உலக்கோப்பை பயிற்சி ஆட்டங்கள் இடம்பெற்றுவரும் நிலையில் பாகிஸ்தானின் பிரபல வீரர் பாபர் அசாமின் ஆட்டத்தைப் பார்க்க இந்தியர்கள் திரண்ட சம்பவம் சமூகவலைத்தளங்களில் சூடுபறக்கிறது.
ஐசிசி தொடர்களில் இதுவரை பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய அணியே அதிக முறை வென்றுள்ளது. ஆனால் கடந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் தோல்வியை சந்தித்தது. எனவே அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய அணியும், இந்தியாவை வீழ்த்த பாகிஸ்தான் அணியும் கடும் முனைப்பு காட்டி வருகின்றன.
இந்நிலையில் பாகிஸ்தான் அணியில் இருக்கும் ஒரு வீரரின் ஆட்டத்தை காண இந்திய அணி முழுவதும் சென்றிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்திய அணி நேற்று இங்கிலாந்துடன் பயிற்சி ஆட்டத்தில் ஈடுபட்டது. இதே மைதானத்தில் தான் பாகிஸ்தான் அணியும், வெஸ்ட் இண்டீஸுடன் பயிற்சி ஆட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்தது. அப்போது அங்குச் சென்ற இந்திய அணி பயிற்சியாளர் ரவிசாஸ்திரி, மற்றும் வீரர்கள் பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாமின் பேட்டிங்கை கண்டு திகைத்தனர்.
சர்வதேச அளவில் மிகச்சிறந்த வீரர்களில் ஒருவராக பாபர் அசாம் வலம் வந்துக்கொண்டிருக்கிறார். அவர் நேற்றைய போட்டியில் 41 பந்துகளில் அரைசதம் விளாசி அசத்தினார். இவர் இந்திய அணிக்கு நிச்சயம் தலைவலி கொடுப்பார் என்பதால் அவரின் பலவீனம் என்ன என்பதை அறிய ரவி சாஸ்திரி, புவனேஷ்வர் குமார், வருண் சக்கரவர்த்தி, தீபக் சஹார் உள்ளிட்டோர் உற்று நோக்கிக் கொண்டிருந்தனர். இதே போல இங்கிலாந்து வீரர்களும் அங்கு திரண்டனர்.
நேற்றைய போட்டியில் பலம்பொருந்திய மேற்கிந்திய தீவுகளை பாகிஸ்தான் தோற்கடித்தமை குறிப்பிடத்தக்கது.
இந்திய ,பாகிஸ்தான் அணிகளுக்கிடையேயான உலக்கோப்பை போட்டி வரும் 24 ம. திகதி இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.