பலம் வாய்ந்த மும்பை இந்தியன்ஸ் தோற்றது எப்படி? காரணமே இது தான்.. பஞ்சாப் சாதனை வெற்றி
ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் யாருமே எதிர்பாராத வகையில் ஐந்து முறை சாம்பியன் ஆன மும்பை இந்தியன்ஸ் அணி குவாலிபயர் 2 நாக்கவுட் சுற்று ஆட்டத்தில் பஞ்சாப் அணியிடம் தோல்வியை தழுவி இருக்கிறது.மும்பை அணி பழைய மாதிரி பலம் வாய்ந்த அணியாக இம்முறை களமிறங்கி தொடர் வெற்றிகள் பெற்றதால் ரசிகர்கள் பலரும் மும்பை தான் இம்முறை கோப்பையை வெல்லும் என எதிர்பார்த்தார்கள்.
ஆனால் ஸ்ரேயாஸ் ஐயர் எங்கிருந்தோ வந்து ஆப்பு வைத்துவிட்டு சென்றுவிட்டார். இந்த சூழலில் ஐபிஎல் வரலாற்றில் மும்பை இந்தியன்ஸ் அணி 200 ரன்களுக்கு மேல் முதலில் பேட்டிங் செய்து குவித்து, அதனை தற்காத்துக் கொள்ள முடியாமல் தோற்றது இதுதான் முதல் முறை. ஏனென்றால் மும்பை அணியில் பந்துவீச்சு அவ்வளவு பலம் பொருந்தியதாக இருக்கும்.
அப்படி இருக்கும் போது மும்பை 200 ரன்களுக்கு மேல் குவித்து எவ்வாறு தோற்றது என்பதை தற்போது பார்க்கலாம். மும்பை இந்தியன்ஸ் அணியின் வெற்றிக்கு முதுகு எலும்பாக இருப்பவர் பும்ரா தான். பும்ரா எப்போதெல்லாம் சிறப்பாக செயல்படுகிறாரோ, அப்போதெல்லாம் மும்பை அணி வெற்றி பெறும். குஜராத்துக்கு எதிரான போட்டியில் கூட ஆட்டத்தையே மாற்றியது பும்ராவின் ஓவர்தான்.
ஆனால் இன்று பும்ரா நான்கு ஓவருக்கு 40 ரன்கள் விட்டுக் கொடுத்தது தான் தோல்விக்கு முக்கிய காரணம். அதுவும் பவர் பிளேவில் பும்ரா வீசிய முதல் ஓவரில் ஜோஸ் இங்கிலீஷ் 20 ரன்களை குவித்தார். அதுதான் மும்பை அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது. இரண்டு பவுண்டரி, இரண்டு சிக்ஸர்களை பும்ரா ஓவரில் ஜோஸ் இங்கிலீஷ் அடிக்க அது ஒட்டுமொத்த மும்பை அணியின் உத்வேகத்தையும் தொலைத்தது.
இதனால் பும்ராவை தொடர்ந்து இரண்டு ஓவர்கள் ஆரம்ப கட்டத்தில் பயன்படுத்த முடியாமல் ஹர்திக் பாண்டியா தடுமாறினார். பும்ராவின் முதல் ஓவரலில் இருந்து ரன்கள் சென்றதால் அவருடைய பந்துவீச்சை அடிக்க முடியும் என்ற நம்பிக்கை பஞ்சாப் வீரர்களுக்கு ஏற்பட்டது. இதனால் பும்ரா அடுத்த மூன்று ஓவர்கள் வீசும் போதும் அவரது பவுலிங்கை பெரிதாக அலட்டிக் கொள்ளாமல் பஞ்சாப் அணி விளையாடியது.
இதேபோன்று ரீஸ் டோப்ளி என்ற இங்கிலாந்து வீரரை இன்று மும்பை அணி களம் இறக்கியது. அவருடைய ஓவரில் ஸ்ரேயாஸ் ஹார்ட்ரிக் சிக்ஸர்களை அடித்தார். இதனால் ரீஸ் டோபிலியை மீண்டும் பயன்படுத்த முடியாத நிலைக்கு ஹர்திக் பாண்டியா தள்ளப்பட்டார். மூன்று ஓவர்கள் வீசிய ரீஸ் டோப்லி 40 ரன்கள் குவித்தார். இதேபோன்று அஸ்வினி குமார் இறுதிக்கட்டத்தில் பந்து வீசும் சூழலுக்கு தள்ளப்பட்டார். அந்த இடத்தில் பவுல்ட் அல்லது பும்ரா போன்ற அனுபவம் வாய்ந்த வீரர்கள் வீசியிருக்க வேண்டும்.
இதனால் 19 ஓவரிலும் ஸ்ரேயாஸ் சிக்ஸர்களை பார்க்க விட அவர் நான்கு ஓவரில் 55 ரன்கள் விட்டுக் கொடுத்தார். மேலும் மிட்செல் சாண்ட்னர் மேஜிக்கும் இன்று எடுபடவில்லை. இதன் காரணமாக மும்பை அணி பந்துவீச்சு 200 ரன்களை முதல்முறையாக தற்காத்துக் கொள்ளாமல் தோல்வியை தழுவியது. மேலும் நெஹல் வதேராவின் கேட்ச் வாய்ப்பை பவுல்ட் மிஸ் செய்ததும் ஆட்டத்தில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது.