக் கொடுக்கும் தார்மீக கடமையை தலைமேல் ஏற்று செயல்பட வேண்டும்.

இதன்முலம் தமிழ்பேசும் வீரர்கள் மத்தியில் கிரிக்கெட்டின் மீதான பார்வை இன்னுமின்னும் அதிகரிப்பதுடன், அவர்களுக்கான வாசல்கதவுகள் திறக்கப்படும் அதற்கான அடித்தளத்தை ஜப்னா அணியின் நிர்வாகம் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.

தமிழ்பேசும் சமூகத்தின் ஒளிவிளக்காக திகழும் ஜப்னா கிங்ஸ் அணிக்கும், அதன் உரிமையாளர் அல்லிராஜா சுபாஸ்கரன் , அணியின் பணிப்பாளர் ஹரி வாகீசன் உள்ளிட்ட அனைவருக்கும் தமிழ் பேசும் கிரிக்கெட் ரசிகர்கள் சார்பிலான வாழ்த்துக்கள்.

அடுத்தடுத்த கட்டங்களில் ஜப்னா கிங்ஸ் அணி என்னெவென்ன செயல்திட்டங்களை நம் சமூகத்துக்காக செய்ய வேண்டும் எனும் பாரிய செயல்திட்டம் ஒன்று நம்மிடம் இருக்கிறது, அது தொடர்பாக விரிவாக இன்னுமொரு பதிவில் சந்திப்போம்.

அன்பு வாழ்த்துக்களுடன்
எஸ்.முகுந்தன்.