தோனி குறித்து கேகேஆரின் பதிவுக்கு பதிலடி கொடுத்த ஜடேஜா
போட்டிக்கு ஏற்றவாறு தோனி ஆக்ரோஷமாக விளையாடுவதும், நிதானமாக விளையாடுவதும் மிகச்சிறப்பான விஷயமாக பார்க்கப்படுகிறது. ஆனால் அதனை ஆஷஸ் டெஸ்ட் தொடரில் நடந்த ஒரு சம்பவத்துடன் ஒப்பிட்டு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கிண்டலடித்துள்ளது.
இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 4வது டெஸ்ட் போட்டி படு விறுவிறுப்பாக நடைபெற்று சமனில் முடிவடைந்தது. நேற்று ஆஸ்திரேலிய அணி வெற்றி பெறும் என்ற சூழல் இருந்த நிலையில் இங்கிலாந்தின் 10வது விக்கெட் வீரர்கள் நிலைத்து நின்றனர். இதனால் கடைசி பந்தில் ஒரு விக்கெட் எடுத்தால் ஆஸ்திரேலியா வெற்றி, இல்லையென்றால் சமன் என்ற சூழல் இருந்தது.
அப்போது இங்கிலாந்தின் கடைசி வீரர் ஆண்டர்சனின் விக்கெட்டை எடுக்க ஆஸ்திரேலிய அணியின் அனைத்து வீரர்களும் பேட்ஸ்மேனை சுற்றி நின்றனர். இதுகுறித்த புகைப்படம் இணையத்தில் வைரலானது. இந்நிலையில் இந்த புகைப்படத்துடன் தோனியின் புகைப்படத்தை ஒப்பிட்டு கொல்கத்தா அணி ட்வீட் ஒன்று போட்டுள்ளது.
அதாவது 2016ஆம் ஆண்டு ஐபிஎல்-ல் கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் புனே அணி அடுத்தடுத்து விக்கெட்களை இழந்து தடுமாறியது. கடைசி வரை நிற்கவேண்டிய கட்டயாத்தில் இருந்த தோனிக்கு மேலும் நெருக்கடியை ஏற்படுத்த அவரை சுற்றி ஃபீல்டர்களை நிற்கவைத்தார் கம்பீர். தோனிக்கு இப்படி ஒரு ஃபீல்ட் செட்டிங்கா என அப்போது அந்த புகைப்படம் வைரலானது. ஆனால் தோனியின் விக்கெட் போகவில்லை. 22 பந்துகளில் 8 ரன்கள் எடுத்து கடைசிவரை களத்தில் இருந்தார்.
இதுகுறித்து பதிவிட்டுள்ள கொல்கத்தா அணி, இன்று நடந்த இந்த நிகழ்வு 2016இல் ஐபிஎல் டி20 போட்டியில் நடந்த ஒரு மாஸ்டர் ஸ்ட்ரோக் ( தப்பிக்க முடியாதவாறு தோனிக்கு விரித்த வலை) நிகழ்வை நினைவுப்படுத்துகிறது என குறிப்பிட்டிருந்தது. இதனால் அதிருப்தியடைந்த ரவீந்திர ஜடேஜா, கேகேஆர் அணியின் ட்வீட்டிற்கு, இது ஒன்றும் மாஸ்டர் ஸ்ட்ரோக் இல்லை, வெறும் வெட்டி விளம்பரம் தான் தான் எனக்குறிப்பிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் தரமான பதிலடி என கொண்டாடி வருகின்றனர்.
Its not a master stroke!Just a show off
— Ravindrasinh jadeja (@imjadeja) January 9, 2022
ரவீந்திர ஜடேஜா, தோனியின் மிக நெருங்கிய நண்பர் ஆவார். இந்தாண்டு மெகா ஏலத்தில் கூட ஜடேஜாவை முதன்மை தேர்வாக முன்னிறுத்தி ரூ.16 கோடிக்கு தக்கவைக்கும் படி செய்த தோனி, தன்னை ரூ.12 கோடிக்கு 2ஆவது தேர்வாக தக்கவைத்துக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
#Abdh