பங்களாதேஷ் அணியுடன் நாளை இடம்பெறவுள்ள முதல் போட்டிக்கான இலங்கை அணியின் விபரம் வெளியாகியது.
பங்களாதேஷ் கிரிக்கெட் சுற்றுலாவை மேற்கொண்டிருக்கும் இலங்கைக்கும் பங்களாதேஷ் அணிக்கும் இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட தொடரின் முதலாவது போட்டி நாளை பகல் டாக்கா மைதானத்தில் இடம்பெறவுள்ளது.
இந்த போட்டியில் இலங்கை அணி சார்பில் தலைவராக குசல் பெரேராவும் உதவித் தலைவராக குசல் மென்டிஷும் விளையாடவுள்ளனர், ஆயினும் மீதமான 9 பேர் எவ்வாறு அணியில் இடம் பிடிக்கப் போகிறார்கள் என்ற கேள்வி ரசிகர்களுக்கு பெருமளவில் இருக்கிறது.
இன்று இடம் பெற்றிருக்கின்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இலங்கை கிரிக்கெட் அணியின் புதிய தலைவரான குசல் பெரேரா நாளைய இலங்கை அணி எவ்வாறு இருக்கும் என்ற விபரங்களை உத்தேசரீதியாக வெளியிட்டிருக்கிறார்.
அதனடிப்படையில் நாளை 2 வேகப்பந்து வீச்சாளர்களும், இரண்டு பிரதான சுழற்பந்து வீச்சாளர்களும் விளையாடவுள்ளனர், அதேநேரத்தில் பந்துவீச்சு செய்யக்கூடிய ஒரு சகலதுறை ஆட்டக்காரர் விளையாட இருக்கிறார் என்கிற செய்தியையும் வெளியிட்டிருக்கிறார்.
இதனடிப்படையில் வேகப்பந்து வீச்சாளர்களாக யார் வரப்போகிறார்கள், சுழற்பந்து வீச்சாளர்களுக்கு யார் வரப்போகிறார்கள், துடுப்பாட்ட வீரர்களாக யார் வரப்போகிறார்கள் என்று கேள்வி ரசிகர்களுக்கு வந்திருக்கிறது.
இந்த முதலாவது ஒருநாள் போட்டிக்கு முன்னதாக நேற்று இடம்பெற்ற பயிற்சிப் போட்டிகளில் அதிகூடிய 88 ஓட்டங்களை பெற்றுக் கொண்டிருக்கும் டிக்வெல்லவுக்கு அணியில் வாய்ப்பு கிடைக்குமா எனும் எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் காணப்படுகிறது.
நாளை பகல் 11.30 அளவில் போட்டி இலங்கையின் தேசிய தொலைக்காட்சி ஊடாக (ஐ அலைவரிசை) ரசிகர்கள் காணக்கூடியதாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.