ப்ரித்வி ஷா- காயப்பட்ட சிங்கத்தின் கர்ச்சனை வேறுவிதமாகத்தான் இருக்கும். 

இந்திய மற்றும் அவுஸ்திரேலிய டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் மோசமான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தி அணியிலிருந்து ஒதுக்கப்பட்டு , இந்திய கிரிக்கெட் ரசிகர்களால் பெரிதும் வசைபாடப்பட்டவர்.
இது நடந்தது கடந்தாண்டு டிசம்பர் மாதம் ?
போராட்ட வீரர்கள் தோற்பதில்லை, அவர்களை ஒருசில தோல்விகள் , பலவித அவமானங்கள் ஒருபோதும் ஒதுக்கிவிடுவதில்லை என்று நான் அடிக்கடி சொல்வதுண்டு, அதுவே என் அனுபவமும்கூட .
தோல்விகளால் துவண்டு போகாமலும், வெற்றிகள் தலைக்கேறி மமதை கொள்ளாமலும் பயணிப்பதால் தான் போராட்ட குணம் கொண்டவர்களால் விரைவாகவே மீண்டெழுந்து வரமுடிகிறது.
கிரிக்கெட் மட்டும் அல்ல, கிரிக்கெட்டில் இருக்கும் இந்த போராட்ட குணமென்பது எனக்கு வெகுவாகவே பிடித்துப்போனது, நானும் சேர்ந்து ப்ரித்வி ஷாவை விமர்சித்திருக்கிறேன்.
இவை எல்லாவற்றுக்கும் இன்று இந்த 21 வயதுப் பாலகன் துடுப்பு பதில்சொல்கின்றது.
105*(89)
34(38)
227*(152)
36(30)
2(5)
185*(123) -காலிறுதி
165(122) -அரை இறுதி (இன்று)
7 போட்டிகள்,
4 சதங்கள்,
754 ஓட்டங்கள்,
சராசரி -188
இந்திய கிரிக்கெட்டின் பிதமாகனான விஜய் ஹசாரே பிறந்த நாளில் அவர் பெயரில் நடத்தப்படும் “விஜய் ஹசாரே” தொடரில் அதிக ஓட்டங்கள் குவித்தவர் எனும் மயங் அகர்வாலிடம் இருந்த சாதனையையும் (723 ஓட்டங்கள்-2018) ப்ரித்வி ஷா தகர்த்திருக்கிறார். 754 ஓட்டங்கள் மொத்தமாக இதுவரை விளாசியிருக்கின்றார்.
வெறுமனே 3 மாத இடைவெளியில் அதீத விமர்சனங்களை துடைத்தெறிந்துவிட்டு, இப்படியொரு அபார கம்பாக் கொடுப்பதென்பது சர்வசாதாரண விஷயமல்ல என்பது எல்லோருக்கும் தெரிந்தது.
சேவாக் +சச்சின்+லாரா கலந்த கலவை இவன் என்று அன்று சாஸ்திரி சொன்னதை கிண்டலடித்த பல பதிவுகளை நாம் பார்த்தது போன்று இவனும் அதை கடந்துதான் வந்திருப்பான்.
உலகம் ஆயிரம் சொல்லும் , அவற்றுக்கெல்லாம் தலைசாய்த்து பதில் சொல்லிக்கொண்டிருந்தால் நாம் நாமாக வாழ்த்து ஜெயிக்க முடியாது.
2018 இல் இந்தியாவுக்கு இளையோர் கிண்ணம் வென்று கொடுத்த இந்த ஷா, 21 வயதிலேயே மும்பை போன்ற கிரிக்கெட் விளையும் மண்ணை சார்ந்த ஓர் அணியை வழிநடத்திக் இறுதி போட்டிக்கு அழைத்துச் சென்றிருப்பதும் பெருமையே.
இன்று இந்த ப்ரித்வி ஷா நமக்கெல்லாம் மிகப்பெரிய இன்ஸ்பிரேஷன் ஸ்டோரியை சொல்லியிருக்கிறான்.
*IPL இல் RCB அணிக்காக ஆடும் இன்னுமொரு 21 வயதுப் பையன் தெவுத்துட் படிக்கல் , இந்த ப்ரித்வி ஷா பின்னால் வந்து கொண்டிருக்கின்றான்.
T.Tharaneetharan