மும்பை இந்தியன்ஸ் தோல்விகளுக்கு யார் காரணம்- கிரேம் ஸ்வான் தெளிவான பதில்..!

மும்பை இந்தியன்ஸ் அணியின் தொடர் தோல்விக்கு கேப்டன் ரோகித் சர்மா காரணமில்லை என இங்கிலாந்து முன்னாள் கிரிக்கெட் வீரர் தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் தொடரின் 15-வது சீசன் இந்தியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை 23 லீக் போட்டிகள் முடிவடைந்துள்ளன. அதில் 4 போட்டிகளில் விளையாடி 3 வெற்றி பெற்று 6 புள்ளிகளுடன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலிடத்தில் உள்ளது. அதேபோல் விளையாடிய 5 போட்டிகளிலும் தோல்வி அடைந்து மும்பை இந்தியன்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் இருந்து வருகிறது.

இதனால் மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா மீது கடுமையான விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகிறது. முன்னாள் வீரர்கள் பலரும் ரோகித் சர்மாவின் பேட்டிங் மற்றும் கேப்டன்ஷி குறித்து விமர்சனங்களை வைத்து வருகின்றனர்.

இந்த நிலையில் இங்கிலாந்து அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் கிரேம் ஸ்வான் ரோகித் சர்மாவிற்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார். அதில், ‘மும்பை அணியின் தொடர் தோல்விக்கு ரோகித் சர்மா தான் காரணம் என யாரும் நினைக்க வேண்டாம். அவரது கேப்டன்ஷி கேள்விக்குறியாகப்படுவதில் எனக்கு துளியும் விருப்பமில்லை’ என ரோகித் சர்மாவுக்கு ஆதரவாக கிரேம் ஸ்வான் கருத்து தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு போட்டியிலும் வெற்றி பெறும் நிலையிலிருந்து ஏதாவது ஒரு வீரர் செய்யும் சின்ன தவறால் மும்பை அணி தொடர்ந்து தோல்வி பெற்று வருகிறது. இது தொடர்ந்தால் மும்பை அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறுவது கேள்விக்குறியாகிவிடும். அதனால் அந்த அணி மீண்டும் வருமா என ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

#Abdh