வவுனியாவில் இருந்து திருக்கோணமலை நோக்கி பயணித்த இளைஞரொருவர் யானை தாக்கி உயிரிழந்துள்ளதாக கெப்பித்திகொல்லாவ பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் இன்று (19) மாலை இடம்பெற்றுள்ளது.
இவ்வாறு உயிரிழந்தவர் திருக்கோணமலை பகுதியைச் சேர்ந்த சிவபாலசுந்தரம் மயூரன் (33வயது) எனவும் தெரியவருகின்றது.
69வது தேசிய பூப்பந்தாட்ட விளையாட்டு நிகழ்வு கொழும்பில் நடைபெற்று வருகின்ற நிலையில் இவர் அதன் நடுவராக செயற்பட்டு வந்துள்ளார்.
கொழும்பில் இருந்து வவுனியா நோக்கி ரயிலில் வருகை தந்த அவர் ,மீண்டும் மோட்டார் சைக்கிளில் திருக்கோணமலை நோக்கி சென்றுகொண்டிருந்தபோது வீதியை கடக்க முற்பட்ட யானை இவரை தாக்கியதாகவும் தெரியவருகின்றது.
விசாரணைகளை கெப்பித்திகொல்லாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
செய்தி மூலம்-(பதுர்தீன் சியானா) & சிவா ராமசாமி
திருக்கோணமலை ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரியின் பழைய மாணவரான மயூரன் ,கிழக்கு பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ துறையின் பட்டதாரியாகவும் பட்டத்தை பெற்றுக் கொண்டவர் .
திருக்கோணமலை மண்ணில் மட்டுமல்லாது இலங்கையின் விளையாட்டுத் துறையின் அபரிமிதமான சாதனையாளராகவும் தன்னை அர்ப்பணித்து செயலாற்றியவர் மயூரன் .
இலங்கையின் பல் துறை விளையாட்டுத்துறை ஆளுமைகளில் ஒருவராக, மிகச் சிறந்த விளையாட்டு நடுவர்களுள் ஒருவராக பல்வேறு கட்டங்களில் சித்திபெற்ற திறமையாளன்,மெய்வல்லுனர்களை வழிப்படுத்துவதற்கான ஒரு வழிகாட்டல் நூல் ஒன்றையும் மயூரன் எழுதி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஶ்ரீ லங்கா கிரிக்கட்டின் Level 5 கிரிக்கட் நடுவராகவும், இலங்கை மெய்வல்லுனர் சங்கத்தின் Level 2 நடுவராகவும் மயூரன் விளங்கியவர். 69வது தேசிய பூப்பந்தாட்ட விளையாட்டு நிகழ்வு கொழும்பில் நடைபெற்ற நிலையில், அதன் நடுவராக செயற்பட்டுவிட்டு திருமலை திரும்புகையிலேயே இவரது மரணமும் சம்பவித்துள்ளது.
தன் வாழ்நாள் முழுவதையும் விளையாட்டுக்காக அர்ப்பணித்த ஒருவர் இளம் வயதிலேயே காவுகொள்ளப்பட்டுள்ளமை பெரும் வேதனைக்குரிய விடயமாகும்.
மயூரனின் ஆத்ம சாந்திக்காக வேண்டி எமது ஆத்மார்த்த பிரார்த்தனைகள் ?
மயூரனின் விளையாட்டுத்துறை சார்பான நினைவுத் தொகுப்புக்கள் ?