நேற்றைய தினம் (2021-04-07) பாக்கிஸ்தான் மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையில் செஞ்சூரியன் சுப்பர் ஸ்போர்ட்ஸ் பார்க்கில் இடம் பெற்ற சீரிஸ் டிசைடிங் மூன்றாவது மெட்ச்சில் பாக்கிஸ்தான் முதலில் துடுப்பெடுத்ததாடிக் கொண்டிருந்த போது 96 ஆட்டங்களோடு களத்தில் தொடர்ந்து தெறிக்க விட்டுக் கொண்டிருந்த பாக்கிஸ்தான் தலைமை மாலுமி பாபர் அசாம் ஐம்பதாவது ஓவரின் கடைசிப் பந்தினை எதிர கொள்ளுகின்ற போது ஆறினை அடித்து அற்புதமான ஒரு நூறை பதிவு செய்வார் என்று வினாடிக்கு நூறு தடவைக்ள எகிறித் துடிக்கின்ற இதயத்தோடு மெட்ச் பாரத்துக் கொண்டிருந்த போது ஆறுக்கான பந்தினை அடித்தாடி கெட்ச் கொடுத்து அவர் மைதானத்தை விட்டு வெளியேறிய தருணத்தில் படாரென்று உடைந்த பலூனானது மனசு….
பாபர் அசாமின் நேற்றைய கேப்டன் நொக் அபாரம்….நாளாக நாளாக ஒவ்வொரு மேட்சிலும் பாபர் அசாமின் பேட்டுக்கு அடக்கமாகவும் ஆக்ரோஷமாகவும் பந்து வீச்சாளர்களை ஒரு ஹிட்லரைப் போல அடக்கியும் பேசுகின்ற ஆளுமை வளர்ந்து கொண்டேயிருக்கின்றது. இன்றைய கிரிக்கெட் உலகின் அற்புதமான ஒரு நாள் ஆட்டக்காரர்களின் லிஸ்டில் முதலிடம் சந்தேகமே கிடையாது அது பாபருக்குத்தான். என்னமாய் ஆடுகின்றான் இந்த இருபத்தாறு வயதுப் பையன். கிரிக்கெட் அன்று தொட்டு இன்று வரை ஒரு சிலரால் மாத்திரமே அழகு குறையாமல் அப்படியே இருக்கின்றது.
இன்றைய கிரிக்கெட்டின் அழகை ரசிக்க வைத்துக் கொண்டிருக்கின்றவர்கள் பட்டியலில் அஸாம் ஒரு பிரதான பங்காளி.
நேற்றைய மேட்ச்சில் பாபரின் ஆட்டம் எப்படியிருந்தது என்று என்னைக் கேட்டால் ஒரு பாடலை அதற்கு உதாரணம் சொல்லுவேன்.
இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான் காக்காவின் இசையில் தாஜ்மகால் படத்தில மலையாளப் பாடகர் சிறீகுமார், சித்ரா மற்றும் சிறிநிவாஸ் சேர்ந்து பாடிய அற்புதமான பாடலொன்று இருக்கின்றது. “கரிசத் தரிசே” என்று ஆரம்பிக்கின்ற ஒரு மெய் சிலிர்க்க வைக்கின்ற பாடல். நூற்றுக்கு மேற்பட்ட தடவைகள் கேட்டிருப்பேன். இன்னமும் அலுக்கவில்ல. அலுக்காது ஒர போதுமே. அப்படியொரு குணம் அந்தப் பாடலுக்கு. அந்தப் பாடல் மெல்லமாய் முதலாவது கியரில் செம மெல்லிசாக மெலடியில் ஆரம்பித்து கொஞ்ச நேரத்தில் இரண்டாம் கியர் மூன்றாம் கியர் என்று போய் மேலே செல்லச் செல்ல லைட்டாக வேகம் பிடித்து கடைசிக் கட்டத்தில் ஏழாம் கியரில் மணிக்கு முன்னூறு கிலோ மீட்டர் பேர் அவரில் வேகம் பிடித்து பயணிக்கும். ரஹ்மானின் அற்புதமான பாடல்களுக்குள்ளே எப்போதுமே அதற்கு இடமிருக்கின்றது. அப்படித்தானிருந்தது பாபரின் ஆட்டமும்.
