மகளிர் உலககக்கோப்பை 2022: நியூசிலாந்திடம் வீழ்ந்தது இந்தியா

மகளிர் உலககக்கோப்பை 2022: நியூசிலாந்திடம் வீழ்ந்தது இந்தியா

நியூசிலாந்தில் ஒருநாள் மகளிர் உலகக் கோப்பை தொடர் நடைபெற்று வருகிறது. இதில் முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானை வீழ்த்திய இந்திய அணி, 2ஆம் ஆட்டத்தில் இன்று நியூசிலாந்துடன் மோதியது. ஹேமில்டனில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

அதன்படி நியூசிலாந்து அணி சிறப்பாக விளையாடி 33 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 175 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் இருந்தது. இதனால் அந்த அணி கட்டாயம் 300 ரன்களை எடுக்கும் என்கிற எதிர்பார்ப்பு ஏற்பட்டது. ஆனால் கடைசி 17 ஓவர்களில் நியூசிலாந்தால் 90 ரன்களைக் கூட எடுக்க முடியாமல் போனது.

இதனால் 50 ஓவர்களின் முடிவில் நியூசிலாந்து அணியால் 9 விக்கெட் இழப்புக்கு 260 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இந்திய அணியில் பூஜா வஸ்த்ரேகர் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதையடுத்து இலக்கை துரத்திய இந்திய மகளிர் அணி, 13 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 31 ரன்கள் எடுத்து தடுமாற்றத்துடன் இலக்கை விரட்டியது. மந்தனா 6, தீப்தி சர்மா 5 ரன்களில் ஆட்டமிழந்தார்கள். இதனால் இந்திய பேட்டர்கள் நிதானமாக ரன்கள் எடுக்க ஆரம்பித்ததால் அது மேலும் சிக்கலை வரவழைத்தது
.
கேப்டன் மிதாலி ராஜ் 31 ரன்களுக்கு ஆட்டமிழந்த பிறகு தோல்வி உறுதியானது. எனினும் ஹர்மன்ப்ரீத் கவுர் கடைசிவரை போராடினார். 63 பந்துகளில் 2 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகளுடன் அதிரடியாக விளையாடி 71 ரன்கள் எடுத்துக் கடைசிக் கட்டத்தில் ஆட்டமிழந்தார்.
இதன்மூலம் இந்திய அணி, 46.4 ஓவர்களில் 198 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 62 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. நியூசிலாந்தின் லியா தகுஹூ 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இந்திய அணி இதுவரை விளையாடிய இரு ஆட்டங்களில் ஒரு வெற்றியை மட்டுமே பெற்றுள்ளது. மார்ச் 12 அன்று பலம் பொருந்திய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக விளையாடுகிறது.

#Abdh