தடுமாறிக் கொண்டிருக்கும் இலங்கை- திணறடிக்கும் வங்கப்புலிகள்…!

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் முதலில் துடுப்பாடி வரும் பங்களாதேஷ் அணி இலங்கையின் பந்து வீச்சாளருக்கு பலத்த நெருக்கடியை தோற்றுவித்துள்ளது.

பங்களாதேஷ் அணி முதல் நாள் மட்டுமல்லாது இன்றைய 2 ம் நாளிலும் முழுவதுமாக துடுப்பாடி ஆதிக்கத்தை தனதாக்கியுள்ளது.

நேற்று ஆரம்ப வீரர் தமீம் இஃபால் 90 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தாலும் , நசுமுல் ஹுசைன் நேற்று ஆட்டம் இழக்காது 126 ஓட்டங்களையும், அணித்தலைவர் மொமினுல் ஹக் ஆட்டம் இழக்காது 64 ஓட்டங்களையும் நேற்றைய நாளில் பெற்றுக்கொண்டனர்.

பங்களாதேஷ் அணி நேற்றைய முதல்நாள் நிறைவில் 2 விக்கெட்களை மட்டும் இழந்து 302 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.பந்து வீச்சில் விஷ்வா பெர்னாண்டோ 2 விக்கெட்களை கைப்பற்றினார்.

தொடர்ந்து இன்றைய நாளிலும் ஆடிய பங்களாதேஷ் மேலதிகமாக 2 விக்கெட்களை மட்டுமே பறிகொடுத்தது. இன்றைய நாள் நிறைவுக்கு வருவதற்கு 25 ஓவர்கள் இருந்த நிலையில் போதிய வெளிச்சமின்மை காரணமாக ஆட்டம் இடை நிறுத்தப்படும் வரையில் பங்களாதேஷ் அணி 4 விக்கெட்களை மட்டும் இழந்து 474 ஓட்டங்களை பெற்றது.

நேற்று ஆட்டமிழகாது களத்திலிருந்த நசுமுல் ஹுசைன் 163 ஓட்டங்களையும், அணித்தலைவர் மொமினுல் ஹக் 127 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தனர்.

இன்றைய நாள் நிறைவில் முஷ்பிகுர் ரஹீம் 43 ஓட்டங்களையும், லிட்டன் தாஸ் 23 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டுள்ளனர்.

நாளை போட்டியின் 3 ம் நாள் ஆட்டம் தொடரும்.