பாகிஸ்தான் எல்லாம் நமக்கு ஒரு பொருட்டே இல்ல.. முடிவு ஒருதலைபட்சமாக இருக்கும்.. ஹர்பஜன் சிங் கிண்டல்
சாம்பியன்ஸ் கோப்பைத் தொடரில் அனைவரும் எதிர்பார்த்து காத்திருக்கும் இந்தியா, பாகிஸ்தான் மோதும் ஆட்டம் பிப்ரவரி 23ஆம் தேதி துபாய் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டிக்கான அனைத்து டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்து விட்டது.
இதுவரை ஐந்து முறை சாம்பியன் டிராபி தொடரில் இந்தியாவும் பாகிஸ்தானும் மோதி இருக்கிறது. இதில் பாகிஸ்தான் மூன்று முறையும், இந்திய அணி இரண்டு முறையும் வென்றிருக்கிறது. இந்த சூழலில் இந்திய அணி வீரர்களுக்கு முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் ஒரு எச்சரிக்கை கொடுத்திருக்கிறார்.
அதில் இந்தப் போட்டி இந்தியாவுக்கு சாதகமாக இருந்தாலும், ஒரு பாகிஸ்தான் வீரரால் ஆபத்து காத்திருப்பதாக தெரிவித்தார். இது குறித்து பேசிய அவர், இந்தியா பாகிஸ்தான் விளையாடும் போட்டிகளுக்கு தற்போது இயல்பை விட அதிகமான விளம்பரங்கள் செய்யப்படுகிறது. தேவைக்கு மிஞ்சிய எதிர்பார்ப்பு வேண்டுமென்றே ஏற்படுத்தப்படுகிறது என்று நினைக்கின்றேன்.
ஏனென்றால் இதில் ஒன்றுமே இல்லை. பாகிஸ்தான் அணியில் முக்கிய வீரர்களை பாருங்கள். பாபர் அஸாம் இந்தியாவுக்கு எதிராக சராசரியாக 31 தான் அடித்து இருக்கிறார். நீங்கள் தொடக்க வீரராக இருக்கிறீர்கள் என்றால் குறைந்தபட்சம் உங்களுடைய சராசரி ஐம்பதை நெருங்க வேண்டும். அதன் பிறகு ரிஸ்வான் இருக்கிறார். அவரை ஒரு வீரராக எனக்கு பிடிக்கும். அவர் சுதந்திரமாக விளையாடக் கூடியவர்.
ஆனால் இந்தியாவிற்கு எதிராக அவருடைய சராசரி 25 தான். என்னை கேட்டால் பக்கர் சாமான் மட்டும் தான் சராசரியாக 46 வைத்திருக்கிறார். அது உண்மையிலே நல்ல சராசரி தான். பக்கர் சமான் நினைத்தால் தனி ஆளாக போட்டியை இந்தியாவுக்கு எதிராக கொண்டு சென்று விடுவார். இதேபோன்று பஹிம் அஸ்ரபின் சராசரி 12.5 ஆக இருக்கிறது.
அவரும் இந்தியாவுக்கு ஒரு பெரிய பிரச்சினையாக இருக்க மாட்டார். சவுத் சக்கிலின் சராசரி இந்தியாவுக்கு எதிராக எட்டு என்ற அளவில் இருக்கிறது. இதுதான் அவர்களுடைய பேட்டிங் வரிசையாக இருக்கிறது. இதை பார்த்தால் இந்தியாவுக்கு சரிசமமாக அவர்கள் சண்டை போடுவார்கள் என்ற நம்பிக்கையே எனக்கு வரவில்லை. இந்தியாவை எடுத்துக் கொண்டால் சொந்த மண்ணில் இங்கிலாந்தை மூன்றுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் தோற்கடித்திருக்கிறார்கள்.
ஆனால் பாகிஸ்தான் அணி நியூஸிலாந்துக்கு எதிராக தோல்வியை தழுவி இருக்கிறது. இதேபோன்று நியூசிலாந்துக்கு எதிராகத்தான் தங்களுடைய முதல் போட்டியில் பாகிஸ்தான் விளையாடுகிறது. இதனால் முத்தரப்புத் தொடரில் அடைந்த தோல்வி பாகிஸ்தான் மனதில் இருக்கும். மேலும் நியூசிலாந்து அணி வீரர்களும் களச் சூழல் குறித்து புரிந்து கொண்டிருப்பார்கள். எனவே இந்தியா பாகிஸ்தான் போட்டி இந்தியாவுக்கு சாதகமாக ஒருதலைப்பட்சமாக இருக்கும் என நினைக்கின்றேன். ஒருதலைப்பட்சமான போட்டியை பார்க்கும்போது, அதில் எந்த ஒரு விறுவிறுப்பும் பொழுதுபோக்கும் இருக்காது என்று ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.