பங்களாதேஷுக்கு இன்னுமொரு அதிர்ச்சி- முதல் ஒருநாள் ஆட்டத்தில் திரில் வெற்றிபெற்ற ஜிம்பாப்வே…!

சிக்கந்தர் ராசா மற்றும் இன்னசென்ட் கையாவின் அபாரமான பேட்டிங்கால் 304 ரன்கள் என்ற அபார இலக்கை வென்று வங்கதேசத்துக்கு மற்றொரு தோல்வியை பரிசளித்தது ஜிம்பாப்வே அணி.!

பங்களாதேஷ் மற்றும் ஜிம்பாப்வே கிரிக்கெட் அணிகளுக்கிடையிலான சுற்றுப்பயணத்தில் இருபதுக்கு 20 தொடரை அண்மையில் 2-1 என்ற கணக்கில் வெற்றிபெற்றது ஜிம்பாப்வே அணி, இந்தநிலையில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் இன்று ஆரம்பமானது.

இன்று நடைபெற்ற முதல் போட்டியில்  5 விக்கெட் வித்தியாசத்தில் அவமானகரமான தோல்வியை வங்கதேசத்துக்கு பரிசளித்ததன் மூலம் ஒரு நாள் போட்டியை நடத்தும் ஜிம்பாப்வே 1-0 என தொடரில் முன்னிலை பெற்றது.

இன்றைய போட்டியில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி கேப்டன் வங்கதேச அணியை முதலில் பேட்டிங் செய்ய அழைத்தார்.

இந்த சவாலை வெற்றிகரமாக ஏற்றுக்கொண்ட பங்களாதேஷ் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 303 ரன்கள் எடுத்தது. பங்களாதேஷ் அணியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய லிட்டன் தாஸ் ஒரு அபாரமான சிக்ஸர் மற்றும் 9 பவுண்டரிகள் விளாசி 81 ரன்கள் எடுத்தார்.

அபாரமாக ஆடிய அனமுல் ஹக் 72 ரன்கள் எடுத்தார். கேப்டன் தமிம் இக்பால் 62 ரன்கள் எடுத்தார். பந்துவீச்சில் சிக்கந்தர் ராசா மற்றும் விக்டர் நியுச்சி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.

அதன்படி, 304 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய ஜிம்பாப்வே அணி 48.2 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 307 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

ஜிம்பாப்வே இன்னிங்சில் அதிகபட்சமாக சிக்கந்தர் ராசா 109 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 135 ரன்களும், இன்னசென்ட் காயா 110 ரன்களும் எடுத்தனர்.

பந்துவீச்சில் முஸ்தாபிசுர் ரஹ்மான், ஷோரிபுல் இஸ்லாம், மெஹிடி ஹசன் மற்றும் மொசாடெக் ஹொசைன் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.

ஆட்டநாயகன் விருதை ஜிம்பாப்வே அணியை வெற்றிக்கு அழைத்துச்சென்ற சிக்கந்தர் ராசா பெற்றார். அதன்படி ஒருநாள் தொடரில் ஜிம்பாப்வே அணி 1-0 என முன்னிலை பெற்றது.