பெங்களூரின் தொடர்ச்சியான வெற்றிகளுக்கு முடிவு கட்டியது சென்னை அணி -ஜடேஜாவின் சகலதுறை ஆற்றலில் சென்னை அபார வெற்றி..!

பெங்களூரின் தொடர்ச்சியான வெற்றிகளுக்கு முடிவு கட்டியது சென்னை அணி -ஜடேஜாவின் சகலதுறை ஆற்றலில் சென்னை அபார வெற்றி..!

14வது ஐபிஎல் தொடரின் மிக முக்கியமான சென்னை மற்றும் பெங்களூர் அணிகளுக்கிடையிலான போட்டி சற்று முன்னர் நிறைவுக்கு வந்துள்ளது .

சென்னை மற்றும் பெங்களூர் அணிகளுக்கிடையிலான இந்த போட்டி ரசிகர்கள் மத்தியில் அதிகம் எதிர்பார்க்கப்பட்டமைக்கு பிரதானமான காரணங்கள் இருந்தன.

சென்னை அணியை பொறுத்தவரையில் விளையாடிய 4 ஆட்டங்களில் மூன்றில் வெற்றி பெற்றிருந்தார்கள் , பெங்களூர் அணி விளையாடிய 4 ஆட்டங்களிலும் 4 லும் வெற்றியை பெற்று தோல்வியை தழுவாத அணியாக வெற்றி நடை போட்டுக் கொண்டிருந்தார்கள்.

இது மாத்திரமல்லாமல் கோலி, தோனி ஆகியோர் தலைவர்களாக இருக்கும் அணி என்கின்ற அடிப்படையில் ரசிகர்களின் மனங்களில் அதிகமாக ஐபிஎல் இறுதிப் போட்டிக்கு நிகரான ஒரு ஆட்டமாக இந்த போட்டி பார்க்கப்பட்டது .

முதலில் துடுப்பெடுத்தாடிய சென்னை அணி 20 ஓவர்கள் நிறைவில் 4 விக்கட் இழப்புக்கு 192 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. ஜடேஜா ஆட்டமிழக்காது 28 பந்துகளில் 62 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டார். இறுதி ஓவரை வீசிய ஹர்சால் பட்டேல் ஓவரில் ஜடேஜா ஐந்து சிக்சர்கள் அடங்கலாக 37 ஓட்டங்களை பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது .

ஐபிஎல் வரலாற்றில் ஒரு வீரர், ஒரே ஓவரில் பெற்றுக்கொண்டு அதிகபட்ச ஓட்ட எண்ணிக்கையாகவும் இந்த ஓட்ட எண்ணிக்கை பதிவு செய்யப்பட்டது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பெங்களூரு ரோயல் சாலஞ்சர்ஸ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கட்கள் இழப்புக்கு 122 ஓட்டங்கள் மட்டுமே பெற்று தோல்வியைத் தழுவினர் .

இந்த போட்டியில் சென்னை அணி 69 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவு செய்தது .

துடுப்பாட்டத்தில் ஜொலித்த ஜடேஜா 1 ரன்அவுட்  அடங்கலாக பந்துவீச்சில் 3 விக்கெட்டுகளையும் சாய்த்தார், இந்த போட்டியின் ஆட்ட நாயகன் விருதும் ஜடேஜா வசமானது.

கோலி தலைமையிலான RCB அணியை இம்முறை IPL ல் தோற்கடித்த ஒரே அணி எனும் பெருமையும் சென்னை அணி வசமானது.

சென்னை தனது வழமையான அசுர பலத்தை இம்முறை ஐபிஎல் தொடரில் காண்பித்து வருகின்றமை ரசிகர்களுக்கு பெருவிருந்தாக அமைந்துள்ளது.புள்ளி பட்டியலிலும் சென்னை முதலிடம் பிடித்தது.