பானுக்க ராஜபக்ஷவுக்கு தடை – என்னதான் நடக்கிறது இலங்கை கிரிக்கெட்டில்…!

இலங்கை கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட வீரர் பானுக ராஜபக்ஷவுக்கு ஒத்திவைக்கப்பட்ட தண்டனை சார்ந்த, ஒரு வருட போட்டித்தடை வழங்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

இலங்கை கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, பானுக ராஜபக்ஷ, கிரிக்கெட் சபையின் ஒப்பந்த கொள்கையை மீறிய குற்றச்சாட்டின் பேரிலேயே இந்த தண்டனைக்கு உள்ளாகியுள்ளனர்.

அதன்படி, அடுத்துவரும் தொடர்களில் பானுக ராஜபக்ஷ தேசிய அணியில் விளையாடலாம். ஆனால், எதிர்வரும் 2 வருட காலப்பகுதிக்குள், பானுக ராஜபக்ஷ கிரிக்கெட் சபை நிர்ணயித்துள்ள விதிமுறைகளை மீறுவாராக இருந்தால், அவருக்கு அனைத்துவகை கிரிக்கெட்டிலும் விளையாடுவதற்கு ஒரு வருட தடையை இலங்கை கிரிக்கெட் சபையால் வழங்க முடியும்.

அவருக்கு விதிக்கப்பட்டுள்ள 5000 அமெரிக்க டொலர் அபராதத்தொகையை கட்டாயமாக பானுக ராஜபக்ஷ செலுத்தவேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை கிரிக்கெட்டின் 2019/20 ஒப்பந்த விதிமுறையை மீறி, சமுகவலைத்தளங்கள் மற்றும் ஊடகங்களுக்கு நேர்காணல்களை வழங்கிய குற்றச்சாட்டின் அடிப்படையில் இவருக்கு இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

இந்திய தொடருக்காக கொழும்பில், Bio Bubble வலயத்தில் பயிற்சிகளில் ஈடுபட்டுவரும் 13 வீரர்கள் கொண்ட குழாத்திலும் பானுக ராஜபக்ஷ இணைக்கப்பட்டுள்ளார் .

பானுக ராஜபக்ஷ தேசிய அணிக்கு தெரிவுசெய்வதற்கான உடற்தகுதியை நிரூபித்துள்ள நிலையில், இவர் மீண்டும் தேசிய அணிக்கு இணைக்கப்படவும் வாய்ப்புள்ளமை முக்கியமானது.