ஜாகிர் கான் சரமாரி புகார்.. LSG அணியில் வெடித்த சர்ச்சை.. லக்னோ தோல்விக்கு காரணம் இவர்தான்

ஜாகிர் கான் சரமாரி புகார்.. LSG அணியில் வெடித்த சர்ச்சை.. லக்னோ தோல்விக்கு காரணம் இவர்தான்

பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான தோல்வியை அடுத்து லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் ஆலோசகர் ஜாகிர் கான் தோல்விக்கு காரணமாக ஒருவரை குற்றம் சுமத்தி இருக்கிறார். இந்த விவகாரம் ஐபிஎல் அரங்கில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

2025 ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி நடைபெற்றது. இதில் பஞ்சாப் கிங்ஸ் ஆதிக்கம் செலுத்தி எட்டு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டி லக்னோவில் உள்ள ஏக்னா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இது லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் சொந்த மைதானம் ஆகும்.

இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு தனது சொந்த மைதானத்தில் இதுவே முதல் போட்டி ஆகும். இந்த நிலையில் இந்த தோல்விக்கு காரணம் அந்த மைதானத்தில் பிட்ச்சை தயாரித்தவர் தான் என லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் ஆலோசகர் ஜாகிர் கான் குற்றம் சுமத்தி இருக்கிறார்.

மேலும், இந்த போட்டி நடந்த பிட்ச் பஞ்சாப் கிங்ஸ் அணியின் பிட்ச் ஊழியர் இதை தயாரித்தது போல இருக்கிறது எனவும் சாடி இருக்கிறார். ஜாகிர் கானின் குற்றச்சாட்டு ஐபிஎல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. போட்டியில் என்ன நடந்தது? ஜாகிர் கான் என்ன சொன்னார்? என பார்க்கலாம்.

இந்த போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய பஞ்சாப் கிங்ஸ் அணி பேட்டிங்கில் எந்தவிதமான சிரமத்தையும் எதிர்கொள்ளவில்லை. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் பிரப்சிம்ரன் சிங் 34 பந்துகளில் 69 ரன்கள் சேர்த்தார்.

பஞ்சாப் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 30 பந்துகளில் 52 ரன்கள், நெஹால் வதேரா 25 பந்துகளில் 43 ரன்களையும் எடுத்தனர். 16.2 ஓவர்களில் பஞ்சாப் கிங்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் பந்துவீச்சாளர்களால் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்த முடியவில்லை.

இதை தான் ஜாகிர் கான் குற்றம் சுமத்தி இருக்கிறார். இது குறித்து அவர் பேசியதாவது: “இது எங்களது சொந்த மைதானத்தில் நடந்த போட்டி போலவே இல்லை. இது சொந்த மைதானம் என்று சொல்லும் நிலையில் எனக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது. ஐபிஎல் தொடரில் மற்ற அணிகள் சொந்த மைதானத்தில் சில சாதகங்களைப் பெறுகின்றன. ஆனால், இங்கு பிட்சை உருவாக்கிய ஊழியர் இது எங்களின் சொந்த மைதானம் என்பதைச் சிந்திக்காமல் செயல்பட்டது போல உள்ளது.”

“பஞ்சாப் அணியின் பிட்ச் ஊழியர் இந்த பிட்சை தயாரித்தது போல உள்ளது. இது குறித்து நாங்கள் சீக்கிரம் ஒரு முடிவை எடுக்க வேண்டும். நாங்களும் புதியவர்கள் தான். இதுவே இதுபோன்ற சம்பவம் நடக்கும் முதல் மற்றும் கடைசி போட்டியாக இருக்கும் என நம்புகிறேன்.”

“ஏனெனில், லக்னோ அணியின் ரசிகர்களும் ஏமாற்றத்தில் இருக்கிறார்கள். அவர்கள் அதிக எதிர்பார்ப்புடன் இங்கே வந்தார்கள். முதல் சொந்த மைதானப் போட்டி என்ற ஆர்வத்துடன் இருந்தார்கள். அவர்களும் ஏமாற்றத்தில் இருக்கிறார்கள்.” என்றார் ஜாகிர் கான்.

இதற்கு முன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் நிர்வாகத்திற்கும் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தின் பிட்ச் நிர்வாகிக்கும் இடையே உரசல் எழுந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது லக்னோ அணியிலும் அதே போன்ற சூழ்நிலை உருவாகியுள்ளது.

Previous article“ஸ்ரேயாஸ் ஐயருக்கு கேப்டன் என்ற மரியாதையே கொடுக்கலை..” விளாசிய முன்னாள் வீரர் கவாஸ்கர்
Next articleரோஹித் சர்மா – ஜாகிர் கான் பேச்சு சர்ச்சை! வீடியோவை நீக்கிய மும்பை இந்தியன்ஸ்.. என்ன நடந்தது?