தற்கால கிரிக்கெட்டுக்கான அதிகாரப்பூர்வ தூதுவர் விராட் கோலி!
கடந்த சில வருடங்களுக்கு முன்பு இயான் சேப்பல் விராட் கோலி இடம் ஒரு பேட்டி கண்டார். விராட் கோலி உடனான அந்த உரையாடல் கிரிக்கெட் பற்றி மிகவும் அறிவுப்பூர்வமானதாக அமைந்ததாக குறிப்பிட்டும் இருந்தார். அந்தக் குறிப்பிட்ட பேட்டியில் ஒரு இடத்தில் விராட் கோலி இடம் ” நீங்கள் ஏன் மாடர்ன் கிரிக்கெட் ஷாட்கள் விளையாடுவதில்லை? ” என்று கேட்டிருக்கிறார். அதற்கு விராட் கோலி “மாடர்ன் கிரிக்கெட் ஷாட்கள் விளையாடத் தெரியாமல் விளையாடாமல் இல்லை. என்னால் விளையாட முடியும். ஆனால் அப்படி விளையாடுவது என் டெஸ்ட் கிரிக்கெட் பேட்டிங் அணுகுமுறையைப் பாதிக்கும். டெஸ்ட் கிரிக்கெட்டை பாதிக்கும் எதுவொன்றையும் நான் செய்ய மாட்டேன்!” என்று பதிலளித்திருக்கிறார்!
உண்மையான கிரிக்கெட் வடிவமான டெஸ்ட் கிரிக்கெட்டின் மேல் அவருக்குள்ள காதல் ; அதற்காக அவர் காட்டும் அர்ப்பணிப்பு ; அதற்குத் தன்னை முழுத்தகுதியாக்கிக் கொள்ள அவர் செய்துள்ள தியாகங்கள்; இவைகள்தான் அவரை கிரிக்கெட்டுக்கான அதிகாரப்பூர்வ தூதுவராக மாற்றியது. இதனால் கிரிக்கெட்டே விராட் கோலியை தனக்கான அதிகாரப்பூர்வ தூதராக விரும்பி ஏற்றுக்கொண்டது!
கிரிக்கெட்டில் விராட் கோலியைப் பற்றி சுருக்கமாக வரையறுப்பதாக இருந்தால், அவர் மரபு ரீதியான பாரம்பரியமிக்க டெஸ்ட் கிரிக்கெட்டின் மீது காதல் கொண்ட, அதன் ஆதிக் கட்டுப்பாடுகள் சம்பிரதாயங்களை மீறாமல் கடைபிடிக்கும் கண்டிப்பான ஒருவர். உடல்தகுதியில் சமரசம் மற்றும் பகுதிநேர பந்துவீச்சாளர்களைக் கொண்டிருக்காமல், ஐந்து பிரதான வேகப்பந்துவீச்சாளர்களோடும், குறிப்பாக வேகப்பந்துவீச்சாளர்களுக்கு முன்னுரிமை கொடுத்தும் விடாப்பிடியாக நின்று சாதித்தது இப்படியான குணத்தால்தான். விராட் கோலி இந்திய அணிக்காக விளையாடும் இங்கிலாந்து ஆஸ்திரேலியா வீரர்களின் மனநிலையைக் கொண்ட ஒரு வீரர். இதனால் அவரும், அணி நிர்வாகமும் பெற்றதும் இழந்ததும் தனி அது இன்னொரு இடத்தில் பேசுவதற்கானது!
விராட் கோலி எந்த இடத்தில் மிகக் கவர்ச்சியான தலைமையாளராக மாறுகிறார் என்றால், அவர் சட்டென்று மாயாஜாலங்களை நிகழ்த்துவாரென்ற எண்ணத்தை உருவாக்க மாட்டார். ஆனால் ஒரு ஆட்டத்தில் நதி போலான நகர்வில், ஒரு மாயாஜாலம் உண்டாக்கும் மொத்தப் பரவசம், சிலிர்ப்பை சரிசமமாக பிரித்தெடுத்து, ஆரம்பத்தில் இருந்து முடிவு வரை மையச்சரடாக வைத்து தைத்திருப்பார். எதிரணிக்கு மீள முடியாத சேதாரத்தை அவர் கைகளால் அவர் நெய்யும் லாவகம், எதிரணியே விரும்பும் ஒரு தலைக்கோதல் போன்றது!
இதனால்தான் பாகிஸ்தான் அணியின் இளம் வேகபந்துவீச்சாளர் ஷாநவாஸ் தஹானி ” கிரிக்கெட்டை அழகாக்கும் கலைஞருக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்ல என்னால் நவம்பர் ஐந்து வரை காத்திருக்க முடியாது” என்று முன்கூட்டியே வந்து ” இந்த நாளை அனுபவித்தும், எல்லோரையும் இன்னும் மகிழ்ச்சி அடையவைக்க வாழ்த்துக்கள் சகோதரரே!” என்று அன்பின் சாரலடிக்கும் வார்த்தைகளில், இதயத்திலிருந்து வாழ்த்துகிறார்!
பிறவி கிரிக்கெட்டர்கள் என்று புகழப்பட்டவர்கள் கோலோச்சிய களத்தில், விருப்பத்தால், முயற்சியால், பயிற்சியால் எதனொன்றையும் யாரும் கற்றுத் தேர்ந்து, உலகம் மகிழ்ந்து புகழ, எழுந்து நிற்க முடியுமென உதாரணமாக நிற்கிறார், நவீன ஏகலைவன் விராட் கோலி!
நீங்கள் எப்படியெல்லாம் நலமாக, வளமாக, மகிழ்வாக வாழ நினைத்துள்ளீர்களோ அதைவிட கோடி மடங்கு வாழ்வீர்களாக ஆற்றலரசே!❤️
✍️ Richards