பறிபோனது ஆசியக்கிண்ண வாய்ப்பு -UAE யில் போட்டிகள்..!

ஆகஸ்ட் மற்றும் செப்டெம்பர் மாதங்களில் இலங்கையில் நடைபெறவிருந்த ஆசியக் கிண்ணப் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் தலைவர் சவ்ரவ் கங்குலி உறுதிப்படுத்தியுள்ளார்.

நேற்று நடைபெற்ற இந்திய அபெக்ஸ் கவுன்சில் அமர்வுக்குப் பிறகு, ஐக்கிய அரபு எமிரேட்ஸில் போட்டிகள் நடைபெறும் என்று கங்குலி வெளிநாட்டு ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் நிலவும் அரசியல் மற்றும் பொருளாதார ஸ்திரமின்மை காரணமாக ஆசிய கிண்ணத்தை நாட்டில் நடத்த முடியாது என இலங்கை கிரிக்கெட் நிறுவனம் ஆசிய கிரிக்கட் பேரவைக்கு தெரிவித்ததை அடுத்து இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

இலங்கையின் தற்போதைய சூழ்நிலை காரணமாக லங்கா பிரீமியர் லீக்கின் மூன்றாம் கட்டமும் ஒத்திவைக்கப்பட்டது.

இந்த சீசனில் மழை பெய்யாத ஒரே இடம் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் என சவுரவ் கங்குலி PTI ஊடகத்திற்கு கருத்து தெரிவித்துள்ளார்.

ஆசியக் கிண்ணத் தொடரின் தகுதிச் சுற்று ஆகஸ்ட் 24ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாகவும், போட்டிகள் செப்டெம்பர் 10 அல்லது 11ஆம் திகதி நிறைவடையும் எனவும் ஆசிய கிரிக்கட் சபை வட்டாரங்களை மேற்கோள்காட்டி வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

T20 முறையில் நடைபெறும் இந்த ஆண்டுக்கான போட்டியில் ஆறு அணிகள் மோதுகின்றன. போட்டியில் விளையாடும் ஆறாவது அணியைத் தேர்வு செய்வதற்கான தகுதிச் சுற்றில் சிங்கப்பூர், ஹாங்காங், குவைத் மற்றும் ஐக்கிய அரபு நாடுகள் போட்டியிடுகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.