திமுத் கருணாரத்ன -200 வது 200 – துடுப்பாட்டத்தில் தூள்கிளப்பும் இலங்கை…!

இலங்கைக் கிரிக்கெட் அணியின் தலைவர் திமுத் கருணாரத்ன தன்னுடைய முதலாவது இரட்டை சதத்தை இன்றைய நாளில் பூர்த்தி செய்துள்ளார்.

பங்களாதேஷ் அணியுடனான முதலாவது டெஸ்ட் போட்டியின் இன்றைய 4ம் நாளில் கருணாரத்ன இந்த சாதனைக்கு சொந்தக்காரரானார். 71 வது டெஸ்ட் போட்டியில் விளையாடும் இவர், தனது 11 வது சதத்தை இரட்டை சதமாக மாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சர்வதேச கிரிக்கெட்டில் 200 ஓட்டங்களைக் கடக்கும் 200 வது வீரர் எனும் பெருமையும் திமுத் கருணாரத்னவுக்கு கிடைத்துள்ளது. சர்வதேச கிரிக்கெட்டில் முதல் இரட்டை சதத்தை அவுஸ்திரேலியாவின் பில்லி முர்டோக் 1884 ம் ஆண்டு பெற்றுக்கொண்டார்.

இன்றைய போட்டியில் அணித்தலைவர் திமுத் கருணாரத்ன மற்றும் தனஞ்சய டி சில்வா ஆகியோர் 4 வது விக்கெட்டில் பிரிக்கப்படாத 322 ஓட்டங்களைக் குவித்துள்ளனர்.

இலங்கை அணி, போதிய வெளிச்சமின்மை காரணமாக போட்டி இடைநிறுத்தப்படும் வரை 3 விக்கெட்டுக்களை இழந்து 512 ஓட்டங்களை பெற்றுள்ளது.

 

 

 

 

 

 

 

 

 

 

திமுத் கருணாரத்ன 234 ஓட்டங்களையும் , தனஞ்சய டி சில்வா 154 ஓட்டங்களையும் ஆட்டம் இழக்காத நிலையில் பெற்றுக்கொண்டுள்ளனர். பங்களாதேஷ் அணி முன்னதாக தமது முதல் இன்னிங்சில் 7 விக்கெட் இழப்புக்கு 541 ஓட்டங்களை பெற்றது.

போட்டியின் 5 வதும் இறுதியான நாள் நாளையாகும்.