பிஷ்னோய்!
ஒரு லெக் ஸ்பின்னர் லெப்ட் ஹேன்ட் பேட்ஸ்மேன்களை தடுமாற வைக்கிறார். நவீன கிரிக்கெட்டில் இது ஆச்சரியமான விசயம். ஆனால் மரபான லெக்ஸ்பின்னால் அல்ல கூக்ளிகளால்!
வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் ஆடும் அணியில் இடம்பெற ஒரு லெக் ஸ்பின்னருக்கு இந்த கூக்ளி பந்து எப்படி துருப்புச் சீட்டாய் ஆகிறது அதுவும் ஆறு பந்துகளில் ஐந்தையும் கூக்ளியா வீசக்கூடிய பவுலருக்கு?
லெக் ஸ்பின் எப்பொழுதும் விக்கெட்டுகளை பறித்துத் தரக்கூடிய ஆயுதமாக இருந்தாலும், ரன்களையும் எளிதாய் கசிய விட்டுவிடுகிற ஆபத்தையும் கூடவே கொண்ட இருமுனை கூராயுதம். ஒருநாள் போட்டியில் பத்து ஓவர்களில் ஒரு லெக் ஸ்பின்னர் 60 ரன்களை தந்தாலும், முக்கியமான இரு விக்கெட்டுகளை முக்கியமான நேரத்தில் எடுத்துத் தந்திருக்க வேண்டும். இது தவறினால் ஒருவரால் மொத்த அணியும் தோற்கும் நிலைமைக்கும் தள்ளப்படலாம்.
இப்படிப்பட்ட ஒரு சுழற்பந்துவீச்சு வகைமையில் பத்து ஓவருக்கு 45 ரன்கள் ஒரு விக்கெட் வீழ்த்தக்கூடியளவில் சிக்கனமான ஒரு பந்துவீச்சாளர் கிடைத்தால், பத்து ஓவருக்கு அறுபது ரன் தரக்கூடிய பவுலரை வைத்து ஆடும் சூதாட்டத்தைக் கைவிட்டு சிக்கனமான அவரிடம்தான் கேப்டன் போவார். அதுதான் பாதுகாப்பு அதுதான் சரியானதும் கூட.
பிஷ்னோய் கூக்ளிகளால் ரன் சிக்கனத்தைக் கொண்டுவருகிறார். மேலும் அவர் வேகமாய் வீசுவதால் ரைட்ஹேன்ட் பேட்ஸ்மேன்களுக்கு பந்து வரும் முறை முன்கூட்டியே தெரிந்தாலும் அடிக்க முடிவதில்லை. அடித்தாலும் பந்திற்கு அடியில்போய் அடித்து கிரவுண்டை க்ளியர் செய்ய முடிவதில்லை. மேலும் நாலாவது ஸ்டம்பில் ரைட்ஹேன்ட் பேட்ஸ்மேன்களுக்கு கூக்ளியை வைக்கும் போது LBW வாய்ப்புகளும் உருவாகிறது.
லெப்ட் ஹேன்ட் பேட்ஸ்மேன்களுக்கோ அவர்கள் தயாராவதற்குள் பந்து வேகமாய் வெளியே திரும்பி கீப்பரிடம் போய்விடுகிறது. லெப்ட் ஹேன்ட் பேட்ஸ்மேன்கள் தாக்கித்தான் ஆகவேண்டுமென்றால் பத்திற்கு ஐந்து முறை பந்து batல் ஸ்லைஸ் ஆகி கேட்ச் ஆகும் வாய்ப்புகள்தான் உருவாகும். ஏனென்றால் அவர் பந்துவீச்சின் கோணமும் வேகமும் அப்படியானது.
எல்லாம் தாண்டி இந்திய அணியில் மூன்றுவடிவ கிரிக்கெட்டிற்கும் நிரந்தர சுழற்பந்து வீச்சாளராய் இருக்கக்கூடிய ஜடேஜா லெப்ட்ஹேன்ட் ஸ்பின்னராய் இருப்பது பிஷ்னோயின் கூக்ளியை அணியில் இடம்பெறுவதற்கான துருப்புச் சீட்டாய் மாற்றுகிறது.
ரைட்ஹேன்ட் பேட்ஸ்மேன்களுக்கு வெளிய திரும்பும் பந்துவீச்சு வகைமையைக் கொண்டுள்ள ஜடேஜா-சாஹல் கூட்டணிக்கு ஒரே அணியில் வாய்ப்பில்லை. ஜடேஜா- சைனாமேன் குல்தீப் கூட்டணிக்கும் இனி வாய்ப்பில்லை. ஏனென்றால் ஒவ்வொரு ஆட்டத்திலும் shortடா போடாதே, அடிக்க ஏதுவாய் அல்வா போல் full லென்த்தில் போடாதேனு ரோகித்தால் சொல்லிக்கொண்டே இருக்க முடியாது. லெப்ட்ஹேன்ட் ஸ்பின்னர் ஜடேஜாவுக்கு ஏறக்குறைய கூக்ளிகளால் ஒரு ஆப்-ஸ்பின்னர் போல் மட்டுமல்லாது சிக்கனமாகவும் வீசும் பிஷ்னோய்தான் சரியான கூட்டணியாய் இருப்பார். வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் எதிர்கால இந்திய சுழற்பந்து கூட்டணி ஜடேஜா-பிஷ்னோய் என்றுதான் தோன்றுகிறது.
பிஷ்னோய் கூக்ளிகளால் அஷ்வின்!
Richards