மெலடியில் ஆரம்பித்து இடையில் சற்று வேகம் எடுத்து கிளைமெக்சில் பந்து வீச்சாளர்களை கதறடிக்கச் செய்கின்ற அந்த கனங்கள் அபூர்வமாக இருந்தது எனக்கு. பாபரின் ஆட்டத்தில் ஒரு வோட்கா மயக்கம் இருப்பதனை நான் எப்போதுமே உணர்ந்திருக்கின்றேன். சில வேளை ஒரு ஜென் கவிதையைப் போல. ஒரு ஜாவிட் மியான்டட் இன்சமாமுக்குப் பின்னர் பாக்கிஸ்தான் அணி அற்புதமான ஒரு துடுப்பாட்ட விரனுக்காக கண் மூடி தவம் செய்து கொண்டிருந்த போது பாபரின் வருகை அந்த இடத்தை நிரப்பியிருக்கின்றது.
பாக்கிஸ்தான் அணியின் துடுப்பாட்ட வரிசையின் மூன்றாவது இடத்தை பாபர் அசாமின் வருகை கொங்க்ரிட் போட்டு தூண் எழுப்பியிருக்கின்றது.
பழைய சுல்தான் ஒஃப் முல்தானான துடுப்பாட்ட மலை இன்ஸமாமிடம் பாரத்த Techniques, Temperament and Consistency என்று அத்தனை ஐட்டங்களையும் பாபரிடம் காணுகின்றேன். அதற்கு மேலாக பாபருக்கென்று ஒரு தனிவேறான ஸ்டைல் இருக்கின்றது. அவரது ஒவ்வொரு ஷொட்களும் ஏனோ தானோ என்றில்லாமல் அத்தனையுமே Well determined and Pre planned ஆக இருக்கின்றது. எல்லா துடுப்பாட்ட வீரர்களுக்கும் வாய்த்திடாத ஒன்று அது. நன்றாக அவதானித்துப்பாருங்கள் பாபர் துடுப்பெடுத்தாட களத்துக்கு வருகின்ற போது ஓவர் நைட்டில் ஆக்ரோஷத்தை கைக்கெடுக்காமல் மெல்ல மெல்ல அதனை கட்டியெழுப்பி ஒரு கட்டத்தில் அந்த ஆவேசம் மற்றும் ஆக்ரோஷத்தினூடாக பந்து வீச்சாளர்களை சம்பவம் செய்கின்ற அழகினை நீங்கள் காண்பீர்கள். ஒரு நாள் ஆட்டத்தின் அடிப்படை அம்சமான Aggression ஐ பாபர் அசாம் தனக்குள்ளே உருவேற்றுகின்ற அந்த Process and Mode வாவ் ரகம்.
உலகில் இரண்டு வகையறா மனிதர்கள் இருக்கின்றனர். ஒன்று பிறப்பால் ஜீனியஸ்..மற்றொன்று முயற்சியால் ஜீனியஸ் ஆனவர்கள். பாபர் இதில் முதலாவது கேட்டகரி. இசைக்கு ரஹ்மானைப் போல டென்னிசுக்கு மார்ட்டினா ஹின்ஜிஸ் ஸ்டெபிகிராஃப் போல செஸ்ஸுக்கு விஸ்வநாத் ஆனந்த் போல கிரிக்கெட்டுக்கென்றே பாபர் போன்றவர்களை அல்லாஹ் படைத்து உலகத்துக்கு பார்சல் கட்டி அனுப்பியிருக்கின்றான்.
