மீண்டும் பிற்போடப்பட்டது லங்கா பிரீமியர் லீக்- உலக T20 கிண்ண தொடருக்கு பின்னரே மீண்டும் …!
ஸ்ரீ லங்கா கிரிக்கெட் ஏற்பாடு செய்து நடத்தும் லங்கா பிரீமியர் லீக் போட்டிகள் மீண்டும் ஒத்திவைக்கப்படுவதாக ஸ்ரீ லங்கா கிரிக்கெட் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்த லங்கா பிரீமியர் லீக் போட்டிகள் இந்த மாதம் 29 ம் திகதி ஆரம்பமாகும் என்று ஸ்ரீ லங்கா கிரிக்கெட் முன்னர் அறிவித்திருந்தது.
ஆயினும் இப்போது மீண்டும் ஒத்திவைக்கப்பட வேண்டிய நிலைமை இருப்பதாக போட்டி ஏற்பாட்டுக்கு குழு தெரியப்படுத்தியுள்ளது. வெளிநாட்டு வீரர்களின் பங்குபற்றுதல் இன்மையே இந்த தொடர் மீண்டும் ஒத்திவைக்கப்பட காரணமாக சொல்லப்படுகின்றது.
அவுஸ்திரேலிய- மேற்கிந்திய தீவுகள், பங்களாதேஷ் -சிம்பாவே தொடர் மற்றும் காஷ்மீர் பிரீமியர் லீக் போட்டிகள் போட்டிகள் என்பன குறித்த காலப்ப்குதியில் இடம்பெறுவதால் வெளிநாட்டு வீரர்களால் பங்கேற்க முடியாதுள்ளது.
இதனைக் கருத்திற்கொண்டு இந்த போட்டிகள் நவம்பர் 19 முதல் டிசம்பர் 12 வரை இடம்பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நீண்டகால இழுபறி நிலைமைகளுக்கு பின் வெற்றிகரமாக கடந்தாண்டு லங்கா பிரீமியர் லீக் போட்டிகள் இடம்பெற்றிருந்தன. ஆயினும் இப்போதைய திடீர் நெருக்கடி நிலைமை காரணமாக இலங்கையின் உலக கிண்ண அணியை தேர்வு செய்வதில் தேர்வாளர்களுக்கு சிக்கல் வரப்போகிறது.
இந்திய தொடரின் 3 T20 போட்டிகளை தவிர, இலங்கை அணிக்கு வேறு போட்டிகள் எதுவும் இல்லையென்பதும், லங்கா பிரீமியர் லீக் தள்ளிப்போவதும் இளம் அணியை தேர்வு செய்வதில் சிக்கல் நிலைமை வரப்போகிறது.
உலக T20 போட்டிகள் ஒக்டோபர் , நவம்பர் மாதங்களில் வரவிருக்கின்றது, ஆனால் லங்கா பிரீமியர் லீக் போட்டிகள் உலக கிண்ணத்துக்கு பின்னர்தான் நடைபெறப்போகின்றமை இங்கே சுட்டிக்காட்டத்தக்கது.