டெஸ்ட்டில் ஜடேஜா ஓய்வு ? – தெளிவுபடுத்தல் ..!

தம் மீதான வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த ஜடேஜா

இந்திய அணியின் முன்னணி ஆல் ரவுண்டரான ரவீந்திர ஜடேஜா கடந்த 2012 ஆம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமாகி இதுவரை 57 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி பேட்டிங்கில் கிட்டத்தட்ட 2200 ரன்கள் வரையிலும், பந்துவீச்சில் 232 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.

தொடர்ச்சியாக டெஸ்ட் கிரிக்கெட்டில் பவுலிங் மற்றும் பேட்டிங் என இரண்டிலும் அசத்தி வரும் ஜடேஜா எதிர்வரும் தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் தொடருக்கான அணியில் இடம் பிடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் எதிர்பாராத விதமாக அவருக்கு ஏற்பட்ட காயம் காரணமாக இந்த தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் தொடரை தவிர விட்டுள்ளார். மேலும் அவருக்கு ஏற்பட்டுள்ள காயம் குணமடைய சில மாதங்கள் பிடிக்கும் என்பதனால் அவர் அடுத்த சில தொடர்களை தவறவிடுகிறார் என்று கூறப்பட்டது.
மேலும் அவர் ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் தொடர்ந்து விளையாட வேண்டும் எனில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற வேண்டும் என்றும் காயம் அந்த அளவிற்கு தீவிரமாக உள்ளதாகவும் ஒரு தகவல் கடந்த சில தினங்களாகவே இணையத்தில் வைரலாகியது.

மேலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஜடேஜா ஓய்வு பெற இருக்கிறார் என்பது குறித்த பேச்சும் அதிக அளவில் இருந்தது. ஆனால் தற்போது இது குறித்த பரவிய அனைத்து செய்திகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ஜடேஜா தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை பதிவிட்டு தன்னை சுற்றியிருந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

அதன்படி இந்திய டெஸ்ட் அணியின் ஜெர்சியை அணிந்துள்ள அவர் “இன்னும் நிறைய தூரம் பயணிக்க வேண்டியிருக்கிறது” என்று அதில் பதிவிட்டுள்ளார். தற்போது 33 வயதாகும் ஜடேஜா நிச்சயம் 37-38 வயது வரை இந்திய அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடுவார் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகவும் உள்ளது.
மேலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக இந்த ஆண்டு முதல் நபராக தக்க வைக்கப்பட்ட ஜடேஜா தோனிக்கு அடுத்து சென்னை அணியின் கேப்டனாக செயல்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

#ABDH