‘நான் அவமானப்பட வேண்டியவன் இல்லை’ – வைரலாகும் அஸ்வின் பதிலடி!
ஐபிஎல் தொடரின் 41ஆவது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் விளையாடின. இப்போட்டியில் கொல்கத்தா கேப்டன் இயான் மோர்கனுடன் டெல்லி வீரர் அஸ்வின் மோதியது சர்ச்சையாக வெடித்தது. இந்த போட்டியில் டெல்லி அணி பேட்டிங் செய்த போது வெங்கடேஷ் வீசிய 19ஆவது ஓவரில், பந்த் ஒரு ரன் அடித்துவிட்டு ஓடினார்.
அதன்பின் திரிபாதி பந்தை தடுத்து அதை தூக்கி வீசிய போது, பந்து பந்த் உடலில் பட்டு எதிர் திசையில் சென்றது. இதை பயன்படுத்தி அஸ்வின் இரண்டாவது ரன் ஓட கூப்பிட்டார். பந்தும் அஸ்வின் சொன்னதை கேட்டு இரண்டாவது ரன் ஓடினார். இதன் காரணமாக அஸ்வினுடன் இயான் மோர்கன் சண்டைக்கு சென்றார்.
உடலில் பட்டு ரன் ஓடுவது கிரிக்கெட் வரையறைக்கு எதிரானது. இப்படி எல்லாம் செய்ய கூடாது என்று மோர்கன் அஸ்வினிடம் சண்டைக்கு சென்றார். இதனால் மைதானத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக அஸ்வினும் இயான் மோர்கனிடம் கோபமாக பதில் அளித்தார். அஸ்வின் இப்படி ஆக்ரோஷமாக நடந்து கொண்டதை ஷேன் வார்னே உள்ளிட்ட பல வீரர்கள் விமர்சனம் செய்து இருந்தனர். சர்வதேச ஊடகங்களும் அஸ்வினை விமர்சனம் செய்து இருந்தன.
இந்த நிலையில் தற்போது அஸ்வின் இந்த சர்ச்சைகளுக்கு விளக்கம் அளித்துள்ளார். அதில்,
“1. பில்டர் பந்தை தூக்கி எறிந்துவிட்டார் என்பது தெரிந்த அடுத்த நொடியே நான் ஓட தொடங்கிவிட்டேன். பந்து பந்த் மீது அடித்து ஓடியது எனக்கு தெரியாது.
2. ஒருவேளை பந்து பந்த் மீது அடித்தது தெரிந்தால் நான் ஓடி இருப்பேனா? கண்டிப்பாக ஓடி இருப்பேன். விதியில் அதற்கு இடம் உள்ளது.
3. மோர்கன் சொன்னது போல நான் அவமானப்பட வேண்டியவரா? கண்டிப்பாக இல்லை.
4. நான் சண்டை போட்டனா இல்லை, நான் எனக்காக நின்றேன்.
என்னுடைய ஆசிரியர்களும், பெற்றோரும் நான் குழந்தையாக இருக்கும் போதே உனக்காக நீ எழுந்து நிற்க வேண்டும் என்று கூறியுள்ளார். அதைத்தான் நான் செய்தேன். மோர்கானோ, சவுதியோ தங்களுக்கு கிரிக்கெட்டில் எது நியாயம் என்று படுகிறதோ அதை செய்யலாம். ஆனால் அவர்கள்தான் உயர்ந்தவர்கள் என்று நினைத்துக்கொண்டு அவமானகரமான வார்த்தைகளை பயன்படுத்த கூடாது.
இதில் ஆச்சர்யமான விஷயம் என்னவென்றால் மக்கள் சிலர் இதை விவாதம் செய்கிறார்கள். யார் இதில் நல்லவர், கெட்டவர் என்று எதை வைத்து விவாதம் மேற்கொண்டு வருகிறார்கள். கிரிக்கெட் என்பது ஜென்டில்மேன் கேம் என்று சொல்லும் ரசிகர்களுக்கு ஒன்று சொல்கிறேன், கிரிக்கெட் என்பதை நாங்கள் எங்கள் கெரியராக ஆடி வருகிறோம்.
இந்த கிரிக்கெட்டில் ஒரு தவறாக த்ரோ மூலம் கிடைக்கும் கூடுதல் ரன் உங்கள் கெரியரை உருவாக்கும் வாய்ப்பும் உள்ளது, நான் ஸ்டிரைக்கர் எண்டில் உள்ளவர் சில யார்டு தூரம் முன்பே ஓடி நின்று கொள்வது (மன் கட் சர்ச்சையை குறிப்பிடுகிறார்) உங்கள் கெரியரை காலி செய்யவும் வாய்ப்பு உள்ளது. நீங்கள் ரன் ஓடவில்லை என்றாலோ, நான் ஸ்டிரைக்கர் எண்டில் உள்ளவரை எச்சரிக்கை செய்யவில்லை என்றாலோ ஒருவரை நல்லவர் என்று சொல்லி நீங்கள் குழப்ப கூடாது.
ஏனென்றால் உங்களை நல்லவர், கெட்டவர் என்று சரிட்டிபிகேட் கொடுக்கும் நபர்கள் எல்லாம் ஏற்கனவே அவர்கள் வாழ்க்கையில் சாதித்து செட்டில் ஆகிவிட்டனர். மைதானத்தில் ஆடும் போது உங்கள் உடல், பொருள், ஆவியை கொடுத்து, விதிகளுக்கு கட்டுப்பட்டு நடங்கள். ஆட்டம் முடிந்த பின் கைகுலுக்கிக் கொள்ளுங்கள்.என்னை பொறுத்தவரை அதுதான் ஸ்பிரிட் ஆப் கிரிக்கெட் தவிர வேறு ஒன்றும் கிடையாது” என்று அஸ்வின் விளக்கம் அளித்துள்ளார்..
#ABDH