தென் ஆபிரிக்க கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும் அதிரடி வீரருமான டீ வில்லியர்ஸ், மீண்டும் கிரிக்கெட் களத்துக்கு வருவது எப்போது எனும் தகவலை கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ளது.
தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளரான மார்க் வவுச்சர் மற்றும் கிரிக்கெட் பணிப்பாளர் கிரஹாம் ஸ்மித் ஆகியோர் டீ வில்லியர்ஸை மீண்டும் கிரிக்கட் களத்துக்கு திரும்ப வைக்க முயற்சிகளை மேற்கொண்டனர்.
ஆகவே அவரை ஓய்வு அறிவித்தலை வாபஸ் பெற்றுவிட்டு மீண்டும் தென் ஆபிரிக்க அணிக்காக ஆட வருமாறு அழைப்பு விடுத்து பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்திருந்தனர்.
இதனால் ரசிகர்கள் மத்தியில் டீ வில்லியர்ஸ் , மீண்டும் தமது அணிக்காக ஆடவருவார் எனும் பெருவாரியான நம்பிக்கை நிலவியது. இந்த நிலையில் ரசிகர்களுக்கு மிகப்பெரும் அதிர்ச்சியான தகவலை அந்த நாட்டு கிரிக்கெட் சபை சற்று முன்னர் வெளியிட்டுள்ளது.
டீ வில்லியர்ஸ் , தனது ஓய்வு அறிவித்தலை மீளப்பெற மாட்டார் என்றும், ஏற்கனவே அறிவித்த அறிவிப்பில் மாற்றமிருக்காது என்று அவர் தெரியப்படுத்தியிருப்பதாகவும் செய்திகளை வெளியிட்டுள்ளது.
ஆகவே டீ வில்லியர்ஸ் , மீண்டும் சர்வதேச போட்டிகளுக்கு திரும்புவதான கதைகள் எல்லாம் இப்போது முடித்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.