#மீள்
HBD R. D…
ராகுல் டிராவிட்!
ஷேன் வார்ன் ராகுல் டிராவிடை கோட்டை என்றழைக்க வேண்டும் என்கிறார். ஏனென்றால் டிராவிட் ஒருமுறை செட்டாகிவிட்டால் அவரை வீழ்த்துவதற்கு ஒரே நேரத்தில் டஜன் பீரங்களின் தாக்குதலுக்குச் சமமான பவுலிங் தாக்குதலை நிகழ்த்த வேண்டியதிருக்குமாம்!
கவனம், பொறுமை, பயின்ற கிரிக்கெட் அடிப்படைகளை களத்தில் தொடர்ந்து செயல்படுத்தும் சலிப்பின்மை. இவைகள் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஓட்டங்களையும், வெற்றிகளையும் நீங்கள் வேண்டாமென்றாலும் தானாய் கொண்டு வரும். “சச்சின் சிறந்தவராய் இருந்தாலும், உறுதியானவராகவும் விக்கெட்டை கைப்பற்ற கடினமானவராகவும் நான் டிராவிட்டை பார்க்கிறேன். உறுதியான தற்காப்பு ஆட்டத்தைக் கொண்டவர் அவர்” என்கிறார் அக்தர்.
எந்தச் சூழலிலும் யாராலும் இந்த மூன்று விசயங்களிலும் இருந்து டிராவிட்டை எப்போதும் விலகிப்போகச் செய்ய முடியவில்லை. அவர் கிரிக்கெட் வாழ்க்கையின் வெற்றிக்கு அடிப்படை காரணம் இந்த அர்ப்பணிப்புதான். இதைத்தான் ஸ்டீவ்வாக் “டிராவிட்டை முதல் 15 நிமிடங்களுக்குள் வீழ்த்த முயற்சிக்க வேண்டும். இல்லையென்றால் மற்ற விக்கெட்டுகளை வீழ்த்ததான் முயற்சிக்க வேண்டும்” என்கிறார்.
பேட்டிங்கில் நிதானம், களத்தில் பெரிதாய் யாருடனும் வம்பு வழக்கில்லை. பார்ப்பதற்கு ஒருமாதிரி சாந்தமான நபர். ஆனால் உண்மையில் டிராவிட் வெற்றிக்காக வெறிப்பிடித்த மாதிரி உழைக்கக்கூடிய நபர். “நீங்கள் உண்மையான aggressionயை பார்க்க விரும்பினால் டிராவிட்டின் கண்களை உற்றுப் பாருங்கள்” என்கிறார் மேத்யூ ஹைடன்.
சச்சின் கங்குலி, இலட்சுமணன், சேவாக் காலத்தில் தன் அணியின் வேகப்பந்து வீச்சாளர்களைக் காட்டிலும் அதிக உடல் தகுதியைக் கொண்டிருந்தவர் டிராவிட். “இளைஞர்களுக்கு அவர் மிகச்சரியான முன் உதாரணம். நாங்கள் அவர் பாதையில் போகவே முயற்சி செய்கிறோம். அவர் எல்லாரும் பின்பற்ற வேண்டிய முன்மாதிரி” என்கிறார் சச்சின்.
கங்குலி தன் காலத்தில் ஒரு சிறந்த கேப்டனாய் இருந்தாரென்றால், அவருக்கும் அணி வீரர்களுக்குமான எண்ண பரிமாற்ற பாலமாய் இருந்தவர் டிராவிட். அணிக்கு ஒரு விசயம் தேவைப்பட்டால் அது தன்னால் முடியுமென்றால், இல்லை அணி நிர்வாகம் கேட்டால் தயங்காமல் உடனே செய்யக்கூடியவர். அது அதிக உழைப்பை கொடுக்க வைத்தாலும் சரி, தன் நிலையை இறக்க வைப்பதாய் இருந்தாலும் சரி அணிக்கு நன்மையென்றால் உடனே டிராவிட்டிடம் இருந்து சம்மதம்தான் வரும்.
அவர் விக்கெட் கீப்பரானது, அணியில் தேவைக்குத் தகுந்த மாதிரி தன் இடங்களை விட்டுத்தருவது. ஜூனியர் வீரரின் தலைமையில் எந்த வீண் கெளரவத்தையும் காட்டாமல் விளையாடுவதென டிராவிட் 200% அணிக்கான வீரர். “அணி கேட்டால் உடைந்த கண்ணாடிகளின் மீதும் நடக்கும் வீரர் டிராவிட்” என்கிறார் சித்து. இதைத்தான் இயான் சேப்பல் இப்படிச் சொல்கிறார். “அணிக்குப் பிரச்சினையா? யார் இருக்கிறார்கள்? ராகுல் டிராவிட்!”
