நான் ஒன்றும் 75 கிடையாது இப்போதுதான் 35- இந்திய தேர்வாளர்களை சாடிய ஜாக்சன்..!

சௌராஷ்டிரா வீரர் ஷெல்டன் ஜாக்சன், நியூசிலாந்து ‘A’ அணிக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெறவுள்ள நான்கு நாள் போட்டிகளுக்கான இந்திய ‘A’ அணியில் இடம் பெறாதது வருத்தம் அளிப்பதாக தெரிவித்துள்ளார்.

நியூசிலாந்து ‘A’ அணிக்கு எதிரான மூன்று நான்கு நாள் போட்டிகளுக்கான இந்திய ‘A’ அணியை இந்திய மூத்த தேர்வுக் குழு புதன்கிழமை (ஆகஸ்ட் 24) அறிவித்தது.

16 பேர் கொண்ட அணியில் பிரியங்க் பஞ்சால், அபிமன்யு ஈஸ்வரன், ருதுராஜ் கெய்க்வாட், சர்ஃபராஸ் கான், கே.எஸ்.பாரத், குல்தீப் யாதவ், ராகுல் சாஹர், பிரசித் கிருஷ்ணா உள்ளிட்ட இந்தியாவின் சிறந்த வீரர்கள் பலர் அணியில் உள்ளனர்.

இருப்பினும், கடந்த சில சீசன்களில் ரஞ்சி டிராபியில் அதிக ரன்களை குவித்த போதிலும் ஜாக்சன் தேர்வாளர்களது கவனத்தை ஈர்க்கவில்லை.

எனக்கு வயது 75 இல்லை 35 என தனது வருத்தத்தை டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

 

”ஷெல்டன் ஜாக்சன் 2019 இல் சவுராஷ்டிராவின் முதல் ரஞ்சி டிராபி வெற்றியில் முக்கிய பங்கு வகித்தார். வலது கை ஆட்டக்காரர் 2019-20 ரஞ்சி சீசனில் 809 ரன்கள் குவித்தார், அதே நேரத்தில் அவர் 2018-19 இல் 856 ரன்கள் எடுத்தார்.

கோவிட்-19 தொற்றுநோய் காரணமாக கடந்த சீசனில் ரஞ்சி டிராபியை நடத்த முடியவில்லை என்றாலும், ஜாக்சன் இந்த ஆண்டு ஐந்து இன்னிங்ஸ்களில் 78.25 சராசரியில் 313 ரன்கள் குவித்தார்.

ஒட்டுமொத்தமாக, ஷெல்டன் ஜாக்சன் 79 முதல்தர போட்டிகளில் 19 சதங்கள் மற்றும் 31 அரைசதங்களுடன் 50.39 சராசரியில் 5947 ரன்கள் எடுத்துள்ளார் ஆயினும் அவரது வயது மூப்பின் காரணமாக தேர்வாளர்கள் வாய்ப்பை மறுக்கும் நிலையிலேயே ஜாக்சன் தன் வேதனையை டுவிட்டரில் பகிர்ந்துள்ளார்.