தோனி – ஓர் தலைமைத்துவத்தின் முழுமை ❤️

ஒரு வீரரின் ஆட்ட பாணி மட்டுல்லாது அவர் நடை, உடை, பாவனை, பேச்சுமுறை, சிகையலங்காரம் வரை சமுதாயத்தில் எந்தளவில் ஊடுருவியுள்ளது என்பதை வைத்தே, அவர்கள் அவர்களின் துறையில் எப்படியான சாதனைகளைச் செய்துள்ளார்கள் என்பதோடு, மக்களின் மனதை எந்தளவிற்கு வென்றுள்ளார்கள், அத்துறை நோக்கி இளைஞர்களை எந்தளவிற்கு ஈர்த்துள்ளார்கள் என்று தெரிந்து கொள்ளலாம்!

உச்சிவெயில் கொளுத்த, உழவோட்டி போட்ட மேட்டுக்காட்டில், பனைமரத்தை ஸ்டம்பாக்கி, தென்ன மட்டையை பேட்டாக்கி, பந்தை குத்திப்போட்டால் எழும்பாதென்று, காற்றில் சிறுவனொருவன் வீச நிற்க, காரணமே இல்லாமல் கால் கவட்டையில் கை வைத்து, எதையோ சரி செய்துகொண்டு நிற்பான் தென்னமட்டை பேட்ஸ்மேன் சிறுவன்.

சச்சின் என்ற சரித்திரம் தன் கிட்னி கார்டை சரிசெய்து கொள்வதைக்கூட ஏன் எதற்கென்று தெரியாமல், அப்படியே அவரைப் பின்பற்றுமளவுக்கு அவர் மக்களின் மனதை வென்றிருந்ததின் சாட்சிதான் அந்தக் காட்சி!

M.R.F ஸ்டிக்கர் ஒட்டிய பேட்டுகள், மற்ற பேட்டுகளை விட ஒரு ஐம்பது ரூபாய் அதிகமாய் விற்பார்கள். உயரம் குறைவாய் இருக்கின்ற காரணத்துக்காகவே, நல்லா விளையாடுவான் என்று தெரு அணியில் சிறுவர்கள் சேர்த்துக்கொள்ளப் பட்டதெல்லாம் உண்டு. அவுட்டாகி நிற்கும் சிறுவன், அடுத்து வரும் சிறுவனுக்கு பேட்டை தராமல், அவுட்டான பழியை பேட் மேல் போட்டுக்கொண்டிருப்பான். த்ரோ மேட்ச்சின் இடையில் பிட்ச்சை சரி செய்கிறேன் என்று ஒரு சிறுவன் பேட்டால் தட்டிக்கொண்டிருப்பான். இப்படி இன்னுமின்னும் நிறைய உண்டு; சச்சின் சாமான்ய மக்களிடமும், தொழில்முறை இளம் வீரர்களிடமும் உருவாக்கிய தாக்கங்கள். இதுவெல்லாம் நானும் செய்தது!

காலம் மெதுவாய் உருள்கிறது. நீண்ட தலைமுடி வளர்த்த சிலபலரை பேட்டோடு மைதானங்களில் பார்க்க முடிகிறது. முப்பது ரூபாய் பந்தய ஆட்டத்தில் சிறுவனொருவன் காற்று வீசும் பக்கம் அடி ஈஸியா சிக்ஸாகும் என்கிறான். பந்தை தூக்கியடித்து விட்டு விரக்தியாய் கேட்சாவதை பார்த்து நிற்பவனை, எதிர்முனையில் இருக்கும் பேட்ஸ்மேன் பையன் ஓடி பிட்ச் கிராஸ் செய்ய கத்துகிறான்.

ஸ்டம்புகளுக்கு பின்னால் யார் வந்து நின்றாலும் ஊமையாகி போகிறார்கள். சுலபமாய் அடிக்கக்கூடிய ஓவர் பிட்ச் பந்தை ஒருவன் கஷ்டப்பட்டு, பேட்டால் தலையைச் சுற்றி அடிக்கிறான். இந்தக் காட்சிகளுக்கான காரணகர்த்தா மகேந்திர சிங் தோனி! இதெல்லாம் நான் பார்த்தது!

சச்சின் விடைபெறும் போட்டியில் தோனி “இனி இதற்கடுத்து இதுபோன்ற விடைபெறும் நிகழ்வு வேறொரு இந்திய வீரருக்கு நிகழ பத்தாண்டுகள் ஆகலாம்” என்றிருந்தார். அது அவர் தன்னை வைத்துச் சொன்னதில்லை. விராட்-ரோகித் போன்ற இளம் வீரர்களை மனதில் வைத்துதான் சொல்லியிருந்தார். ஆனால் அவரின் வார்த்தைகள் அவருக்குத்தான் முதலில் பொருந்தும்!

சச்சினிற்கு அடுத்து தொழில்முறை கிரிக்கெட் வீரர்கள் தாண்டி சாமான்ய மக்கள் வரை தன் பெயரை அதிகளவில் ஊடுருவ வைத்த ஒரு வீரர் என்றால் மகேந்திர சிங் தோனிதான்!

தலைமைத்துவத்தின் முழுமை!

?RichardS