பாகிஸ்தான் வீரர்களுக்கான வருடாந்த ஒப்பந்தம் அறிவிப்பு

பாகிஸ்தான் வீரர்களுக்கான வருடாந்த ஒப்பந்தம் அறிவிப்பு

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் வீரர்களுக்கான வருடாந்த ஒப்பந்தத்தில், ஹஷன் அலி மற்றும் மொஹமட் ரிஸ்வான் ஆகியோருக்கு அதிகபட்ச ஒப்பந்த தொகைக்கான A பிரிவு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் கிரிக்கெட் சபை 2021-2022ம் பருவகாலத்துக்கான வீரர்களுக்கான ஒப்பந்தம் தொடர்பிலான தகவலை இன்றைய தினம் (02) வெளியிட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் முன்னணி 20 வீரர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

குறித்த ஒப்பந்தத்தின் படி, கடந்த வருடம் உபாதை காரணமாக ஒப்பந்தத்தை தவறவிட்ட ஹசன் அலிக்கு, பிரிவு A ஒப்பந்தம் வழங்கப்படவுள்ளதுடன், கடந்த வருடம் B பிரிவு ஒப்பந்தத்தை பெற்றிருந்த மொஹமட் ரிஸ்வான் A பிரிவு ஒப்பந்தத்துக்கு தரம் உயர்த்தப்பட்டுள்ளார்.

எனினும், கடந்த ஆண்டு வீரர்கள் ஒப்பந்தத்தை பெற்றிருந்த 9 வீரர்கள் இம்முறை ஒப்பந்தத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். இதில், அஷாட் ஷபிக், ஹரிஸ் சொஹைல், ஹய்டர் அலி, இப்திகார் அஹமட், மொஹமட் அப்பாஸ், நஷீம் ஷா, ஷான் மசூட், மற்றும் உஸ்மான் ஷின்வாரி ஆகிய வீரர்கள் ஒப்பந்தத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு வீரர்கள் ஒப்பந்தத்திலிருந்து நீக்கப்பட்டுள்ள போதும், அவர்களுக்கான தேசிய அணிக்கான கதவுகள் மூடப்படவில்லை எனவும், அவர்கள் பாகிஸ்தான் அணியின் திட்டங்களில் உள்ளனர் எனவும் தேர்வுக்குழுவினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.

புதி ஒப்பந்தத்தின் படி, A மற்றும் C பிரிவில் உள்வாங்கப்பட்டுள்ள வீரர்களுக்கு முறையே 25 சதவீத ஊதிய அதிகரிப்பும், வளர்ந்துவரும் வீரர்களுக்கான பிரிவு வீரர்களுக்கு 15 சதவீதம் ஊதிய அதிகரிப்பு வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. அதேநேரம், ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ள வீரர்கள், ஒப்பந்தம் வழங்கப்படாத வீரர்கள் மற்றும் ஒப்பந்த பிரிவுகள் என பார்க்காமல், அனைத்து வீரர்களுக்கும் ஒரே அளவான போட்டி கட்டணம் வழங்கப்படும் எனவும் பாகிஸ்தான் கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

ஒப்பந்தம் வழங்கப்பட்ட வீரர்களின் விபரம்

A பிரிவு – பாபர் அஷாம், ஹஷன் அலி, மொஹமட் ரிஸ்வான், ஷஹீன் ஷா அப்ரிடி

B பிரிவு – அஷார் அலி, பஹீம் அஸ்ரப், பக்ஹர் ஷமான், பவட் அலாம், சதாப் கான், யசீர் ஷா

C பிரிவு – அபிட் அலி, இமாம் உல் ஹக், ஹரிஸ் ரஹூப், மொஹமட் ஹஸ்னைன், மொஹமட் நவாஸ், நுஹ்மான் அலி, சர்பராஸ் அஹமட்

வளர்ந்துவரும் வீரர்கள் – இம்ரான் பட், ஷஹனவாஷ் டஹானி, உஸ்மான் காதிர்

ABDH