தவான், பாண்டியாவுக்கு நெருக்கடி கொடுக்கும் கெய்க்வாட், வெங்கடேஷ்..!
உள்நாட்டில் நடந்துவரும் விஜய் ஹசாரே கோப்பைத் தொடரில் ஷிகர் தவண் தொடர்ந்து சொதப்பி வருகிறார். ஃபார்மில்லாமல் தவித்து வருவதால், ருதுராஜ் கெய்க்வாட்டுக்கான வாய்ப்பு அகன்றுள்ளது.
ஒருநாள் தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக ரோஹித் சர்மா நியமிக்கப்பட்டுள்ள நிலையில், அணி மட்டும் தேர்வாகவில்லை. விஜய் ஹசாரே கோப்பையில் வீரர்கள் விளையாடுவதைப் பார்த்துதான் பிசிசிஐ தேர்வுக்குழு அணியைத் தேர்வு செய்ய இருக்கிறது.
ஆனால், இந்திய அணிக்குள் இரு இளம் வீரர்கள் செல்வது ஏறக்குறைய தேர்வுக் குழுவினர் மனதில் பதிந்துவிட்டது. முதலாமவர் ருதுராஜ் கெய்க்வாட், 2ஆவதாக வெங்கடேஷ் ஐயர். இதில் ருதுராஜ் கெய்க்வாட் 3 சதங்களும், வெங்கடேஷ் 2 சதங்களையும் விஜய் ஹசாரேயில் அடித்து ஃபார்மை நிரூபித்துள்ளனர்.
அதுமட்டுமல்லாமல் நடுப்பகுதியில் 10 ஓவர்கள் வரை வீசி பல முக்கியமான விக்கெட்டுகளை விஜய் ஹசாரே கோப்பையில் வெங்கடேஷ் வீழ்த்தியிருப்பதால், ஹர்திக் பாண்டியா தேவை குறைந்து வருகிறது.
கே.எல்.ராகுல், ரோஹித் சர்மா ஆகிய இரு ஸ்பெஷலிஸ்ட் தொடக்க வீரர்கள் இருக்கும்போது ருதுராஜ் கெய்க்வாட் தேர்வு செய்யப்படுவாரா என்ற கேள்வி எழுகிறது. ஆனால், தவணுக்கு வழங்கப்படும் ரிசர்வ் வீரர் வாய்ப்பு ருதுராஜ் கெய்க்வாட்டுக்குச் செல்லலாம்.
பிசிசிஐ அமைப்பின் தேர்வுக்குழுவில் உள்ள முக்கிய அதிகாரி ஒருவர் கூறுகையில், “தென் ஆப்பிரிக்கா செல்லும் இந்திய ஒருநாள் அணியில் நிச்சயம் வெங்கடேஷ் ஐயர் இடம் பெறுவார். அவரால் 9 முதல் 10 ஓவர்கள் வரை பந்துவீச முடிகிறது என்பது அவரின் தேர்வைக் கூடுதலாக நியாயப்படுத்துகிறது. ஹர்திக் பாண்டியா முழுமையாகத் தேறவில்லை.
ஆதலால், ஹர்திக் பாண்டியா களமிறங்கும் நடுப்பகுதியில் ஆல்ரவுண்டருக்கு வெங்கடேஷைப் பயன்படுத்தலாம். விஜய் ஹசாரே கோப்பைவரை வெங்கடேஷுக்குக் காயம் ஏதும் ஏற்படாவிட்டால் நிச்சயம் அவர் தென் ஆப்பிரிக்கா செல்வார்” எனத் தெரிவித்தார்.
ஐபிஎல் தொடரில் ஆரஞ்சு தொப்பி பெற்ற சிஎஸ்கே வீரர் ருதுராஜ் கெய்க்வாட், தொடக்க வீரருக்கான போட்டியில் இருக்கிறார். கெய்க்வாட் விஜய் ஹசாரே கோப்பையில் அடுத்தடுத்து 3 சதங்கள் அடித்தது தேர்வுக் குழுவினரின் கவனத்தை ஈர்த்துள்ளது. காத்திருப்பு தொடக்க வீரர் தேவை என்பதால், தவாணுக்குப் பதிலாக கெய்க்வாட் தேர்வாகலாம்.
இலங்கைக்கு எதிரான டி20 தொடரில் கெய்க்வாட் தேர்வு பெற்றாலும் ஒரு போட்டியில்கூட களமிறங்க வாய்ப்பு கிடைக்கவில்லை. நியூஸிலாந்துக்கு எதிராக டி20 தொடரிலும் கெய்க்வாட்டுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. ரோஹித் சர்மா, கே.எல்.ராகுல், இஷான் கிஷன் என டாப் ஆர்டரில் வலிமையான வீரர்கள் இருப்பதால், கெய்க்வாட் கடும் போட்டியை எதிர்கொள்ள நேரிடுகிறது.
ஆனால், மறுபுறம் ஷிகர் தவணின் நிலை கவலைக்கிடமாக இருக்கிறது. விஜய் ஹசாரே கோப்பைப் போட்டியில் இதுவரை அவர் 0,12,14, 18 ரன்கள் என 4 போட்டிகளிலும் ஃபார்மில்லாமல் இருக்கிறார். இதனால் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்குத் தேர்வு செய்யப்படுவாரா என்பது சந்தேகம்தான்.
#ABDH