பங்களாதேஷில் தொடரை வென்றது இலங்கை அணி..!

பங்களாதேஷ் அணிக்கெதிரான மூன்றாவது T20 கிரிக்கெட் போட்டியில் நுவான் துஷார Hat trick  விக்கெட்டுகளுடன் வெளிப்படுத்திய சிறப்பான பந்துவீச்சினால் இலங்கை அணி 28 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றியை பதிவு செய்து தொடரை 2-1 என இன்று (9) கைப்பற்றியது.

சில்ஹெட்டில் நடைபெற்ற இப்போட்டியில் 175 எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்திய பங்களாதேஷ் அணி 19.4 ஓவர்கள் முடிவில் 146 மட்டுமே எடுக்க முடிந்தது.

இன்னிங்ஸின் முதல் 6 விக்கெட்டுகள் 32 க்கு வீழ்ந்தன. பங்களாதேஷ் இன்னிங்ஸின் நான்காவது ஓவரின் இரண்டாவது, மூன்றாவது மற்றும் நான்காவது பந்துகளில் துஷார மூன்று விக்கெட்டுகளை (Hat trick) வீழ்த்தினார். நஜ்முல் ஹொசைன் சாண்டோ, தவ்ஹித் ஹிரிடோய் மற்றும் மஹ்முதுல்லா ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

இதற்கு முன் திசர பெரேரா, லசித் மலிங்கா (இரண்டு முறை), அகில தனஞ்சய மற்றும் வனிது ஹசரங்க ஆகியோர் T20 சர்வதேச போட்டிகளில் இலங்கைக்காக Hat trick விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர்.

இன்னிங்ஸின் 7வது விக்கெட்டுக்கு, மஹேதி ஹாசன் மற்றும் ரிஷாத் ஹொசைன் 44 (31) ஓட்டங்களை பெற்றனர். மஹேதி 19 ஓட்டங்களில் ஆட்டமிழக்க, பங்களாதேஷ் அணிக்கு நம்பிக்கையை ஏற்படுத்திய ரிஷாத் 30 பந்துகளில் 53  எடுத்தார். தஸ்கின் அகமது 31 பெற்றார்.

பந்துவீச்சில் இரண்டாவது இருபதுக்கு 20 போட்டியில் மத்திஷ பத்திரன காயம் அடைந்ததன் காரணமாக இந்தப் போட்டிக்கு அழைக்கப்பட்ட நுவன் துஷார 20 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களையும், வனிது ஹசரங்க 32 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.

பங்களாதேஷின் அழைப்பின் பேரில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 7 விக்கெட் இழப்புக்கு 174 ஓட்டங்களைப் பெற்றது.

இப்போட்டியில் அவிஷ்க பெர்னாண்டோவிற்கு பதிலாக அணிக்கு அழைக்கப்பட்ட தனஞ்சய டி சில்வா, குசல் மெண்டிஸுடன் இன்னிங்ஸை ஆரம்பித்தார், தனஞ்சய 8 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.

கமிது மெண்டிஸ் 12 , வனிது ஹசரங்க 15, சரித் அசலங்க 3  ஓட்டங்கள் பெற்று ஆட்டமிழந்தனர். குசல் மெண்டிஸ் 55 பந்துகளில் 86 எடுத்தார். தலா 6 சிக்ஸர்கள் மற்றும் 6 பவுண்டரிகள் அவரது இன்னிங்ஸை வண்ணமயமாக்கின.

ஏஞ்சலோ மேத்யூஸ் 10 , தசுன் ஷனக 9 பந்துகளில் 19 ஓட்டங்களைப் பெற்றார். சதீர சமரவிக்ரம 7 ஓட்டங்கள் நாட் அவுட்.

பந்துவீச்சில் தஸ்கின் அஹமட் மற்றும் ரிஷாட் ஹொசைன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.