நீதான்யா பேட்ஸ்மேன்.. தமிழக வீரர் சாய் சுதர்சனுக்காக எழுந்து நின்ற மைதானம்.. என்ன ஆட்டம்!
2025 ஐபிஎல் தொடரின் பிளே ஆஃப் சுற்றில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராகத் தனி ஆளாகப் போராடிய குஜராத் டைட்டன்ஸ் அணியின் சாய் சுதர்சன் 49 பந்துகளில் 80 ரன்கள் எடுத்தார். 229 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி குஜராத் டைட்டன்ஸ் அணி விளையாடியபோது, அவர் துவக்க வீரராகக் களமிறங்கி 16வது ஓவர் வரை நின்று விளையாடினார்.
குசல் மெண்டிஸ் 20 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதன் பிறகு வாஷிங்டன் சுந்தர் உடன் இணைந்து அபாரமாக ரன் சேர்த்தார் சாய் சுதர்சன். வாஷிங்டன் சுந்தர் 24 பந்துகளில் 48 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மறுபுறம் சாய் சுதர்சனும் அதிரடியாக விளையாடினார். அவர் 49 பந்துகளில் 80 ரன்கள் எடுத்த நிலையில், ரிச்சர்ட் கிளீசன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
அவர் வெளியேறியபோது குஜராத் டைட்டன்ஸ் அணி இனி வெற்றி பெறுமா என்ற சந்தேகம் இருந்தது. அவர் விக்கெட் இழந்ததைப் பார்த்து குஜராத் டைட்டன்ஸ் அணியின் ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்து போனார்கள். “இனி நம் அணி அவ்வளவுதான்” என அவர்கள் நிலைகுலைந்து காணப்பட்டனர்.
அதேசமயம், மைதானத்தில் இருந்த அனைத்து ரசிகர்களும் எழுந்து நின்று சாய் சுதர்சனின் ஆட்டத்துக்குக் கைதட்டினர். இந்த ஆண்டு ஐபிஎல் தொடரின் தலைசிறந்த பேட்ஸ்மேனாக பெயர் பெற்று இருக்கிறார் சாய் சுதர்சன்.
இதற்கு முன் 2023 ஐபிஎல் இறுதிப் போட்டியிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக சாய் சுதர்சன் 47 பந்துகளில் 96 ரன்கள் எடுத்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்து இருந்தார். அந்தப் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி தோல்வி அடைந்ததால் அவருக்கு உரிய கவனம் கிடைக்காமல் போனது.
ஆனால், 2025 ஐபிஎல் தொடரில் ஒவ்வொரு போட்டியிலும் அபாரமாக ரன் சேர்த்து சாய் சுதர்சன் சிறப்பாகச் செயல்பட்டு இருக்கிறார். இந்த ஆண்டு 700 ரன்களுக்கு மேல் குவித்து மாபெரும் கவனயீர்ப்பைச் செய்து இருக்கிறார் சாய் சுதர்சன். மேலும், பிளே ஆஃப் போன்ற முக்கிய போட்டியிலும் அதிரடியாக விளையாடி 49 பந்துகளில் 80 ரன்கள் சேர்த்து இருக்கிறார்.