பாகிஸ்தானை வீழ்த்தி தொடரில் முன்னிலை பெற்றது இங்கிலாந்து…!

17 ஆண்டுகளுக்கு பிறகு இங்கிலாந்து அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து இருபது ஓவர் தொடரில் விளையாடுகிறது. 7 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி கராச்சியில் நேற்று நடைபெற்றது. Toss வென்ற இங்கிலாந்து கேப்டன் மொயின் அலி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

நிர்ணயிக்கப்பட்ட இருபது ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணி 7 விக்கெட்டுகளை இழந்து 158 ரன்கள் எடுத்தது. தொடக்க ஜோடி முகமது ரிஸ்வான் மற்றும் பாபர் அசாம் முதல் விக்கெட்டுக்கு 85 ரன்கள் சேர்த்தனர்.

பாபர் அசாம் 24 பந்துகளில் 31 ரன்களும், ஹைதர் அலி 11 ரன்களும் எடுத்தனர். முகமது ரிஸ்வான் 46 பந்துகளில் 6 பவுண்டரிகள் 2 சிக்ஸர்களுடன் 68 ரன்கள் எடுத்தார். இப்திகார் அகமது 17 பந்துகளில் 3 சிக்ஸர்களுடன் 28 ரன்கள் எடுத்தனர்.

பந்துவீச்சில் லூக் வுட் 24 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களையும், ஆதில் ரஷித் 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.

இலக்கை துரத்த களம் இறங்கிய இங்கிலாந்து அணி 19.2 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து வெற்றி பெற்றது.

மூன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு இங்கிலாந்து தேசிய அணியை பிரதிநிதித்துவப்படுத்திய அலெக்ஸ் ஹேல்ஸ் 40 பந்துகளில் 7 பவுண்டரிகளுடன் 53 ரன்கள் எடுத்தார்.

ஆட்டத்தை சிறப்பாக முடித்த ஹாரி புரூக் 25 பந்துகளில் 7 பவுண்டரிகளுடன் ஆட்டமிழக்காமல் 42 ரன்கள் எடுத்தார். அதன்படி நேற்றைய வெற்றி மூலமாக 7 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 1-0 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி முன்னிலை பெற்றுள்ளது.