மும்பையை வீழ்த்தி பிளே-ஆஃப் சுற்று வாய்ப்புக்கு செக் வைத்தது டெல்லி கேப்பிடல்ஸ்

மும்பையை வீழ்த்தி பிளே-ஆஃப் சுற்று வாய்ப்புக்கு செக் வைத்தது டெல்லி கேப்பிடல்ஸ்

மந்தமான ஆடுகளத்தில் ஷ்ரேயாஸ் அய்யர் நிலைத்து நின்று பேட்டிங் செய்ய, டெல்லி கேப்பிடல்ஸ் மும்பை இந்தியன்ஸ் அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

மும்பை இந்தியன்ஸ்- டெல்லி கேப்பிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐ.பி.எல். 2021 தொடரின் 46-வது லீக் ஆட்டம் ஷார்ஜாவில் நடைபெற்றது. டாஸ் வென்ற டெல்லி கேப்பிடல்ஸ் பந்து வீச்சை தேர்வு செய்தது. பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியால் 129 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது. டெல்லி அணியில் அக்சார் பட்டேல், அவேஷ் கான் ஆகியோர் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.

பின்னர 130 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி கேப்பிடல்ஸ் அணி களம் இறங்கியது. மும்பை இந்தியன்ஸ் அணியின் பந்து வீச்சாளர்களும் நேர்த்தியான வகையில் பந்து வீசினர். இதனால் டெல்லி கேப்பிடல்ஸ் தொடக்க வீரர்கள் பிரித்வி ஷா (6), தவான் (6), ஸ்டீவ் ஸ்மித் (9) அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

அதன்பின் வந்த கேப்டன் ரிஷாப் பண்ட் 22 பந்தில் 26 ரன்கள் எடுத்து வெளியேறினார். அடுத்து வந்த ஷ்ரேயாஸ் அய்யர் நங்கூரம் பாய்ச்சி நிற்கும் கப்பல் போல் நிலைத்து நின்று ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அக்சார் பட்டேல் 9 ரன்னிலும் வெளியேறினாலும் ஹெட்மையர் 8 பந்தில் 15 ரன்கள் எடுத்து ஸ்கோர் உயர்வுக்கு சற்று காரணமாக இருந்தார்.

டெல்லி கேப்பிடல்ஸ் 13.1 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 93 ரன்கள் எடுத்திற்கும்போது ஷ்ரேயாஸ் அய்யர் உடன் அஷ்வின் ஜோடி சேர்ந்தார். அப்போது டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு 41 பந்தில் 37 ரன்கள் தேவைப்பட்டது. இந்த ஜோடி பிரிந்தால் மும்பை இந்தியன்ஸ் அணி, ஆட்டத்தை தன்வசமாக்கிவிடும் நிலை இருந்தது.

ஆனால், அஷ்வின் ஒருபக்கம் பந்துக்கு பந்து ரன்கள் அடிக்க, மறுபக்கம் ஷ்ரேயாஸ் அய்யர் தடுப்பாட்டத்தில் ஈடுபட்டார். இதனால் டெல்லி கேப்பிடல்ஸ் அணி வெற்றி நோக்கி சென்றது.

கடைசி ஓவரில் நான்கு ரன் தேவைப்பட்டது, முதல் பந்தை அஷ்வின் சிக்சருக்கு விளாசினார். இதனால் டெல்லி கேப்பிடல்ஸ் 19.1 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 132 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

ஷ்ரேயாஸ் அய்யர் 33 பந்தில் 33 ரன்கள் எடுத்தும், அஷ்வின் 21 பந்தில் 20 எடுத்தும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

#AJ ABDH