தலைகளை கழட்டிவிட்டு, வால்களிடம் மண்டியிட்ட இந்தியா -இங்கிலாந்தில் சம்பவம் ..!

தலைகளை கழட்டிவிட்டு, வால்களிடம் மண்டியிட்ட இந்தியா -இங்கிலாந்தில் சம்பவம் ..!

இங்கிலாந்து கிரிக்கெட் சுற்றுலா மேற்கொண்டிருக்கும் இந்திய அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையிலான  5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் 4வது போட்டி ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 191 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் பறிகொடுத்தது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து ஆரம்பத்தில் மிகப்பெரிய தடுமாற்றத்தை சந்தித்தது, ஆறு ஓட்டங்கள் எடுத்திருந்தபோது ஆரம்ப வீரர்கள் இருவரும் ஆட்டமிழந்தனர்.

ஒரு கட்டத்தில் ரூட் அடங்கலாக இங்கிலாந்து அணி 62 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்திருந்தது.

முன்னணி துடுப்பாட்ட வீரர்கள் அனைவரும் ஆட்டமிழந்த நிலையில் ஒல்லி போப் மற்றும் பெயர்ஸ்டோ ஆகியோர் மிகச்சிறந்த இணைப்பாட்டம் புரிய இங்கிலாந்து மீண்டது.

முன்னணி வீரர்கள் அனைவரையும் ஆட்டமிழக்கச் செய்து விட்டு, கடைநிலை ஆட்டக்காரர்களிடம் வெளிநாட்டு டெஸ்ட் போட்டிகளில் வாங்கிக் கட்டும் வரலாற்றை அதிகம் கொண்டிருக்கும் இந்தியா, மீண்டும் ஒரு தடவை அதே மாதிரியான ஆபத்து நிலையை சந்தித்தது.

போப், பெயர்ஸ்டோ, மொயின் அலி கிறிஸ் வோக்ஸ் என்று கடைநிலை ஆட்டக்காரர்கள் அனைவரும் மிகச்சிறப்பாக ஓட்டங்களைக் குவிக்க இந்தியாவை விடவும் இங்கிலாந்து 99 ஓட்டங்கள் எனும் பெறுமதியான ஓட்ட எண்ணிக்கையால் முன்னிலை பெற்றுள்ளது.

போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் இந்த தருணத்தில், இரண்டு அணிகளும் தமது முதல் இன்னிங்ஸில் சகல விக்கட்டுக்களையும் இழந்து இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Update.

99 ஓட்டங்களால் பின்னிலையிலிருந்த இந்திய அணி, தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்து இன்று ஆடியது.

இன்றைய நாள் நிறைவு பெறுகின்ற போது இந்தியாவின் ஆரம்ப வீரர்கள் ரோகித் சர்மா மற்றும் லோகேஷ் ராகுல் ஆகியோர் சிறப்பான இணைப்பாட்டம் புரிந்து 43 ஓட்டங்களை பெற்றுள்ளனர்.

நாளை போட்டியின் 3-வது நாள் ஆட்டம் தொடரும்.