முதல் போட்டியில் இருந்து விலகிய மொயின் அலி-சென்னை அணிக்கு புதிய தலைவலி…!

முதல் போட்டியில் இருந்து விலகிய மொயின் அலி

ஐபிஎல் தொடர் வரும் சனிக்கிழமை முதல் கோலாகலமாக தொடங்க உள்ளது. 10 அணிகள் பங்கேற்கும் இந்த தொடரில் பலர் வீரர்கள் விளையாட காத்திருக்கின்றனர். ஒட்டுமொத்த தெளிகேட் விளக்கமும் எதிர்நோக்கியிருக்கும் இந்த தொடரில் தங்களது திறமையை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர பல நாட்டு வீரர்களும் தயாராக இருக்கின்றனர். ஐபிஎல் தொடர் ஆரம்பித்த காலத்திலிருந்தே விளையாடி வரும் முக்கியமான அணிகளில் ஒன்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. கடந்த 2021 ஆம் ஆண்டு நடந்த ஐபிஎல் தொடரின் சாம்பியன் பட்டத்தை இந்த அணி தட்டி சென்றது.

கடந்த ஆண்டு சென்னை அணி சாம்பியன் பட்டத்தை வெல்ல முக்கிய காரணமாக இருந்தவர் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ஆல்ரவுண்டர் மொயீன் அலி. முக்கியமான நேரங்களில் இவரது அதிரடி பேட்டிங் மூலமாக சென்னை அணி பல வெற்றிகளைப் பெற்றது. இதன் காரணமாக இந்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கு முன்னதாக சென்னை அணி இவரை தக்கவைத்துக் கொண்டது. ஐபிஎல் தொடர் தொடங்க ஒரு வாரத்திற்கும் குறைவான காலமே உள்ள போதும் இப்போது வரை இவர் அணியில் இணையாத காரணத்தினால் ரசிகர்கள் கவலை கொண்டனர். தற்போது இவர் ஏன் இன்னும் அணியுடன் இணையவில்லை என்னும் காரணம் வெளியாகியுள்ளது.

கடந்த பிப்ரவரி 28ம் தேதியே இவர் தனது விசாவுக்காக விண்ணப்பித்த தாகவும் ஆனால் 20 நாட்கள் ஆன பிறகும் தற்போது வரை அவருக்கு விசா கிடைக்கவில்லை என்றும் சென்னை அணியின் சிஇஓ காசி விசுவநாதன் கூறியுள்ளார். விரைவில் அவருக்கு விசா கிடைத்துவிடும் என்றும் பிசிசிஐ அமைப்பும் இந்த விஷயத்தில் தங்களுக்கு உதவி வருவதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும் மொயீன் அலி அடிக்கடி இந்தியா வந்துள்ள போதும் அவருக்கு ஏன் இன்னமும் விசா கிடைக்கவில்லை என்பது தெரியவில்லை என்றும் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

சென்னை அணியின் மொயீன் அலியுடன் சேர்த்து குஜராத் அணியின் பயிற்சியாளர்களுள் ஒருவரான அப்துல் நயீமும் இதே பிரச்சனையை சந்தித்து வருவதாக கூறப்படுகிறது. இந்தப் பிரச்சினையும் விரைவில் முடிந்து விடும் என்று குஜராத் அணியைச் சேர்ந்த முக்கியஸ்தர் ஒருவர் தெரிவித்துள்ளார். மொயின் அலி சென்னை அணியில் இணைய தாமதமானால் முதல் போட்டியில் அவர் பங்கேற்பது சந்தேகம் தான் என்று ரசிகர்கள் தங்களது கவலைகளை சமூக வலைத்தளங்களில் தெரிவித்து வருகின்றனர்.

#Abdh