அவர் எந்தளவிற்கு கிரிக்கெட்டுக்காகவே வாழ்ந்தார் வாழ்கிறார் என்பதற்கு உதாரணமாய், அவர் மனைவி சொல்வதைப் படியுங்கள் புரியும்.
“நான் அவருக்கு bag செய்கையில் இரண்டே செட் டிரஸ்களை மட்டுமே வைத்தாலும், அதை வைத்து மொத்த டூரையும் முடித்துவிடுவார். அதைப்பற்றி எதுவும் கண்டுகொள்ள மாட்டார். கேஜெட்ஸ், காஸ்ட்லி வாட்சஸ், கார் என எதையும் புக் செய்யமாட்டார். ஆனால் அவர் batல் ஒரு கிராம் எடை குறைந்திருந்தாலும் உடனே கவனித்து அதைச் சரிசெய்வார்”….. இதை முதல் முறை படித்ததும் சத்தம் போட்டு சிரித்தேன்!
இந்திய அணியின் சிறந்த வெளிநாட்டு பயிற்சியாளரான ஜான் ரைட் இவ்வாறு கூறுகிறார்.
“பிட்னஸ்காக ஜிம்மில் அதிகமாய் உழைக்கும் நபர்களில் டிராவிட்டும் ஒருவர். அதேபோல் செசன்களில் ரன் சேர்த்துவதிலும். அவர் எனக்கும் செளரவ்க்கும் மிகவும் லாயலாக இருந்தார். உண்மையில் நாங்கள் இருவரும் அவரால் அதிர்ஷ்டம் செய்தவர்கள்” என்று.
சரி இவ்வளவு பார்த்தோம் இவரின் கேப்டன் கங்குலி என்ன சொல்கிறார் இவரைப்பற்றி?
இப்படி சொல்கிறார்,
“அவர் எல்லாவற்றிலும் சாம்பியன். அவர் வாழ்க்கையை அணுகும் விதம் என்னை வெகுவாகக் கவர்ந்தது” என்கிறார்.
இவர்களின் நட்பு தற்போது எந்தளவில் இருக்கிறதென்றால், இவரை உரிமையாய், வற்புறுத்தி இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவியை ஏற்றுக்கொள்ள வைக்கும் அளவில் இருக்கிறது.
“அவருடன் உடன்பட்டு பழக முடியவில்லை என்றால் நம் வாழ்க்கை ஏதோ பிரச்சினையில் இருக்கிறது” என்கிறார் பிரட்லீ. அந்தளவிற்கு மனிதநேயமிக்க பண்பாளர். ஆனால் “அமைதியாய் மென்சொற்களை பேசும் நபர்தான் ஆனால் மிக உறுதியான, ஆளுமை குணம் மிக்கவர்” என்கிறார் கிரேக் சேப்பல்.
பிரபல கிரிக்கெட் வர்ணனையாளர் ஹர்ஷா போக்லே “அவரிடம் நீங்கள் சிறப்பாய் விளையாடினிர்கள் என்று சொன்னால், அவர் இன்னொருவரை சொல்லி சிறப்பாய் விளையாடினார் என்பார். ஒரு மனிதனால் எப்படி இப்படி தன்னலமற்று இருக்க முடிகிறது? நான் என் வேலையை விட்டு ஓய்வு பெறும் போது, ராகுல் பெற்ற நற்பெயரோடு ஓய்வு பெற விரும்புகிறேன்” என்கிறார்!
ராகுல் டிராவிட் என்றால் கடின உழைப்பு, அர்பணிப்பு, ஒழுக்கம், தன்னலமில்லாமை, கூட்டுச் செயல்பாடு, மனிதநேயம், முன்மாதிரி!
அவருடைய விளையாட்டு பாணியில் அவர் மட்டும்தான் வேறு யாரும் இதுவரை இல்லை. யுனிவர்செல் பாஸ் கெயில் “என்னைப் போல் அவரால் ஆட முடியும். அவரைப் போல் என்னால் ஆடமுடியாது” என்பார். இதுதான் உண்மை. இப்பொழுதும் குறைந்த பந்தில் அரைசதமடித்த இந்திய விக்கெட் கீப்பர் யாரென்றால் கூகுள் “ராகுல் டிராவிட்” என்றே சொல்லும்!
பிறந்தநாள் வாழ்த்துக்கள் இந்திய கிரிக்கெட்டின் இரும்பு மனிதரே!
By-Richards