புதிய உலக சாதனை படைத்த பாகிஸ்தான் அணியின் தலைவர் பாபர் அசாம் …!
இங்கிலாந்துக்கான கிரிக்கட் சுற்றுலாவை மேற்கொண்டிருக்கும் பாகிஸ்தான் அணிக்கும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நிறைவுக்கு வந்தது.
மூன்று போட்டிகளிலும் மிக அபாரமாக விளையாடிய இங்கிலாந்து அணி தொடரை 3-0 என வெற்றிகொண்டது. முதல் இரு ஆட்டங்களிலும் துடுப்பாட்டத்தில் சோபிக்க தவறிய பாகிஸ்தான் துடுப்பாட்ட வீரர்கள் நேற்றைய போட்டியில் அபாரமாக திறனை வெளிப்படுத்த 331 ஓட்டங்கள் பாகிஸ்தான் அணியால் குவிக்கப்பட்டது.
இதிலே பாகிஸ்தான் அணித்தலைவர் பாபர் அசாம் 158 ஓட்டங்களை விளாசினார், இந்த ஓட்ட எண்ணிக்கை மூலமாக 14வது சதம் கடந்தார். உலக கிரிக்கெட் அரங்கில் விரைவாக 14 சதங்களை பெற்றுக்கொண்ட வீரர் என்ற பெருமையும் பாபர் அசாம் வசமானது.
ஏற்கனவே 84 இன்னிங்ஸ்களில் 14 சதம் பெற்றமையே உலக சாதனையாக இருந்தது, அம்லாவிடமிருந்த இந்த உலக சாதனையை நேற்று 81-வது இன்னிங்சில் பாபர் அசாம் தனது 14 ஆவது சதத்தை பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது .
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் விராட் கோலி 103 ஆவது இன்னிங்சில் 14ஆவது சதத்தை பெற்றுக்கொண்டார் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
நேற்றைய போட்டியில் இங்கிலாந்து அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 3-0 என கைப்பற்றியது.