தினேஷ் கார்த்திக்கின் 2 வது இன்னிங்ஸ் அமோகமாய் ஆரம்பம்- சரவெடிதான்..!

தினேஷ் கார்த்திக்கின் 2 வது இன்னிங்ஸ் அமோகமாய் ஆரம்பம்- சரவெடிதான்..!

சி.எஸ்.கே அணி நிர்வாகம் தனது கிரிக்கெட் கேரியரின் இரண்டாவது இன்னிங்சை ஆரம்பிக்கும் 30 வயதிற்கும் மேற்பட்ட வீரர்களைத் தேர்ந்தெடுப்பதிற்குப் பின்னால், திறமை, அனுபவம் தாண்டி உளவியல் காரணம் ஒன்று இருக்கிறது. அது சி.எஸ்.கே அணி நிர்வாகம் திட்டமிடாததாகவும் இருக்கலாம்.

பொதுவாக எல்லா மனிதர்களின் வாழ்க்கையிலும் தங்கள் இளமை பழுக்கும் காலத்திலொரு, கழிந்த இளமையை மீட்கும் பொருட்டு ஒரு சிறு பதட்டமும், கவனக்குவிப்பும் உருவாகும். புதிதாய் தென்படும் ஒரு நரைமுடி, கொஞ்சம் வெளியில் தள்ளி கண்ணாடியில் தெரியும் வயிறு, மாடிப்படிகள் ஏறும்பொழுது உண்டாகும் முதல் களைப்பு இப்படி சிலவைகளை முதலில் உணரும் தருணத்தில், அவைகளைக் களைவதற்கான முயற்சிகளில், பயிற்சிகளில், பழக்கங்களில் ஈடுபடுவார்கள். இதுதான் வாழ்க்கையின் இரண்டாவது இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முதற்புள்ளி.

இப்படி ஒவ்வொரு துறையிலும் மனிதர்களுக்கு இரண்டாவது இன்னிங்ஸ் உண்டு. குறிப்பாய் விளையாட்டு வீரர்களுக்கு. இந்த நேரத்தில் அவர்களின் உழைப்பும், சிரத்தையும், கவனக்குவிப்பும், தான் யாரென்று உலகத்திற்கு நிரூபிக்கும் முனைப்பும், மீண்டும் முதல் இன்னிங்ஸ் ஆரம்பத்தில் இருந்தது போலவே துடிப்பாய், ஒரு உத்வேகத்தோடு இருக்கும். ஆனால் அதில் காலம் தந்த அனுபவங்களும் கலந்திருக்கும்!

தினேஷ் கார்த்தி இப்போது தன் கிரிக்கெட் கேரியரின் இரண்டாவது இன்னிங்சின் முதற்புள்ளியில் நிற்கிறார். ஆனால் சீற்றமில்லாத கடல் கொண்டிருக்கும் பிரமாண்ட அமைதியோடு காட்சியாகிறார். தோனி என்ற கால மனிதரால் இவர் தனக்கான இடத்தைப் பெற முடியாமல் போய்விட்டதென்பது பலரது கூற்று. உண்மையில் தான் யாரென்று உள்நோக்கி ஆய்ந்து கண்டுகொள்ள தவறிவிட்டதால் உண்டான சரிவு அது. பேட்ஸ்மேனாகவும் வாய்ப்புகளைப் பெற்றவர்தான்!

இப்போதுதான் அவரின் மொத்த ஆற்றலையும் ஒன்றுதிரட்டி, சரியான திசையில், புறச்சூழல்களால் உண்டாகும் சலனத்தை விலக்கிவிட்டு செலுத்திக்கொண்டிருக்கிறார். அவரின் கண்களுக்கு இப்போது பந்துவீச்சாளர் தெரிவதில்லை பந்து மட்டுமே தெரிகிறது. ஆட்டத்தை எண்களால் அளக்கிறார். சாத்தியங்களை உணர்கிறார். அதற்கேற்றபடி பேட்டை சுழற்றுகிறார் அவ்வளவுதான். முன்பு இதை அவர் நேரெதிராய் உணர்ந்திருந்தார்!

மனம் தெளிவாய் இருக்கும் போது பிரச்சினைகளுக்கான தீர்வுகளும், வெற்றியடைவதற்கான சாத்தியக்கூறுகளும், போராடுவதற்கான உள உற்சாகமும், ஆர்ப்பாட்டமில்லாத கூர், நேர் நோக்கும் தானாய் அமையும்!

தினேஷ் கார்த்திக் இப்போது தன்னை ஆய்ந்துணர்ந்து தெளிவாய் இருக்கிறார். அது அவரது செயல்களில் தெரிகிறது. அவரைக் கொஞ்சம் கூர்ந்து கவனித்தால் பழைய ஆர்ப்பாட்டமான துறுதுறுப்பை விற்று, உறுதித்தன்மையை வாங்கியிருப்பது புரியும்!

இரண்டாவது இன்னிங்ஸ் சிறப்பாய் அமையட்டும்!

#Richards