பதான் சகோதரர்களது அதிரடியில் இந்திய மகாராஜாஸ் அணி உலக அணியை வீழ்த்தியது…!

இரண்டாவது முறையாக நடைபெற்று வரும் லெஜண்ட்ஸ் லீக் போட்டியின் சிறப்பு ஆட்டம் நேற்று (16) நடைபெற்றது.

இது இந்தியாவின் 75வது சுதந்திர தினத்தை ஒட்டியதாக கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் இந்தியா மகாராஜாஸ் அணியும், உலக ஜெயண்ட்ஸ் அணியும் விளையாடின.

உலக ஜயண்ட்ஸ் அணியில் இலங்கையின் முன்னாள் வீரர்கள் முத்தையா முரளிதரன், திசர பெரேரா, ரொமேஷ் கலுவிதாரண மற்றும் அஜந்த மெண்டிஸ் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். Toss வென்ற உலக ஜெயண்ட்ஸ் முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது.

அதன்படி களம் இறங்கிய உலக ஜெயண்ட்ஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட இருபது ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 170 ரன்கள் எடுத்தது. தொடக்க ஆட்டக்காரர் கெவின் ஓ பிரையன் 31 பந்துகளில் 9 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்சருடன் 52 ரன்கள் எடுத்தார், தினேஷ் ராம்டின் 29 பந்துகளில் 42 ரன்கள் எடுத்தார். இலங்கை அணியின் முன்னாள் தலைவர் திசர பெரேரா 2 சிக்ஸர், ஒரு பவுண்டரியுடன் 23 ரன்கள் எடுத்தார்.

இந்தியா மகாராஜாஸ் அணியில் சிறப்பாக பந்துவீசிய பங்கஜ் சிங் 26 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இலக்கை துரத்த களம் இறங்கிய இந்தியா மஹாராஜாஸ் அணி 18 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்து வெற்றி பெற்றது.

இந்தியா மகாராஜாஸ் அணியில் டான்மே ஸ்ரீவஸ்தவா 54 ரன்கள் எடுத்தார். இர்பான் பதான் மற்றும் யூசுப் பதான் ஆகியோர் இந்திய அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர்.

யூசுப் பதான் 35 பந்துகளில் 5 பவுண்டரிகள் 2 சிக்ஸர்களுடன் ஆட்டமிழக்காமல் 50 ரன்களும், இர்பான் பதான் 9 பந்துகளில் 3 சிக்ஸர்களுடன் ஆட்டமிழக்காமல் 20 ரன்களும் எடுத்தனர்.

பந்துவீச்சில் டிம் பிரெஸ்னன் 3 விக்கெட்டுக்களையும், முத்தையா முரளிதரன் 3 ஓவர்கள் 23 , திசர பெரேரா 2 ஓவர்கள் 25 கொடுத்து 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.