தமிழக வீரர் கார்த்திக் மெய்யப்பனின் திறமையில் அயர்லாந்தை வீழ்த்தியது UAE அணி..!
ஐக்கிய அரபு அமீரகம் – அயர்லாந்து அணிகளுக்கு இடையேயான சம்மர் டி20 பேஷ் தொடரின் 3ஆவது லீக் ஆட்டம் இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய ஐக்கிய அரபு அமீரக அணிக்கு கிரேக் சுரி அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தார். இதில் அரைசதம் கடந்த சுரி 51 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார்.
அதன்பி முகமது உஸ்மான் – பசில் ஹமீத் இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தியது. இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் அமீரக அணி 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 163 ரன்களைச் சேர்த்தது.
இதையடுத்து கடின இலக்கை நோக்கி களமிறங்கிய அயர்லாந்து அணியில் பால் ஸ்டிர்லிங், கெவின் ஓ பிரையன், ஆண்ட்ரூ பால்பிர்னி, டிலானி என நட்சத்திர வீரர்கள் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
அதைத்தொடர்ந்து களமிறங்கிய வீரர்களும் அறிமுக வீரர் கார்த்திக் மெய்யப்பனின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இதனால் 18.4 ஓவர்களிலேயே அயர்லாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 109 ரன்களை மட்டுமே சேர்த்தது.
இதன்மூலம் ஐக்கிய அரபு அமீரக அணி 54 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றது. மேலும் அறிமுக டி20 போட்டியிலேயே 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்திய கார்த்திக் மெய்யப்பன் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.
இப்போட்டியில் ஆட்டநாயகன் விருதை வென்ற கார்த்திக் மெய்யப்பன் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
#ABDH