டிராவிட் பாணியை பின்பற்றி இளையவர்களை வளர்க்க இலங்கை கிரிக்கெட்டுக்குள் நுழையும் மஹேல..!

டிராவிட் பாணியை பின்பற்றி இளையவர்களை வளர்க்க இலங்கை கிரிக்கெட்டுக்குள் நுழையும் மஹேல..!

இலங்கை கிரிக்கெட் இப்போது மிகப்பெரிய தடுமாற்றத்தில் காணப்படுகின்றது, அடுக்கடுக்கான தோல்விகளையே சந்தித்து மிகப்பெரிய விமர்சனங்களை சந்தித்துவரும் நிலையில் இலங்கை கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஒருவித மகிழ்ச்சியை தோற்றுவிக்கவல்ல செய்தி வெளியாகியுள்ளது.

அண்மையில் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் தொடரில் இங்கிலாந்துக்கு எதிராக இலங்கை மோசமான தோல்வியை அடைந்த பின்னர் ரசிகர்கள், இலங்கை வீரர்கள் மற்றும் நிர்வாகத்தின் மீதும் கடுமையாக விமர்சனத்தை முன்வைத்தனர்.

இந்தநிலையில் இலங்கையின் முன்னாள் தலைவர் மஹேல ஜெயவர்தன 19 வயதுக்குட்பட்ட அணியின் ஆலோசகராக பொறுப்பேற்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

மஹேல ஜெயவர்தன 19 வயதுக்குட்பட்ட மட்டத்தில் ஒழுக்கத்தை வளர்ப்பது மட்டுமல்லாமல், சர்வதேச மட்டத்தில் விளையாடுவதற்கு வீரர்கள் தயாராக இருப்பதற்கு ஊக்கத்தை வழங்குபவராக இருப்பார்.

19 வயதிற்குட்பட்ட மட்டத்தில் இந்தியாவின் ராகுல் டிராவிட் செயல்பட்டதன் மூலம் இந்தியா தரமான இளம் வீரர்களை உருவாக்க முடிந்தது என்பதற்கு இந்தியா கிரிக்கெட் சிறந்த உதாரணம்.

இலங்கை இன்னும் இளையோர் உலகக் கிண்ணம் எதனையும் வெல்லவில்லை, இளையோர் உலகக் கிண்ண தொடர் அடுத்த ஆண்டு 2022 ஆம் ஆண்டில் மேற்கிந்தியத் தீவுகளில் நடைபெறவுள்ள நிலையில், மஹேலவின் நியமனம் இலங்கை கிரிக்கெட்டில் ஒரு பெரிய விஷயமாக இருக்கும் என்று நம்பப்படுகின்றது.

இலங்கையின் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச உருவாக்கியுள்ள விளையாட்டு கவுன்சில் தலைவராக செயல்படும் மஹேல ,இந்த பொறுப்பை ஏற்பாராக இருந்தால் தரமான ஓர் அணியை கட்டியெழுப்ப முடியும் என்று நம்பப்படுகின்றது.

ஸ்ரீ லங்கா கிரிக்கெட் தொழில்நுட்பக் குழுவின் தலைவரான அரவிந்த டீ சில்வா இந்த முன்னெடுப்புக்களில் ஆர்வம் காட்டுவதாக ஸ்ரீ லங்கா கிரிக்கெட் தரப்பின் முக்கியஸ்தர் ஒருவரை மேற்கோள்காட்டி இந்த செய்தி வெளியாகியுள்ளது.

இருப்பினும் இதுதொடர்பான உத்தியோகபூர்வ செய்திகள் எதனையும் ஸ்ரீ லங்கா கிரிக்கெட் தரப்பு வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.