தான் எதிர் கொள்ளுகின்ற எல்லாப் பந்துகளையும் மிக நுணுக்கமாக அவதானித்து அடித்தாடுகின்ற பந்துகளை அடித்தாடியும் டிஃபென்ட் பண்ணுகின்ற பந்துகளை டிஃபென்ட் பண்ணியும்; சில வேளை அட இது டிஃபென்ட் பண்ணுகின்ற பந்தாச்சே இப்படி அதனை அநாயசமாக அடித்தாடுகின்றானே பையன் என்று ஆச்சர்யப்படவும் வைக்கின்றார். சந்தேகமே கிடையாது பாபர் அஸாம் வன் டே ஸ்பெஷலிஸ்ட்…..ஒரு நாள் ஆட்டத்தின் ஒஸ்கார்காரன்…….துடுப்பாட்ட உலகின் ஐன்ஸ்டைன் பாபர்.
நடந்து முடிந்த மூன்று போட்டிகள் கொண்ட தென்னாபிரிக்காவுக்கெதிரான மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் பாக்கிஸ்தான் முதலாம் மற்றும் மூன்றாம் போட்டிகளை வெற்றி கொண்டதில் பாபரின் முதல் போட்டியிலான சதமும் மூன்றாம் போட்டியிலான 96 ஓட்டங்களும் பெரும் பங்காற்றியிருந்தன. அற்புதமான Captain Knocks அவை.
இன்றைய தேதி வரை பாபர் ஆடிய மொத்த ஒரு நாள் போட்டிகள் 80. இதில் 13 சதங்களும் 17 அரைச் சதங்களும் அடங்கும். 56.84 சராசரி. வாவ்..வாவ்…..ICC ஒரு நாள் ரேங்கிங்கில் விராட் கோலி 857 புள்ளிகளுடன் முதலிடத்திலும் பாபர் 852 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திலும் இருக்கின்றார்க்ள. ஜஸ்ட் ஐந்தே புள்ளிகள்தான் கோலியை தள்ளி விட்டு முதலிடத்துக்கு வர. மிக விரைவில் அது நடக்கும்…
இறைவனின் நாட்டத்தில் பாபர் அதனை நடத்திக் காட்டுவார்.
கடந்த 2015 மே மாதம் தனது சர்வதேச கிரிக்கெட் பயணத்தை ஆரம்பித்த பாபர் அசாம் இன்று வரை தனது துடுப்பாட்டத்தில் காட்டி வருகின்ற அந்த Consistency ஆச்சர்யப்படுத்துகின்றது. கடந்த ஆறு வருட காலமாக அவரை அவதானித்து வருகின்றேன். எங்கேயாவது சறுக்குகின்றாரா என்று,…ஒரு இடத்தில் கூட சறுக்காமல் அதே Consistency அதே form ல் ஒரே மாதிரி பயணித்துக் கொண்டிருக்கின்றார்.
அவரது துடுப்பாட்டடம் நாளாக நாளாக மெறுகேறிக் கொண்டிருக்கின்றதே தவிர கொஞ்சம் கூட குறையவில்லை என்பதுதான் ஆச்சயர்த்தின் உச்சக் கட்டம்.
“நானும் விராட் கோலி போல வர வேண்டுமெ” ன்று 2019களில் பாபசர் அசாம் சொல்லியிருந்தார். அதற்காக கடினமாக உழைத்தார். அந்த இலக்கு நோக்கி நகர்ந்து கொண்டிருந்தார். தனது துடுப்பாட்ட மட்டையை காற்றில் எம்பி சுழற்றுகின்றார்.
“பாபர் அஸாம் பாக்கிஸ்தானின் விராட் கோலி” என்கின்றார்கள். சின்னதாய் ஒரு திருத்தம்..”விராட் கோலி இந்தியாவின் பாபர் அஸாம்”.
இந்த மாதிரி சர்வதேச அரங்கில் நீங்கள் கேள்விப்படப் போகின்ற காலம் வெகு தூரத்திலில்லை. பாபர் அஸாம் நீ பயணிக்க வேண்டிய தூரம் இன்னும் ரொம்ப நீளமாக இருக்கின்றது.
Go ahead
கிண்ணியா சபருள்ளாஹ்
2021-04-08