திலங்க சுமதிபாலவின் கட்டுப்பாட்டில்தான் இன்னும் ஸ்ரீலங்கா கிரிக்கெட் செயற்படுகிறதா ? – புதிய சந்தேகம்…!
இங்கிலாந்துக் கிரிக்கெட் சுற்றுலாவை மேற்கொண்டிருந்த இலங்கை அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையிலான தொடரின் போது இலங்கையின் முக்கிய வீரர்கள் குசல் மெண்டிஸ் ,குணதிலக, டிக்வெல் ஆகிய மூன்று வீரர்களும் Bio Bubble முறையை மீறியதன் அடிப்படையில் இவர்கள் உடனடியாக இலங்கை அழைக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு ஓராண்டு தடை விதிக்கப்பட்டது .
இந்த நிலையில் இங்கிலாந்து தொடரின்போது இலங்கை கிரிக்கெட் அணியின் முகாமையாளர் மஞ்சுளா காரியப்பெரும தனது பொறுப்பில் சரியாக செயல்படவில்லை என்பதை காரணம் காட்டி அவரை நீக்குவதற்கு ஸ்ரீலங்கா கிரிக்கெட் ஆலோசனைக் குழு நடவடிக்கை மேற்கொண்டது.
குமார் சங்கக்கார, முத்தையா முரளிதரன், மஹாநாம மற்றும் மஹேல ஜெயவர்த்தன உள்ளடக்கிய கிரிக்கட் ஆலோசனைக் குழு (Cricket Advisory committee) இதற்கான ஆலோசனையை முன்வைத்து மஹிந்த ஹலங்கொடவை நியமிக்க பரிந்துரைைத்தது.

ஆயினும் இந்த ஆலோசனைகளை ஸ்ரீ லங்கா கிரிக்கெட்டின் உதவிதலைவர் ஜெயந்த தரமதாச செவிமடுக்கவில்லை என தெரியவருகிறது.
ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் முன்னாள் தலைவரான திலங்க சுமதிபாலவின் நெருங்கிய நண்பரான மஞ்சுளா காரியப்பெருமவின் பதவியில் கை வைப்பதற்கு அவர் இணக்கம் தெரிவிக்கவில்லை எனவும் செய்திகள் வெளிவருகின்றன.

அரவிந்த டி சில்வா தலைமையிலான Technical Committee யும் திலங்க சுமதிபாலவுக்கு பயந்து நடப்பதாகவும் சந்தேகம் எழுப்பப்பட்டுள்ளது, இலங்கை கிரிக்கெட்டின் முன்னாள் தலைவரான திலங்க சுமதிபால மறைமுகமாக இன்னும் ஸ்ரீ லங்கா கிரிக்கெட்டை கட்டுப் படுத்திக் கொண்டிருக்கிறார் என்பது இதன் மூலமாக புரியவருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.