மீண்டும் யாழ் அணிக்கு அதிர்ச்சி கொடுத்த காலி , இறுதிப் போட்டிக்குள் நழைந்தது ..!

 குசல் மெண்டிஸ் மற்றும் தனுஷ்க குணதிலகவின் 121 ஓட்டங்கள் இணைப்பாட்டம், LPL போட்டி வரலாற்றில் எந்தவொரு விக்கெட்டுக்கான அதிகூடிய ஸ்கோரானது, இன்றைய காலி மற்றும் யாழ்ப்பாண கிங்ஸ் தகுதிச் சுற்றின் முதல் போட்டியில் அபாரமாக யாழ் அணியை வீழ்த்திய கோல் கிளாடியேட்டர்ஸ் அணி, 23ம் தேதி நடக்கும் LPL இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.

கிளாடியேட்டர்ஸ் அணிக்கெதிராக யாழ் கிங்ஸ் அணி பெறும் தொடர்ச்சியான மூன்றாவது தோல்வி இதுவாகும். மேலும் எலிமினேட்டர் போட்டியில் வெற்றி பெற்ற தம்புள்ளை ஜெயண்ட்ஸ் அணியை யாழ் அணி வரும் 21 ம் திகதி 2 வது தகுதிப் போட்டியில் எதிர்கொள்கிறது. வரும் 21ம் தேதி நடைபெற உள்ள இப்போட்டியில் வெற்றி பெறும் அணி, 23ம் தேதி கோல் கிளாடியேட்டர்ஸ் அணிக்கு எதிரான இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் என்பதும் முக்கியமானது.

பலம் வாய்ந்த கிளாடியேட்டர் பந்துவீச்சாளர்களால் இன்றைய முக்கிய போட்டியில் யாழ் கிங்ஸ் அணி 16.5 ஓவர்களில் 124 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

சேஸிங்கில் அவிஷ்க பெர்னாண்டோ முதல் பந்தில் அபார சிக்ஸர் அடித்தார் ஆனால் அடுத்த பந்தில் அமீர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். யாழ்ப்பாண அணியின் பலமான துடுப்பாட்ட வரிசை இருந்தபோதிலும், ரமானுல்லா குர்பாஸ் மற்றும் 7 ஆம் இலக்க துடுப்பாட்ட வீரர் வனிந்து ஹசரங்க ஆகியோரைத் தவிர எந்த துடுப்பாட்ட வீரரையும் 10 ஓட்டங்களை எட்டுவதற்கு கிளாடியேட்டர்ஸ் பந்துவீச்சாளர்கள் அனுமதிக்கவில்லை.

37 பந்துகளை எதிர்கொண்ட குர்பாஸ் 3 சிக்ஸர்கள் மற்றும் 4 பவுண்டரிகளுடன் 59 ரன்கள் எடுத்திருந்த நிலையில் துஷார பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். லசித் மலிங்கவின் பந்து வீச்சு சாயலில் பந்துவீசிய நுவான் துஷார, ஆரம்பத்திலேயே பெறுமதிமிக்க துடுப்பாட்ட வீரரான டொம் காலர்-காட்மோரின் (04) விக்கெட்டை வீழ்த்தினார்.

துஷார 4 ஓவர்களில் 13 ரன்கள் மட்டுமே கொடுத்து 5 விக்கட்களை வீழ்த்தினார். இதுவே இதுவரை நடந்த எல்பிஎல் போட்டிகளில் பந்துவீச்சாளர் ஒருவர் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்திய  மூன்றாவது முறையாக இது அமைந்தது.

போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற திசரவின் அழைப்பின் பேரில், துடுப்பாட வந்த குணதிலக மற்றும் மெண்டிஸ் முதல் முறையாக 6 ஓவர்களில் 61 ரன்கள் சேர்த்தனர். அதோடு நிற்காமல முதல் விக்கெட் பார்ட்னர்ஷிப்பில் 66 பந்துகளில் 100 ரன்களை கடந்தனர். இருவரும் முதல் விக்கெட்டுக்கு 80 பந்துகளில் 121 ரன்கள் சேர்த்தனர். போட்டி வரலாற்றில் எந்த விக்கெட்டுக்கும் அதிக ரன்கள் எடுத்த பார்ட்னர்ஷிப்பாக இது பதிவு செய்யப்பட்டது. இதற்கு முன்னர் கொழும்பு ஸ்டார்ஸ் அணிக்கு எதிராக 110 ஓட்டங்களை டொம் காலர்-காட்மோர் மற்றும் உபுல் தரங்கா ஆகியோர் இணைந்து சாதனை படைத்திருந்தனர்.

தொடக்க ஆட்டக்காரர்கள் இருவரில் குணதிலக முதலில் 50 ரன்களைக் கடந்தார். இதற்காக அவர் 34 பந்துகளை செலவிட்டார். குணதிலக, ஷோயப் மாலிக்கின் பந்தில் ஒரு பெரிய சிக்சருடன் தனது முதல் அரை சதத்தைப் பெற்றார், பின்னர் மெண்டிஸ் தனது அரை சதத்தைப் பூர்த்தி செய்தார். குணதிலக 42 பந்துகளில் 6 சிக்ஸர்கள் மற்றும் 6 பவுண்டரிகளுடன் 55 ரன்கள் எடுத்தார்.

19வது ஓவரில் 53 பந்துகளில் 85 ரன்கள் குவித்த மெண்டிஸ் நான்கு சிக்ஸர்கள் மற்றும் 7 பவுண்டரிகளுடன் ஆட்டமிழந்தார், இன்றைய ஓட்டக குவிப்பு மூலமாக 9 போட்டிகளில் விளையாடியுள்ள மெண்டிஸ் துடுப்பாட்ட சராசரி 150.00 ஆக மொத்தம் 288 ரன்கள் தொடரில் எடுத்துள்ளார்.

 கிளாடியேட்டர்ஸ் 200 ரன்களை எளிதில் கடக்க போராடினாலும் வனிந்து ஹசரங்க 15ஆவது ஓவரை 7 ஓட்டங்களுக்கும், 17ஆவது ஓவரை 8 ஓட்டங்களுக்கும் மட்டுப்படுத்தினார்.

7 பந்துகளில் 12 ரன்கள் எடுத்து மூன்றாவது இடத்தில் களமிறங்கிய அன்வர் அலி மற்றும் கேப்டன் பானுகா ராஜபக்ச ஆகியோர் இறுதி ஓவரில் வஹாப் ரியாஸுக்கு எதிராக அடுத்தடுத்து 2 சிக்சர்கள் அடித்து ஸ்கோர்போர்டை 15 பந்துகளில் 25 ஆக உயர்த்தினர். சிறந்த பந்துவீச்சாளர்களான மகேஷ் தீக்ஷன மற்றும் வனிந்து ஹசரங்க ஆகியோருக்கு எதிராக விக்கெட்டுகளை வீழ்த்தாமல் பார்த்துக் கொண்ட கிளாடியேட்டர்ஸ் அந்த 8 ஓவர்களில் 67 ரன்களை பெற முடிந்தது. பந்து வீச்சில் திசர பெரேரா மற்றும் வஹாப் ரியாஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், சுரங்க லக்மல் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

ஆட்ட நாயகன் – குசல் மெண்டிஸ்

போட்டி சுருக்கம்

கோல் கிளாடியேட்டர்ஸ் 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 188 – (குசல் மெண்டிஸ் 85, தனுஷ்க குணதிலக 55, பானுகா ராஜபக்ச 25, அன்வர் அலி 12, வஹாப் ரியாஸ் 39/2, திசர பெரேரா 36/2, சுரங்க லக்மல் 29/1).

யாழ் கிங்ஸ் 16.5 ஓவரில் 124 ரன்களுக்கு ஆல் அவுட் – (ரமனுல்லா குர்பாஸ் 59, வனிந்து ஹசரங்க 29, நுவான் துஷார 13/5, இசுரு உதான 19/1, புலின தரங்கா 13/1, அன்வர் அலி 03/1).