திருகோணமலை கடற்படைத் தளத்திற்கு வெளியே மஹிந்தவைக் குற்றம் சாட்டி பொதுமக்கள் போராட்டம்..!

திருகோணமலை கடற்படைத் தளத்திற்கு வெளியே மஹிந்தவைக் குற்றம் சாட்டி பொதுமக்கள் போராட்டம்..!

திருகோணமலை கடற்படை முகாமில் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச இருப்பதாக வெளியான தகவலையடுத்து பொதுமக்கள் அதற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

முன்னாள் பிரதமர் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் சிலர் கொழும்பில் உள்ள அலரிமாளிகையில் இருந்து புறப்பட்டு இன்று காலை திருகோணமலை கடற்படை தளத்தை சென்றடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நேற்று காலை மகிந்த ராஜபக்சவை சந்தித்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) ஆதரவாளர்கள் நேற்று அலரிமாளிகைக்கு வெளியேயும், கொழும்பு காலி முகத்திடலிலும் அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தியதை அடுத்து இலங்கை முழுவதும் அமைதியின்மை ஏற்பட்டது.

அமைதியின்மையைத் தொடர்ந்து, இலங்கையின் பிரதமர் பதவியில் இருந்து மஹிந்த ராஜபக்ச ராஜினாமா செய்தார்.

ஆத்திரமடைந்த பொதுமக்கள் நேற்று இரவு அலரிமாளிகைக்குள் நுழைய முற்பட்டதைக் கண்டு, முன்னாள் பிரதமர் இன்று அதிகாலை விசேட நடவடிக்கையின் கீழ் அந்த வளாகத்தில் இருந்து வெளியேற்றப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அவர் தனது குடும்ப உறுப்பினர்கள் சிலருடன் இன்று காலை திருகோணமலை கடற்படைத் தளத்தை சென்றடைந்துள்ளதாக பின்னர் தகவல்கள் வெளியாகியதையடுத்து, பொதுமக்கள் அந்த தளத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆர்ப்பாட்டக்காரர்கள், முன்னாள் பிரதமரை வெளியேறுமாறும், கடற்படையினருக்கு பாதுகாப்பு வழங்குவதை தவிர்க்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

எவ்வாறாயினும், குறித்த இடத்தில் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் இருக்கிறார்களா என்பது உறுதிப்படுத்தப்படவில்லை.